முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சறுக்கல்



 இது சும்மா ஒரு கணிப்புதான். எனக்கு ஆரம்பத்தில் விஜய் 7% வாக்குகளைப் பெறுவார் என்று தோன்றியது. இப்போதுள்ள பரபரப்பைப் பார்க்க திமுக மீதுள்ள அதிருப்தி வாக்குகள் அவரிடம் கொஞ்சம் அதிகமாகப் போகும் எனத் தோன்றுகிறது - அதாவது 12-15% உச்சபட்சமாக. அதுவே ஒரு பெரிய சாதனைதான். குறைந்தது 10%.

இதனால் விஜய்க்கு என்ன லாபம் என்பதைவிட திமுகவுக்கும் அதிமுகவுக்கும் என்னவிதமான பாதகங்கள் என்பதையே பலரும் பேசுகிறார்கள். திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட சற்று அதிகம் பெற்று ஆட்சியமைப்பதற்கு இது வழிவகுக்கும். அதாவது ஒரு சற்றே பலவீனமான அரசு அமையும். எதிர்க்கட்சிகள் பலமடையும்.
எப்போதுமே அரசியலில் ஒரு பலத்த குற்றச்சாட்டு வந்தால் அதை மறுக்காமல் பரிசீலிப்பதாக 'நடிக்க' வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும். சுத்தீகரிப்பதாக ஒரு சடங்கில் ஈடுபட வேண்டும். அடுத்து வரும் ஆண்டுகளில் கவனமாக இருக்க வேண்டும். தொடர்ச்சியாக 'ஊழல் எதிர்ப்பு' பற்றிப் பேச வேண்டும். மக்களுக்கு அள்ளிக் கொடுப்பதான பிம்பத்தை உருவாக்க வேண்டும். அப்போதே அரசு தன்னைப் புதுப்பிக்க இயலும். மக்களுக்கு அந்த அரசு மீதான அபிமானம் அப்போது பலமடங்கு அதிகரிக்கும். இந்த முறை திமுக செய்த முக்கியமான தவறு 'செந்தில் பாலாஜி' - ஒன்று அவரை சிறையிலே வைத்திருந்திருக்க வேண்டும். அல்லது அவர் வெளிவந்த பிறகு பதவி கொடுத்திருக்கக் கூடாது. அதேபோல ஓராண்டுக்கு முன்னரே சில அமைச்சர்களைப் பதவி நீக்கி ஊழலைத் தண்டித்ததாகக் காட்டியிருக்க வேண்டும். ஒரு புதிய முகத்தை உருவாக்கி இருக்க வேண்டும். புதிய இளம் அமைச்சர்களின் பிம்ப உருவாக்கத்தில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் எதிர்க்கட்சியினரால் உதயநிதியைத்தான் விமர்சிக்க இயலும். அது திமுகவிற்குச் சாதகமாகவே முடிந்திருக்கும். நான் சொல்வதெல்லாம் வேறு மாநிலங்களில் அரசுகள் செய்வனதாம். ஆனால் திமுக அதைச் செய்யவில்லை.
இன்னும் சொல்லப்போனால் பாஜக அதற்கு மேல் சென்று திமுக தலைவர் குடும்பத்தின்மீது கைவைத்திருந்தால் அது திமுகவிற்கு பெரிய ஒரு ஆற்றலைக் கொடுத்திருக்கும். ஸ்வீப் செய்திருப்பார்கள். ஆனால் திமுக அது ஒரு மிகப்பெரிய ரிஸ்க் என நினைத்துவிட்டது. அது சூதாடத் தயாராகவில்லை. அதுவே இப்போது பாஜகவுடன் திமுகவிற்கு மறைமுக ஒப்பந்தம் உள்ளது என மம்தாவே பேசும் அளவுக்கு இது சென்றுவிட்டது (இது என்னதான் இந்தியா கூட்டணியுடன் உள்ள அவரது கசப்பால் சொல்லப்பட்டதாக இருந்தாலும்). இந்த வரியைத்தான் இப்போது விஜய்யும் தன் பிரச்சாரத்தில் முன்வைக்கிறார். செந்தில் பாலாஜியைத் தாண்டி வேறு யார் மீது அமலாக்கத்துறையும் சி.பி.ஐயும் கைவைக்காதது வினோதமாக திமுகவுக்குப் பாதகமாகிவிட்டது.
இதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியின்போது ஸ்பெக்டிரம் ஊழல் பேசப்பட்டு கனிமொழி, ராஜா கைதானபோதும் திமுக தடுப்பாட்டமே ஆடியது. ஊழல் விசாரணை, கைது நடவடிக்கை என்றால் திமுக கொஞ்சம் தடுமாறிப் போகிறது.
தேர்தல் முடிவுகள் வருமுன்பே தீர்ப்பெழுதி விமர்சிக்க நான் முற்படவில்லை. இன்றைய சூழலை வைத்தே என் கருத்துக்களை எழுதுகிறேன். திமுக தன் வியூகத்தில் சறுக்கிவிட்டது. இல்லாவிட்டால் இத்தேர்தல் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். இப்போது கோமாளிகளுடன் எல்லாம் திமுக மல்லுக்கட்டும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...