முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாவலாசிரியரின் குறிப்புகள் - 14


 

நாவலென்பதை நமது அகத்தின் - இன்னும் துல்லியமாகக் கூறுவதானால் நமது பிரக்ஞையின் - உருவகம் என்று அழைக்கலாம். நாவலில் வரும் கதையமைப்பு, களம், காட்சிகள், பாத்திரங்கள், கருத்துகள் நேரடியாகவே அவ்வாறு நம் மனத்தில் வந்து விழுவதில்லை. பிலிப் ராத்தின்மார்புநாவலில் நாயகன் ஒரு பெரிய சைஸ் முலையாகி விடுகிறான். அடுத்து அவனுக்கு என்னவெல்லாம் இடர்கள், அபத்தமான சந்தர்பங்கள் ஏற்படுகின்றன என்பதே அந்நாவலின் கதையமைப்பு. நவீன நகரயமான சூழலே அதன் களம். அந்நியப்பட்ட தனிமனிதர்களே பாத்திரங்கள். இதில் வரும் கருத்துகள் நம் தாராளவாத முதலாளித்துவ சமூகத்தில் உள்ள தனிமை, சுதந்திரமின்மை, அர்த்தமின்மை, வெறுமை, அச்சம், புலனின்பத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தும் போக்கு ஆகியவை. நாம் நாவலைப் படிக்கையில் நேரடியாகவோ நிஜமாகவோ நம் புலனுலகில் இவை தோன்றுவதில்லை. ஒரு மிகப்பெரிய முலையாகிவிட்ட நாயகன் நம் வாசிப்பில் முலையல்ல. அவன் என் வாசிப்பில் தனிமனிதனின் அபத்தமான அந்தரங்கமாகத் தென்படலாம்அல்லது வேறுவிதங்களில் அது தோன்றும் காட்சியைப் பொறுத்துத் தெரியலாம். பாத்திரங்கள் இன்ன இடத்தில் நேரத்தில் இப்படித் தோன்றி இவ்வாறு செய்து அதன் விளைவாக இன்ன இடத்தைச் சென்று அடைவார்கள் எனும் கதைத் திட்டமிடலும் அவற்றின் அகப்பயணமாக நமக்குத் தோன்றக் கூடும். இக்காரணங்களினாலே நம்மால் ஒரு நாவலைச் சுலபத்தில் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை. அதற்கு ஒரு முக்கியமான காரணம் அந்த நாவலில் வரும் மேற்சொன்ன பகுதிகள் எழுத்தாளரின், வாசகரின் பிரக்ஞையின் அடுக்கடுக்கான அமைப்புகளையே நமக்குக் குறிப்புணர்த்தக் கூடும். படிக்கப் படிக்க ஒரு நாவலின் அகக்கட்டமைப்பு நம் அகக்கட்டமைப்புடன் பொருந்தி அதை உருமாற்றுவதை நாம் உணர முடியும்

