முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தலதளபதி கட்சி


 

நான் தமிழ்நாட்டு அரசியலில் நடக்கும் இம்மூன்று விசயங்களை இணைத்துப் பார்க்க விரும்புகிறேன்:

1) தவெக தில்லியில் நடக்கும் இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது.
2) கட்சிக்குள் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் ஆதவ்வின் உறவினருக்கு எதிரான போதை மருந்து கடத்தலை ஒன்றிய அரசு விசாரிப்பதான தகவலை வைத்து பாஜக ஆதரவாளர்கள் தொடர்ந்து ஆதவ்வைத் தாக்குவது; அதையடுத்து மாரிதாஸ் கைதாவது; அதற்கு பாஜக ஆதரவு ஊடகங்கள் பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பது; பாஜக-தவெக மோதலே தமிழ்நாட்டின் பிரதானம் என்பதாக நாடகம் போடுவது.
3) பாஜகவுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் வாக்களித்த 21 எம்.எல்.ஏக்களை மன்னித்துவிட்டதாகவும் தகுதி நீக்கம் தேவையில்லை என்றும் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் அனுப்பி இருப்பது. அதை வைத்து ஊடகச் சந்திப்பில் சட்டமன்ற சபாநாயகர் பிரபாகர் அந்த 21 எம்.எல்.ஏக்களின் ஆதரவு செல்லுபடியாகும், அதில் எப்பிரச்சினையும் இல்லை எனக் கூறியுள்ளது. இதை பாஜகவின் அழுத்தம் இன்றி எடப்பாடி செய்ய வாய்ப்பே இல்லை.
அதாவது தவெக அரசை அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரித்ததை எடப்பாடி ஏற்றுக் கொண்டுள்ளார். தன் எம்.எல்.ஏக்கள் கட்சி மாறி தவெகவுக்குச் சென்றதைக் கூட அவர் மன்னித்து விட்டார். அதாவது தன் எம்.எல்.ஏக்களை தவெக தன் அனுமதியின்றி வாக்களிக்க வைத்ததை, தன் எம்.எல்.ஏக்களை தவெக தலைவர் திருடி தன் கட்சியில் சேர்த்ததைக் கூட அவர் மன்னித்து விட்டார்.
இந்த மூன்று சம்பவங்களுக்குப் பின்னும் பாஜக இருக்கிறது. பாஜகவுக்கும் விஜய்க்கும் அண்மையில் ஏற்பட்ட சமரசமும் உடன்படிக்கையுமே இவை அடுத்தடுத்து நிகழக் காரணம்.
இப்போது எனக்கு சில கேள்விகள் தோன்றுகின்றன:
அதிமுக தவெக ‘கூட்டணியில்’ உள்ளதா? அதாவது எடப்பாடியின் அனுமதியை வேறெப்படி புரிந்து கொள்வது?
இந்த தவெக - பாஜக காதல் உறவு தேர்தலுக்கு முன்பே ஆரம்பித்தது, அதனாலே பாஜக ஆதரவாளர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார்கள். அதனாலே தில்லிக்குச் சென்று மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த பின்னர் அவரால் கட்சிக்குள் தனக்குப் பிடிக்காதவர்களைக் கூட பாஜக ஆதரவுப் பேச்சாளர்களை வைத்து விமர்சித்து நெருக்கடி கொடுக்க முடிகிறது. எடப்பாடியின் ‘மன்னிப்பையும்’ பெற முடிகிறது. ஆரம்பத்தில் ஆட்சி அமைக்க விஜய் குதிரை பேரம் நடத்தியதை ஆளுநர் ரிபப்ளிக் டிவியின் பேட்டியிலே கண்டித்தார். விஜய்யை தொடர்ச்சியாக திருப்பி அனுப்பினார். ஏதோ ஒரு கட்டத்தில் சமரசம் ஏற்பட்ட பின்னர் தவெகவின் 'சோபா' குதிரை பேர விவகாரத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் வெளிப்படையாகவே வைக்கப்பட்ட கண்டனங்களை ஆளுநர் ஆய்வு செய்யவோ அதைக் குறித்துப் பேசவோ நடவடிக்கை எடுக்கவோ இல்லை.
