முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீட்சே - “நன்மைக்கும் தீமைக்கும் அப்பால்” குறிப்புகள் (2)

                                                Beyond Good and Evil by Friedrich Nietzsche | Goodreads 

அத்தியாயம் 1
தத்துவவாதிகளின் மனச்சாய்வுகள்
பிரிவு - 1


இங்கு நீட்சே “உண்மையை நோக்கி விழைவை” அடையாளம் காணத் தொடங்கியிருக்கிறோம், இது ஒரு முக்கியமான துவக்கம் என்கிறார். இதை அவர் சாராம்சமான உண்மையொன்றை நம்மைச் சுற்றிய விசயங்களிலும் (தோற்றப்பாடுகள்) நம் அனுபவங்களிலும் தேடுவதில் இருந்து வேறுபட்டது என்கிறார். நீங்கள் ஒரு அழகிய பெண்ணின் கன்னத்தைத் தொடுகிறீர்கள் (அவளுக்கு உங்களைப் பிடிக்காவிடில் உங்கள் கன்னத்தில் அவள் அறைகிறாள்.). அங்கு ‘தொடும்’ அனுபவமும் உங்கள் இருத்தலுமே உங்களைச் செலுத்துகிறது. அது கன்னம் என்பதோ, அதைத் தொடுவதே நல்லது என்பதல்ல. எந்தப் பெண்ணும் தன் கழுத்தில் அத்தகைய வழிகாட்டும் குறிப்புகளை தொங்கப்போட்டுக் கொண்டு வருவதில்லை. ஆனாலும் அக்கன்னம் உங்களை ஈர்க்கிறது. அந்த ஈர்ப்பு வெறுமனே ‘காமம்’ அல்ல. காமம் என்றால் உடலின்பத்துக்கும், இனப்பெருக்கத்துக்குமான விழைவு என்று அதற்கு ஒரு உத்தேசத்தை டார்வினும் பிற உளவியலாளர்களும் கொடுத்திருக்கிறார்கள் (teleological reason). ஆனால் நமக்குத் தெரியும் அதையும் மீறிய ஒரு பெரும் அகவிழைவே நம்மைச் செலுத்துகிறது என்று. இதையே நீட்சே will என்கிறார். அது கன்னத்தை நோக்கிய உதடுகளிலோ குத்தும் பையை நோக்கிய முஷ்டிகளிலோ தன்னைச் செலுத்துக் கொள்கிறது. நம் உடலே அங்கு விழைவாகிறது. நம் உடலுக்கு இன்பத்தையும் கடந்து வேறெதுவோ தேவையுள்ளது. ஏனென்றால் பல சமயங்களில் நாம் துன்பத்தையும்தான் நாடுகிறோம் (பலூனைப் பார்த்தால் அதை உடைக்கலாமா என்று தோன்றுகிறது; வேகமாய் விரையும் ரயிலின் கதவைத் திறந்து சில வினாடிகள் தொங்கினால் என்ன என்று ஆசை வருகிறது; ஜிம்மில் பல நாட்களாய் உடலை வலுத்திப் பெருக்கிக் கொண்டு அதனால் எந்த பயனும் இல்லாத வாழ்க்கையை வாழ்கிறோம்.) ஆகையால் இந்தப் பிரிவில் நீட்சே கேட்கிறார்: நாம் ஏன் உண்மையை நாடுகிறோம், ஏன் உண்மையற்றதை நாடவில்லை? என் நிச்சயமின்மையை நாடவில்லை, ஏன் அறியாமையை நாடவில்லை?
நாம் ஒன்றை அறிய விழைகையில் நாம் நம் அறிதலின் இலக்காக புறமே உள்ள ஒன்றை வைக்கிறோம். ஒரு மலரைக் கையில் எடுத்து இது என்ன என்று கேட்கிறோம். இது இப்படியான அணுக்களால், பாகங்களால் உருவானது, இயற்கையில் இது இப்படியான உத்தேசம் கொண்டது என அறிவியல் விளக்குகிறது. நீட்சே நாம் இங்கு விசாரணையைத் தவறாக நடத்துகிறோம் என்கிறார். உண்மையில் நாம் விசாரிக்க வேண்டிய புதிர் நம்மில் இருந்து தொடர்பற்ற ஒரு புறவுலக விசயம் அல்ல. நாம் நிஜத்தில் தீர்க்க வேண்டிய புதிர் நாம்தான். ஈடிபஸ் தொன்மத்தில் ஸ்பின்ஸ் என்கிற ஒரு ராட்சஸ விலங்கு வருகிறது. அதற்கு பெண்ணின் முகமும், சிங்கத்தின் தேகமும், பெரிய சிறகுகளும் உண்டு. கிரேக்க தெய்வங்கள் அதை தீப்ஸுல் உள்ள மக்களைத் துன்புறுத்த அனுப்புகிறது. அது வழிபோக்கர்களிடம் புதிரிடும். பதில் சொல்லாதவர்களை சாப்பிட்டு விடும். ஈடிபஸ் அதனிடம் செல்கிறான். புதிருக்கு விடையளித்து அதை வீழ்த்தி மக்களைக் காப்பாற்றுகிறான். மக்கள் அவனை தீப்ஸின் மன்னன் ஆக்குகிறது. ஆனால் இந்த ஈடிபஸுக்கு தன் வாழ்வில் உள்ள அடிப்படையான புதிர் தெரியாது (அவன் தன் தகப்பனைக் கொன்று அம்மாவை மணந்து சாபத்தை நிறைவேற்றி இறுதியில் துன்புற்று இறக்கப் போகிறான்). ஒருவன் ஒரு புதிரை விடுவிக்கும்போதும் தன் வாழ்வே ஒரு புதிர் தான் எனப் புரியாமல் இருப்பதையே நீட்சே தத்துவத்தின் நகைமுரண் என்கிறார். ஒருவர் தத்துவ விசாரணைக்குள் செல்லும்போது தன் இருத்தல் அங்கு எப்படி உள்ளது, தான் என்னைத் தானாக இவ்வுலகில் காலத்தில் இருக்கிறேன், தான் நம்பும் கருத்தாக்கங்களுக்கு தனது இருத்தலுடன் முரண் உள்ளதா எனும் கேள்வியைக் கேட்க வேண்டும். இங்கு “ஈடிபஸ் யார், ஸ்பின்ஸ் யார்?” என்று கேட்கும் நீட்சே ஈடிபஸே ஒரு ஸ்பின்ஸ்தான் என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...