முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விஜய் உருவாக்கி உள்ள சுதந்திரம்


 தவெகவில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சேர்வது ஒரு செய்தி அல்ல. அரசியல்வாதிகளுக்குத் தேவை அதிகாரம். அதிகாரத்தை நோக்கி அவர்கள் குவிவார்கள். 'தவெக' என்பது பெயர் மட்டும்தான். அந்த இடத்தில் பாஜக இருந்து ஆட்சிக்கு வந்திருந்தாலும் இதுதான் நடந்திருக்கும் - கம்யூனிஸ்டுகள் கூட 'தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தக்க வைக்கவும், தமிழ்நாட்டு பாஜக ஒன்றிய அரசிலுள்ள பாஜகவைப் போலல்லாது சமூகநீதியையும் மதசார்பின்மையையும் காப்பாற்றுவதாக உள்ளதாக இருப்பதால்' என்று சொல்லிச் சேர்ந்திருப்
பார்கள். பாஜக என்ன குரங்குக் கூட்டம் ஒன்று கட்சி ஆரம்பித்து கூடத்தான் அதிலும் பல கட்சியில் இருந்து மக்கள் சேர்ந்து அதிகாரத்தைக் கோருவார்கள். இது பிற கட்சிகளின் பலவீனத்தைக் காட்டவில்லை. அதிகாரத்தின் ருசியை மட்டுமே காட்டுகிறது. இது செய்தியல்ல, தவெகவின் வசீகரத்தையும் இது காட்டவில்லை. தவெக இப்போதைய சூழலைக் கருதி இவர்களை வரவேற்கிறது. எந்தக் கட்டுப்பாடோ நிபந்தனையோ இல்லாமல் வரவேற்கிறது. ஒருவேளை, தனிப்பெரும்பான்மை தவெகவுக்கு கிடைத்திருந்தால் அங்கு போவது இவ்வளவு வளமான வாய்ப்பாக இருந்திருக்காது. தவெக என ஒன்று இல்லாதிருந்தால் இப்போதைய சபாநாயகர் பிரபாகரால் இப்படி வெளிப்படையாக சட்டமன்றத்திலேயே எடப்பாடியை அவமதிக்க முடிந்திருக்குமா? காலம் செய்யும் கோலமே அரசியல். அந்தக் கோலத்தில் புள்ளியாக மாறுவதே சாதுர்யம். அப்புள்ளிகள் மீது காலை வைத்து யாராவது அழிக்கும்போது அடுத்த கோலத்துக்காக காத்திருப்பதும்தான் அரசியல். புள்ளிகளின் ஆயுட்காலம் அவ்வளவுதான்.

இப்போது உள்ள நெகிழ்வான சூழல் முன்பு இல்லை - அன்று திமுக-அதிமுக என இரு எதிரெதிர் கோட்டைகள் இருந்தன. அக்கட்சிகளுக்கு வெளியாட்கள் பெருமளவில் தேவையில்லாத அளவுக்கு அவை சற்று இறுகிப் போயிருந்தன. தவெக எனும் கொள்கையில்லாத, வரலாறு இல்லாத, சொல்லப்போனால் எதுவுமே இல்லாத சினிமா கொட்டகைக் கட்சி தோன்றும்போது அதில் சேர்வதற்கு ஒரு சுதந்திர வெளி தோன்றுகிறது. சினிமா கொட்டகை என்று சொல்வதற்குக் காரணம் அங்குதான் ஒரு பொழுதுபோக்கைக் காண்பதற்கு பல்வேறு முரணான எண்ணங்களும் போக்குகளும் கொண்டவர்களும் ஒன்று திரள்வார்கள். தவெகவுக்கு கிடைத்துள்ள ஆதரவாளர்களும்கூட இப்படியானவர்களே - நீங்கள் அதிமுகவையோ திமுகவையோ ஆதரிக்க நிபந்தனைகள் உண்டு. கட்சியின் சித்தாந்தம், வரலாறு, தலைமை, தொகுதி எம்.எல்.ஏ என எதாவது தெரிந்திருக்க வேண்டும். தவெக விசயத்தில் ஒன்றுமே தெரிந்திருக்க வேண்டியதில்லை. தவெகவின் நடவடிக்கைகளுக்கும் பொறுப்பேற்கத் தேவையில்லை. ஏனென்றால் அக்கட்சிக்கு நடவடிக்கைகளே இல்லை, ஷோ மட்டும்தான். சும்மா ரீல்ஸைப் பார்த்து ரசித்துவிட்டுப் போகலாம். இதற்கு வசதியாக 'அக்கட்சியின்' தலைவர் கூட கொள்கை, நிர்வாக முடிவுகள், தீர்வுகள் என எதையும் சட்டமன்றத்தில் கூட சீரியஸாகப் பேசுவதில்லை. அவர் வக்கணையாக வசனம் பேசி நடிக்கிறார். அவ்வசனங்களும் அரசியலுக்குத் தொடர்பற்றவை. அரசியலைப் பின்பற்றாதவர்கள், செய்தி பார்க்காதவர்கள் கூட விஜய்யை மட்டும் தெரிந்து வைத்திருந்தால் அதைப் பார்த்தால் புரியும். இந்த ஆதரவாளர் பொறுப்பின்மையில் ஒரு சுதந்திரம் உண்டு. இதை ரசிப்பவர்களே ஒரு சந்தோசத்துக்காக விஜய்க்கு வாக்களித்துள்ளார்கள் (கூடவே புரோக்ராம் செய்யப்பட்ட எந்திரங்களும்தாம் வாக்களித்தன).