பாஜகவுக்கும் தவெகவுக்கும் இப்படியான உடன்படிக்கை வந்து விட்டதெனில் கம்யூனிஸ்டுகளும் விசிகவும் அதை ஏற்கிறார்களா?
தவெகவுக்கு காங்கிரஸ் தொடர்ந்து ஆதரவு அளிக்குமெனில், பாஜகவின் ஆசியையும் தவெக நாடுகிறது எனில், அது இந்தியா கூட்டணியில் எப்படி இருக்க முடியும்? இப்படி ஒரு கட்சியை நம்பி எப்படி அவர்கள் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்ப்பார்கள்?
எதையும் எப்படியும் செய்யலாம், அந்தந்த சமயத்துக்கு ஏற்றவாறு முடிவை மாற்றலாம் என்பது தவெகவின் பாணி. யாரை எதிர்க்கிறேன், எதை எதற்காக எதிர்க்கிறேன் என்று சொல்லாமல் 'உங்கள் விஜய்க்கு வாக்குப் போடுங்க, தில்லிக்குப் போய் தமிழ்நாட்டுக்காக பேசுறேன்' என்று அவர் சொல்லி பிரச்சாரம் செய்தால் நம்மூர் அறிவாளிகள் அதற்கும் கைதட்டுவார்களா? அல்லது விழித்துக் கொள்வார்களா?
தவெகவினர் ஒருவேளை வென்று நாளை நாடாளுமன்றம் சென்று யாரையும் எதையும் விமர்சிக்காமல் எழுதிக் கொடுக்கப்பட்ட வசனங்களைப் படித்துவிட்டு, ஒவ்வொரு முறையும் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தம் சுயநலத்துக்கு ஏற்ப ஆதரவை வழங்குவார்களா? அதாவது எதிர்க்கவும் மாட்டோம், ஆதரிக்கவும் மாட்டோம், எங்கள் கட்சியின், தலைமையின் தனிப்பட்ட தேவைக்கு ஏற்ப வாக்கெடுப்பின் போது நாடாளுமன்றத்தில் செயல்படுவோம் என்றால் அதனால் தமிழ்நாட்டின் நலன் பாதிக்கப்படாதா?
திடீரென நாங்கள் மதசார்பற்றவர்கள் என்று கூறி காங்கிரஸுடன் நிற்பதாக நாடகம் போட்டுவிட்டு அடுத்தடுத்து நாங்கள் தேசப்பற்றாளர்கள் என்று கூறி பாஜகவுடன் மறைமுகமாக கைகோர்க்க மாட்டார்களா? இந்த இங்கும் அங்கும் அல்லாத அல்லாட்டம் ஒருவிதத்தில் பாஜகவுக்கு சாதகமாகவே முடியும் என நினைக்கிறேன். பாஜகவின் ஆதரவு இருந்தால் மட்டுமே அடுத்தடுத்த இடைத்தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் 'எந்திரம் விஜய்யாக வாக்களிக்கும்'. இது காங்கிரஸின் எதிர்காலத்தை தமிழ்நாட்டில் இருட்டாக்கி விடும். அவர்கள் காங்கிரஸுடனே நின்று பாஜக எதிர்ப்பு வாக்குகளை எந்திரத்தின் துணையுடன் அள்ளிக் கொண்டு நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்.
தவெகவின் இந்த நிலைமாற்றங்கள் ஒரு தடுமாற்றம் அல்ல. அதற்கு எந்த நிலையும் இல்லை என்பதையே இது காட்டுகிறது. அவர்கள் தொடர்ந்து ஆண்டு கமிஷன் அடித்து சம்பாதிக்க விரும்புகிறார்கள். அவர்களுக்கு ஒரு கட்சியாக இருக்க வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு பாஜகவின் 'எந்திர' உதவி தேவை. சந்தானம் ஒரு படத்தில் தல ரசிகர்களிடம் தான் தல ரசிகன் என்றும் விஜய் ரசிகர்களின் தான் விஜய் ரசிகன் என்றும் சொல்லி அடிவாங்குவாரே, அந்த தலதளபதி சலூன் தான் தவெக.
இப்படி எந்தப் பக்கமும் நிற்காததாலே நான் இது கட்சி அல்ல, வெறும் அமைப்பு, அவர்கள் செய்வது ஆட்சியல்ல, ஒரு ஷோ என்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...