முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனிமையுணர்ச்சி


 

இன்றைய தலைமுறைப் படைப்பாளிகளுக்கும் சரி ஒட்டுமொத்தமாக இத்தலைமுறையினரும் கூடத்தான் உள்ள ஒரு சிக்கலைப் பற்றி ஒரு நண்பரிடம் உரையாடிக் கொண்டிருந்தேன். அவர்தான் இந்த விசயத்தைப் பற்றி பேசித் தன் வருத்தத்தை முதலில் பகிர்ந்தார். அப்படியே அது எப்படி ஒரு பெரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது என்று விவாதித்தோம். நான் அவ்விவாதத்தில் இருந்து நிறைய அவதானித்தேன்.

பிரச்சினை இதுதான் - ஒரு இலக்கியக் கூட்டத்துக்குச் செல்கிறோம் என்றால் அங்கு வரும் இளைஞர்களுடன் இலக்கியம், தத்துவம் என எதைக் குறித்தும் விவாதிக்க முடிவதில்லை. அவர்கள் எதை, யாரைப் படிக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. கூடியபட்சமாக தம்மைப் பற்றி மட்டும் சொல்கிறார்கள். கேலி கிண்டலைத் தாண்டி அவர்களுக்குப் பெரிய இலக்கிய ஆர்வமோ தத்துவ ஆர்வமோ உள்ளதாகத் தெரியவில்லை. அவர்கள் மூத்த படைப்பாளிகளைச் சந்திக்கையிலும் அங்கும் அவர்களுடைய நூலைக் கொடுக்கிறார்கள், ஆனால் அந்த மூத்த படைப்பாளியின் நூல்கள் குறித்த தம் கருத்துக்கள் என்னவெனச் சொல்வதில்லை. இதனாலே இலக்கியக் கூட்டங்களில் ஒன்று என் தலைமுறையைச் சேர்ந்தோரிடமோ எனக்கு முந்தின தலைமுறையினரோ மட்டும்தான் விவாதங்கள் சாத்தியமாகிறது. மீத நண்பர்கள் அமைதியாகக் கேட்டுக் கொண்டு விலகிச் செல்கிறார்கள். அதே நேரம் அவர்கள் கதைகளையும் கவிதைகளையும் எழுதுகிறார்கள். பதிப்பிக்கிறார்கள். தாம் எழுதுவதைத் தாண்டி பிறரைப் பற்றி விவாதிக்க அவர்களுக்கு ஒன்றுமில்லை. எதைக் குறித்தும் கருத்துக்கள் இல்லை. இவர்களில் ஒரு தரப்பினர் தமக்குப் பிடித்த எதாவது ஒரு பிரபலப் படைப்பாளியைப் பற்றி ரசித்துக் கூறுகிறார்கள். அப்படைப்பாளிகளின் கருத்துக்களை ஒட்டி எதையாவது சொல்கிறார்கள். எனக்கு இந்த ரசிக மனநிலை கூடப் பரவாயில்லை என்றே தோன்றுகிறது. நான் தொண்ணூறுகளில் பதின் வயதினனாக இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது எல்லா விசயங்கள் மிதும் கேள்விகளும் கருத்துக்களும் இருந்தன. என்னைப் போன்று சதா பேசுகிற பிறரும் அப்போது என் வயதை ஒட்டியோ சில வருடங்கள் கூடுதலாகவே இருந்தார்கள். நாங்களே கூட்டங்களில் அதிக ஒலியெழுப்புவோர். இன்று நிலைமை தலைகீழ் - பதின்வயதினர் இளைஞர்களில் பெரும்பாலானோர் எதையும் பேசத் தயங்குகிறார்கள். அப்படிச் சிலர் பேசும்போதும் அவர்களுக்கு மேற்கோள் காட்ட புத்தகங்களோ எழுத்தாளர்களோ சிந்தனையாளர்களோ இல்லை. வயதானவர்களோ இன்று வாசித்தும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது வாசிப்பின் போதாமையால் மட்டுமல்ல. நண்பர் என்னிடம் ஒரு தனிமையுணர்ச்சி எல்லாரையும் இன்று ஆட்கொண்டிருக்கிறது என்று சொன்னார். அது ஒரு அடிப்படையான பிரச்சினை என நினைக்கிறேன். இலக்கியம் அறிந்தோர் கூட இன்னொரு படைப்பை வாசித்து அதனுடன் உரையாடத் தயங்குகிறார்கள். அதற்கான மொழியையும் அவர்கள் இதனால் உருவாக்கவில்லை. தமக்குள் எழுதிக் கொண்டு இருந்தால் போதும் என நினைக்கிறார்கள். வேறெப்போதுமே இல்லாத இலக்கியத் தனிமை இன்று நம்மை ஆட்கொண்டு வருகிறது. 7-8 ஆண்டுகளாக நான் இதைக் கண்டு வருகிறேன் என்றாலும் இன்று இது மிகத் தீவிரமான ஒரு ஆன்மீக நெருக்கடியாகி விட்டது. இந்த தனிமைக் கண்ணாடிக் சுவரை உடைத்துக் கொண்டு மக்கள் வெளிவர வேண்டும். குறிப்பாக எழுத்தாளர்கள்.

என்னை மறுத்து ஒருவர் கருத்துச் சொன்னால் நான் உற்சாகமாவேன். அப்போது என்னால் இன்னொரு தரப்பில் இருந்து சிந்தித்து விவாதத்தைத் தீவிரமாக்கவும் புதிய கருத்துக்களை அடையவும் முடியும். நான் இதற்கு நேர்மாறான இளம் படைப்பாளிகளை இன்று பார்க்கிறேன். சிறு கேலி கிண்டலைத் தாங்க மாட்டார்கள். எதிர்க் கருதென்றால் சுருங்கி விடுகிறார்கள். இதனாலே இவர்களும் கருத்துச் சொல்வதில்லை, யார் கருத்தையும் கேட்பதும் இல்லை. சிலர் இப்படியான மனநிலையில் இருந்து ஆறுதல் பெறவே இலக்கியம் பக்கம் வருகிறார்கள். இங்கு அவர்கள் எதையும் பேசாமல் தம்மை யாராவது கவனித்தால் மட்டும் போதும், தாம் எதையும் படிக்கவோ யாருடனோ பேசவோ அவசியமோ இல்லை என நினைக்கிறார்கள் என நண்பர் சொன்னார். நான் இதற்கு முன் இத்தகையோரை இலக்கிய வெளியில் அரிதாகவே கண்டிருக்கிறேன். ரொம்ப விசித்திரமாக இருக்கிறது.

நாம் பேசும் கருத்துக்களின் ஒரு முரணான தரப்பே படைப்பிலக்கியம். இந்த முரணெதிர்வு இன்றி எழுத்தாளர்களால் எப்படிச் செயல்பட முடியும் என எனக்குப் புரிந்ததில்லை.

இந்த நெருக்கடிக்கு இலக்கியம் பொறுப்பல்ல, இது ஒரு பெரிய சமூக நெருக்கடி, இலக்கியம் அதற்கு ஆட்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். சமூகவலைதளம், சினிமா, கேளிக்கைக் கலாச்சாரம், மிகுதியான தன்முனைப்பு, சமூக அக்கறையின்மை, கருணையின்மை நம்மை இத்தகைய தனிமையுணர்ச்சியை நோக்கித் தள்ளியுள்ளது. இதற்கு மருந்து இலக்கியத்தில் உள்ளது. ஆனால் இளம் இலக்கியவாதிகளே இதற்கு ஆட்பட்டால் இலக்கியம் என்னவாகும் என ஒரு பயம் வருகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...