அடுத்தடுத்த மரணச் செய்திகள், விபத்துச் செய்திகளால் மனம் நிலைகுலைந்து விட்டது. கலைந்த காகிதங்களை அடுக்குவதைப் போல ஒருமுகப்படுத்த தத்துவ வாசிப்பு நல்லது என்று நினைத்து இப்புத்தகத்தை எடுத்தேன். ரொம்ப ரொம்ப எளிமையான புத்தகம். ஓரளவுக்கு மேற்கத்திய தத்துவத்தில் பிளேட்டோ, இமானுவல் காண்ட், ஷோன்னரின் அகவிசை (will), நீட்சே, ஹைடெக்கரின் சில அடிப்படையான கருத்துக்களை குறித்த பரிச்சயம் இருந்தால் மிகச்சுலபமாகப் படிக்கலாம். இப்படி எளிமையாக எழுதுவது கடினம். ஜூலியன் யங் பாராட்டத்தக்கவர்.
நீட்சேயையும் ஹைடெக்கரையும் படிக்க விரும்புவோர் ஷோப்பன்ஹெரைத் தெரிந்து கொள்வது வசதியானது. இன்னும் சொல்லப்போனால் பகவத் கீதையைப் படிக்க விரும்புவோர் ஷோப்பன்ஹெரை (அல்லது ஹைடெக்கரை) அறிமுகம் பெற்று கீதையிடம் வந்தால் புதிய கண்ணோட்டம், ஆழமான பார்வை கிடைக்கும்.
மொத்த நூலையும் வேகமாக ஒரு வாசிப்பு விட்டுவிட்டு ஒரு யுடியூப் நேரலையில் அறிமுகப்படுத்துகிறேன். ஏற்கனவே ஷோப்பன்ஹெரின் "உலகம் ஒரு அகவிசையாகவும் கருத்துருவமாகவும்" எனும் நூலின் சில பகுதிகளைப் படித்திருக்கிறேன். எதிர்காலத்தில் அதை முழுமையாகப் படிக்க இயன்றால் என் குறிப்புகளைப் பகிர்கிறேன்.
Comments