முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காலத்தை திருப்புவோம்

 


விமலாதித்த மாமல்லனின் "ஆபீஸ்" நாவலில் ஒரு இடம் வருகிறது. பிரதான பாத்திரம், அதாவது மாமல்லன்தான், தான் எந்த சினிமாவையும் பெரிதாகப் பார்ப்பதில்லை என்கிறார். அவர் அவ்வப்போது திரையரங்குக்குப் போகிறார். ஆனால் தமிழ்ப்படங்களைப் பின்பற்றுவதாக எங்கும் சொல்வதில்லை. அவர் தன் நண்பர்களிடம் உரையாடும்போதும் அங்கு சினிமா வருவதில்லை. வணிக இதழ்கள் மீதும் கடும் எதிர்ப்புணர்வில் இருக்கிறார். அவர்களுக்கும் எனக்கும் எந்த ஓட்டுறவும் இருக்கத் தேவையில்லை, நான் ஏன் அவர்களை மதிக்க வேண்டும் என நினைக்கிறார். அவரது சக எழுத்தாளர்களின் நேர்முகங்களோ புத்தக அறிமுகமோ பிரபல வார இதழ்களில் வரும்போது அவர் அதைப் படித்துவிட்டு கண்டித்து சிறுபத்திரிகைகளில் எழுதுகிறார். சின்னச்சின்ன சமரசங்களில் என்ன தப்பு என நண்பர்கள் அறிவுறுத்தும்போது அவர் சீறுகிறார். அலுவலகத்தில் ஒரு நடிகரின் பெயரைக் குறித்து விவாதம் வரும்போது இவருக்கு அவரை சுத்தமாகத் தெரியவில்லை. அப்படி ஒருவர் இருக்கிறாரா என்று நினைத்துவிட்டு கடந்து போகிறார். இன்றைய சூழலில் இருந்து இதைக் குறித்து சிந்தித்துப் பார்க்கிறேன்.

இன்று சினிமா மக்கள் கலை எனும் இடத்தை இழந்துவிட்டது. அது மக்களுக்கு ஒரு மேலோட்டமான கிளர்ச்சியை, இளைப்பாறலைத் தருகிற அனுபவம். அது இன்று ஒரு மொபைல் விளையாட்டைப் போல எடுக்கப்படுகிறது. அதில் சமகால உலகின் எந்த தடயமும் இருப்பதில்லை. இன்றைய 'வெகுமக்கள்' சினிமாவை நீங்கள் ஆய்வு செய்யவே முடியாது. செய்தால் அது மொபைல் விளையாட்டை ஆய்வு செய்வதைப் போலவே இருக்கும். இன்றைய சினிமா மீது ஒரு அறிவுஜீவியோ ஆய்வாளரோ எழுத்தாளரோ ஆர்வம் காட்ட ஒன்றுமே இல்லை. இன்றைய சினிமா சினிமாவே அல்ல.

இன்று வெகுஜன ஊடகங்களும் அந்திம காலத்தில்தான் இருக்கின்றன. அவற்றில் எழுதுவதை விட சமூக ஊடகங்களில் எழுதி லட்சக்கணக்கான பார்வைகளை இன்று சுலபத்தில் பெற முடிகிறது (எத்தனை பேர் ஆழ்ந்து படிப்பார்கள் என்பது எந்த பத்திரிகைக்கும் பொருந்தும்.).

ஆகையால் நாம் இன்று இடைநிலை சினிமா, இடைநிலை இதழ்கள் குறித்த மனப்போக்கை விட்டுவிடலாம் எனத் தோன்றுகிறது. இன்று வெகுஜன படைப்பே சாத்தியமில்லை, வெகுஜ பங்கேற்பு கலை என ஒன்று மட்டுமே சாத்தியம் என நினைக்கிறேன். ஒரு இலக்கியவாதிக்கோ கலைஞனுக்கோ அங்கு இடமில்லை.

இன்று நாம் இந்த நாவல் எழுதப்பட்ட 70களில் காலகட்டத்தை நோக்கிப் போவதாகத் தோன்றுகிறது - அசல் கலையும் வெகுமக்கள் கலையும் இன்று இரண்டிரண்டாக மாறி நிற்க வேண்டி உள்ளது. வெகுமக்கள் கலையாக இன்று உள்ள ஒன்றில் நாம் மக்களையே காண முடிவதில்லை. இன்னும் சொல்லப்போனால் அரசியலிலும் நம்மால் வாக்காளர்களையோ ஆட்சியாளர்களையோ காண இயல்வதில்லை. மாயாவியான வாக்காளர்களை எந்திரங்கள் உற்பத்தி செய்கின்றன. ஆட்சி செய்யாமலே ஆட்சி நடப்பதாக அரசுகள் பாவிக்கின்றன. ரீல்ஸ்களில் மக்கள் ஆட்சியைப் பார்க்கிறார்கள். நிஜ உலகில் தவிக்கிறார்கள். இன்று ஒரு எழுத்தாளரால் அரசியல் கூட ஆர்வம் காட்ட இயலுமா என்று எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. வாழ்க்கைக்கும் வெகுமக்கள் சாதனங்களான சினிமா, அரசியல், பொழுதுபோக்கு கலை ஆகியவற்றுக்கும் பெரும் இடைவெளி தோன்றிவிட்டது. இலக்கியத்துக்கும் வாழ்க்கைக்கும் அத்தகைய இடைவெளி அவசியமில்லை. வாசகர் இன்றும் நுகர்வனுபவத்தை இலக்கியத்தில் கோருவதில்லை. இலக்கியம் ஒரு மிகச்சிறிய புள்ளிக்குள் நிலைக்க முடிகிறது. உலக அளவில் இலக்கியத்தில் நேரடியான கதைகூறல், உணர்ச்சிகரமான சம்பவங்களுடன் எழுதப்படும் படைப்புகள் கவனம் பெற்று வருவதாகச் சொல்லப்பட்டாலும் நிறைய பரிசோதனைகளையும் நேர்மையையும் இன்று இலக்கியப் படைப்பாக்கத்தில் இன்றும் காண முடிகிறது (இதையே உலக சினிமாவுக்கும் சொல்ல முடியும்).

ஆகையால் விமலாலித்த மாமல்லனைப் போன்றோர் அன்று செய்ததை இன்று மீண்டும் நாம் செய்ய வேண்டிய காலம் அண்மித்து விட்டது. இப்படி ஆரம்பிக்கலாம்: "என்னது "பிளாஸ்டா"? அப்படீன்னா என்ன? எதாவது பூஸ்ட் மாதிரியா? என்னது படமா? இல்லை நான் கேள்விப்படலேங்களே..." படத்தைப் பார்த்திருந்தாலும் இப்படிச் சொல்லிப் பழகலாம். அதற்கான முக்கியத்துவத்தை மறுக்கலாம். ஒன்றின் மதிப்பை நாம் அதை அங்கீகரிக்க மறுக்கும் போது அழிக்கிறோம். அதாவது நம் அளவில். இது நம்மைப் பாதுகாக்க, எழுத்துக்குள் ஆழமாகச் செல்ல உதவும். ஆபீஸ் நாவலில் வருகிற ரெட்ரோ மனநிலையைஒ பழகிப் பார்த்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...