யோசித்துப் பாருங்கள் - திமுக ஆட்சியில் இருந்தபோது தலித் அறிவுஜீவிகள் தொடர்ந்து சமூக விடுதலை, சமத்துவம் பற்றி பக்கம் பக்கமாக எழுதினார்கள், கொந்தளித்தார்கள், மனித உரிமைப் போராளிகளும் போராடிக் கொண்டே இருந்தார்கள், இடதுசாரிகள் நிறைய ஆய்வுகளைச் செய்தார்கள் - இவர்களுக்கு எல்லாம் விஜய் இன்று விடுதலை அளித்து விட்டார். அவர் நிர்வாகம் செய்வதோ பிரச்சினைகளை ஏற்படுத்துவதோ இல்லை, பனையூரில் நீச்சல் குளத்தில் ஓய்வெடுப்பது, ஜிம்முக்குப் போவது என உல்லாசமாக இருக்கிறார். அவரது அமைச்சர்களும் டான்ஸ் ஆடுவது, பணம் வாங்கி ஒப்பந்தம் போடுவது என இருக்கிறார்கள். அரசியல் செய்வதற்கு ஜான் ஆரோக்கியசாமி போன்ற சமூகவலைதள மேலாளர்களை, தேர்தல் வியூக வகுப்பாளர்களை வைத்திருக்கிறார்கள். நிறைய பிரச்சினைகள் நடக்கின்றன; ஆணவக் கொலைகள் நடக்கின்றன. ஆனால் அவற்றுக்குப் பொறுப்பேற்கும் நிலையில் இல்லாத அரசு இருப்பதால் அரசைச் சாடி யாரும் பேசவோ எழுதவோ தேவையில்லை. இந்தப் பணிகளில் இருந்து விஜய் போராளிகளை 'விடுவித்து' விட்டார். ஏசு மக்களின் பாவங்களைச் சுமந்து சிலுவையில் ஏறினார் என்பார்கள். விஜய் இந்த சிலுவையையும் பறித்து எறிந்துவிட்டு சுமக்க இங்கு எதுவுமே இல்லை, எதையுமே பேசிப் பயனில்லை என்று புரிய வைத்து விட்டார். உ.தா., ஆணவக் கொலை என்பது நாம் ஒரு கொலை மீது சுமத்திய லேபல், அதன் மீது சமத்துவம், தலித் விடுதலை, சமூக நீதி என கருத்தாங்கள் பாரமாக ஏறி நிற்கின்றன. அதை வெறும் கொலை என எடுத்துக் கொண்டால் நம் வருத்தங்கள் மறைந்து போகும். இதையே விஜய் இன்று சாத்தியபடுத்துகிறார். அவர் விசிகவுக்கு ஒரு அமைச்சர் பதவி கொடுத்ததுமே அம்பேத்கர் போராடிய அத்தனைப் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துவிட்டன. பா. ரஞ்சித் கூட அதனாலே பட்டும்படாமல் ஒரு அறிக்கை விடுகிறார். அவருக்கே தெரிந்துவிட்டது இது பின்னைப் போராட்ட காலம் என (பின்நவீனத்துவம் போல ஒன்று இது).