பிரக்ஞையை நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு அவசியமானதாகிறது - பிரக்ஞை என்பது மனத்தின் தன்னுணர்வு அல்ல. அது ஒரு மனம் தன் சூழலுடனும் நேரத்துடனும் உறவாடும்போது தன் நினைவுகளாலும் கருத்துக்களாலும் எண்ணங்களாலும் உணர்வுகளாலும் பல படிவங்களையும் நிலைகளையும் உருவாக்கி தன்னுற்பத்தி பண்ணுவதாகும். தன்னைத்தானே கட்டமைக்கிற ஒரு கண்ணாடி மாளிகையை நம் பிரக்ஞையுடன் ஒப்பிடலாம். உலகில் அசைவனவும் தோன்றுவனவும் அந்த மாளிகையிலும் பிரபலித்துத் தெரியும். பிரக்ஞை மொழியாலானது. ஆனால் அது நிரந்தரமான அமைப்பும் அல்ல. நான் இப்போது இக்கணம் எப்படி என்னைக் குறித்து உணர்கிறேன் என்பது நான் என்னை எப்படிப் பார்க்கிறேன் (தன்னுணர்வு), பார்க்க விரும்புகிறேன் (விழுமியம் / நம்பிக்கை), என் பழைய நினைவுகள், உடனுக்குடன் கிடைக்கும் அனுபவங்கள், நான் இருக்கும் சூழலில் இருந்து கிடைக்கும் தூண்டுதல்கள் ஆகியவற்றில் இருந்தே மலர்கிறது. என்னுடைய தன்னுணர்வை மட்டுமே எடுத்துக் கொண்டாலும் அதன் பின்னால் என்னுடைய அறிவு, புரிதல், எண்ணங்கள், நினைவுகள், அழகியல் தேர்வு, பண்பாடு, மொழிமொழியின் நினைவுகள், எல்லாவற்றை அள்ளியணைத்து ஒன்றாக்குகிற என் கற்பனை எனப் பலவும் உண்டு. இப்படி ஒவ்வொன்றும் மற்றொன்றைப் பிரதிபலித்துப் பின்னால் சென்று கொண்டே இருக்கிறது. இதை அப்படியே ஒரு நாவலுடன் - நாவலின் குறியீடுகள், உருவகங்கள், தீவிரமான உணர்ச்சிகள், பாத்திர அமைப்பு, பாத்திரங்களின் செயல்கள், அவற்றின் அடுக்கு, அந்த அடுக்கு ஏற்படுத்தும் தோற்றம், உரையாடல்கள் ஆகியவற்றுடன் - ஒப்பிடலாம். ஒரு நாவலுக்குள் இவை ஒன்றையொன்று பிரதிபலித்தும் குறிப்புணர்த்தியும் தோன்றுகின்றன. “குற்றமும் தண்டனையும்நாவலில் ரஸ்கோல்நிக்கோவ் ஜுர வேகத்தில் தன் அறைக்குள் முன்னும் பின்னுமாக நடக்கும்போது நமக்கு ஊசல் நினைவுக்கு வருகிறது. அவன் மனதுக்குள் ஊசலாடுகிறான் எனத் தோன்றுகிறது. இப்போது அவன் நடப்பது ஊடலாடும் தோற்றத்தைக் குறிப்புணர்த்தி அந்த ஊசலாட்டம் அவன் அகத்தின் சஞ்சலத்தைக் குறிப்புணர்த்துகிறது. அவன் அகத்தின் அலைபாய்ச்சல், ஓய்வற்ற அலைப்பாய்ச்சல் எதைக் குறிப்புணர்த்துகிறது? அவன் இயல்பையா, அவன் ஆன்மாவையா, அவனது அதுவரையிலான வாழ்வையா? இது நாவலின் ஒரு கருப்பொருள் என்றால் அக்கருப்பொருள் ஒரு கருத்தா குறியீடா? அக்கருத்து எனும் குறியீடு அவனது கதைக்களத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. அது அவன் கதைக்களத்துக்கு ஒரு குறியீட்டுத்தனத்தை அளிக்கிறது. ஒட்டுமொத்த நாவலையும் ரஸ்கோல்நிக்கோவின் அகமாக, அகத்தின் குறியீடாகக் கருத முடியுமெனில் அவன் அகமே ஒரு குறியீடுதானே? எனில் அவன் அந்நாவலுக்குள் எதை நிகழ்த்துகிறான், நான் அதில் எதைக் காண்கிறோம்? இப்படி நாவலின் அமைப்பே ஒன்றை மற்றொன்றில் இருந்து பிரிக்க முடியாதபடி அது இருக்கிறது.