தவெக இப்படி ஏற்படுத்தி உள்ள சுதந்திர வெளி ஆச்சரியத்துக்குரியது - என்னுடைய ஆசையெல்லாம் தவெகவினர் தனியார் நிறுவனங்களையும் எடுத்து நடத்த வேண்டும், அங்கு நாமெல்லாம் எதையும் சீரியசாக எடுத்துப் பண்ணாமல் ரீல்ஸ் போடுவது, டான்ஸ் ஆடுவது என இருந்து வேலையில்லாமலே சம்பளம் வாங்க வேண்டும் என்பது. ஆனால் அதெல்லாம் நடக்கப் போவதில்லை.
உண்மையான செய்தி திமுகவினர் இன்னும் கூட்டங்கூட்டமாக தவெகவில் சேராததுதான் - திமுகவிலும் நிச்சயமாக அதிருப்தியாளர்கள் இருப்பார்கள். கோமாளிகளே அமைச்சராகும்போது நாமெல்லாம் அங்கு போயிருந்தால் இரண்டு ஆண்டுகளில் என்னவெல்லாம் ஆகியிருக்கலாம் என ஏங்குவார்கள். ஆனால் மக்கள் எப்போதும் ஒரே மனநிலையில் இருக்க மாட்டார்கள் - ஒரு தேர்தலில் விஜய் அடிவாங்கினாலே அவருக்கு நிதியளிக்கும் கார்ப்பரேட்டுகள் அற்ற குளத்தை விட்டுப் பறப்பார்கள். அவர்களே போனால் எல்லா கட்சி எம்.எல்.ஏக்களும் ஓடுவார்கள். திரும்பவும் அவர்கள் விசிக, கம்யூனிஸ்டுகள், அதிமுக ஆவார்கள். ஆனால் அவர்கள் அப்போது நம்பகத்தன்மையை இழந்திருப்பார்கள். அரசியலில் மேற்சொன்ன 'சுதந்திரம்' எப்போதுமே எடுபடாது. மக்கள் அவநம்பிக்கை கொள்வார்கள். களைத்துப் போவார்கள். எம்.ஜி.ஆரே தன் ஆட்சிக் காலத்தின் கடைசி கட்டத்தில் அதிருப்தியை சம்பாதித்ததாக, கட்சிக்குள் அதிகாரத்தை இழந்ததாகவும், அவருக்கு எதிராக ஒன்றிய அரசு ஜெயலலிதாவைத் தயார் பண்ணியதாகச் சொல்வார்கள். எம்.ஜி.ஆருக்கே அப்படி என்றால் மற்றவர்களுக்கு? ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நம் அறிவிஜீவிகளும் போராளிகளும் சாதிய அடக்குமுறை, ஆணவக் கொலை எனக் கொந்தளித்தால் அது போலித்தனமாகத் தெரியும். இப்படி விஜய்க்குப் பின்பான அரசியல் களம் எல்லாரையும் சோர்வடைய வைக்கும். 'சுதந்திரம்' ஒரு சூப்பர் மார்க்கெட். ஆரம்பத்தில் அங்குள்ள பொருட்களுக்கு ஒரு தனி மதிப்பிருக்க்கும். ஆனால் போகப்போக அவை மலிவான பொருட்களாகவே பார்க்கப்ப்படும். சூப்பர் மார்க்கெட்டின் சூத்திரமே அதுதான்.
எப்படி திமுக ஆட்சிக் காலத்தில் திமுகவே முறியடிக்கப்பட முடியாத சக்தி என எல்லாரும் பேசினார்களோ தவெக ஆட்சிக்காலத்திலும் அதையேதான் சொல்கிறார்கள். நாளை இன்னொரு கும்பல் ஆடு வளர்ப்பு, ஊழல் ஒழிப்பு என்று ஆட்சியைப் பிடித்தாலும் அதையேதான் சொல்வார்கள். இது மிகையின் காலம். கொஞ்ச காலத்துக்குப் பிறகு விஜய்யை நாம் சாகுவரை முதல்வர் என்றோமே என்பதை மறந்து இன்னொருவரைப் பற்றி இப்படியே பேசிக் கொண்டிருப்பார்கள். இப்படி யார் பேசினாலும் சலிப்பாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் மிகைகளின் காலத்தில் மக்களில் ஒரு பகுதியினருக்கு மக்களாட்சி மீது அதிருப்தி தூக்கலாக இருக்கிறது, அதுவே இத்தகையோரை ஆட்சிக்கு கொண்டு வருகிறது, அவர்கள் மனத்தின் அடியாழத்தில் யாருக்கும் பொறுப்பேற்கத் தேவையற்ற மன்னர் ஆள வேண்டும் எனும் ஆசை உள்ளது. ஆகவேதான், இன்றைய அரசியல் மொழி மிகையாக, எதார்த்தத்துக்கு அப்பால் உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...