நான் என்னுடைய நாவலின் பாத்திரம் ஒன்றின் வினோதச் செயலொன்றை நம்பும்படியாக வர்ணிக்க வேண்டியிருந்தது. ஆனால் நான் அதுவரை உருவாக்கியிருந்த கதைக்களம், கதைமொழிக்குள் அது பொருத்தமாக, நம்பகத்தன்மையுடன் அமையவில்லை. ஆகையால் நான் பின்னதை மாற்ற வேண்டி வந்தது. அதாவது ஒரு கதாபாத்திரத்துக்காக கதைக்களத்தையும் கதைமொழியையும் மாற்றினேன் எனப் பொருளில்லை. பின்னவை என் கதாபாத்திரத்தின் அகப்பயணத்தைக் குறிப்புணர்த்தும் உருவகங்கள் மட்டுமே. என் பாத்திரத்தின் பயணம் சரிவர நடைபெறவில்லை என்றால் நான் அதற்கான உருவகங்களையே மாற்ற வேண்டும் என நினைத்தேன். அடுத்து நான் இதைச் செய்தபோதுதான் என் பாத்திரத்தின் அகவுலகின் பல நெருக்கடிகளும் உண்மையான சிக்கல்களும் புரிய வந்தன. (என்னாலே அதற்கு ஒரு சுலபமான தீர்வை இதுவரைக்கும் கண்டறிய இயலவில்லை.) இதன்பிறகே நான் கதைசொல்லியான மற்றொரு பாத்திரத்தின் உலகுக்குப் போக வேண்டி வந்தது. அவனிடமும் நான் பல மாற்றங்களைச் செய்தேன். இன்னும் நான் அவனை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்றாலும் என் கதையுலகின் குறியீட்டுத்தன்மையைக் கொண்டு என்னால் ஒருநாள் அவனது ஆழத்துக்குள் போக முடியுமென ஒரு நம்பிக்கை உள்ளது. சரி, நான் சொல்ல வந்த விசயத்துக்கு இப்போது வருகிறேன் - நேற்று நான் என் தனிப்பட்ட வாழ்வு குறித்த கேள்விகளை எனக்குள் விசாரித்து அலசி ஆராய்ந்து கொண்டிருந்தேன். செய்யறிவிடமும் அதைக் குறித்துக் கேட்டுக் குடைந்து கொண்டிருந்தேன். நான் ஒரு பொருட்டாகவே எப்போதும் கருதாத சில கேள்விகள் ஏன் நேற்று திடீரென பேருருவெடுத்து என்னை ஆட்கொண்டன? நான் ஏன் உணர்வுரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு கலங்கிப் போய் நின்றிருந்தேன்? இரவு தூங்கப் போகும்போது எனக்குக் காரணம் சட்டெனப் புலப்பட்டது. நான் என் நாவலின் கதைசொல்லிக்கு நடப்பதாக எழுதியிருந்த ஒரு மிகுபுனைவுக் காட்சி என்னை வெகுவாக அசைத்து விட்டது. ஏனென்றால் அக்காட்சி என் வாழ்க்கையில் நேரடியாகச் சம்மந்தமுள்ளது என்பதைவிட அது சுட்டுகிற குறியீட்டுப்பொருள் எனக்கு மிகவும் அவசியமானது. ஆனால் நான் அதைக் குறித்து என் நேரடி வாழ்வில் வருத்தம் கொள்ளும்போது அதன் குறியீட்டுப் பொருளைக் கருதவில்லை. என் நாவலில் அது மிகுகற்பனையான நிகழ்வாகும்போது நடப்புலகில் நான் அதைக் குறித்து நேரடியாகவும் பகுத்தறிவு சார்ந்துமே கவலைப்படுகிறேன். மிகுபுனைவு மொழியில் அது ஒரு குறியீடாகவும் நடப்பு மொழியில் மற்றொரு குறியீடாகவும் உள்ளது. என் நடப்புலகின் சாத்தியங்களுக்குள் என்னால் அவ்வாறு மட்டுமே அதைக் கையாள முடியும். அதேநேரத்தில், என் கதைக்குள் நான் உருவாக்கும் குறியீட்டு உலகம் என் நடப்புலகையும் அவ்வாறு மாற்றப் பார்க்கிறது. அதனாலே மிச்ச நேரங்களில் மிகச்சாதாரணமாகக் கருதிக் கடக்கும் ஒன்றை சட்டென ஒளிகொண்டு துலங்க வைக்கிறது. அதை நோக்கி என் கவனத்தை ஈர்க்கிறது.

 இந்த தற்பண்பு சுட்டும் (self-referential) தன்மையானது நாவலின் தனித்துவமான சுபாவம் என்று தோன்றுகிறது. மனிதப் பிரக்ஞைக்கு ஈடான குறியீட்டு உலகம் ஒன்றை அது மொழிக்குள் கட்டமைக்கிறது, அது பழகி அதில் திளைத்தபின்னர் அதில் இருந்து வரும் குறியீடு நமது மனதில் இருந்து எழுந்து வரும் அதே போன்றதொரு அல்லது அதுவேயான குறியீட்டுடன் உறவாடி ஒரு பாலத்தை படைப்புலகப் பிரக்ஞைக்கும் (படைப்புலகமே பிரக்ஞைதான் என்றாலும் ஒரு வசதிக்காகச் சொல்கிறேன்) நம் பிரக்ஞைக்கும் இடையில் அது ஏற்படுத்துகிறது. அதன்பிறகு படைப்புலகின் நீர்மை நம் நடப்புலகிலும் பரவத் தொடங்குகிறது. மழையின் போது சுவர்கள் ஈரமாகி அதை நம்மால் தொட்டுணர முடிவதைப் போல.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...