நாம் முதலில் நமது நம்பிக்கைகளுக்கு ஏற்ப வாழத் தலைப்பட வேண்டும். சமரசமில்லாமல். அப்போதுதான் உண்மைக்கான மதிப்பு தோன்றும். அது எந்த நம்பிக்கையாக வேண்டுமெனினும் இருக்கலாம். ஒருவர் தான் ஒரு ஒழுக்கத்துக்கு எதிரானவர் என்று சொல்லிவிட்டுக் கூட அதையே பின்பற்றலாம். ஆனால் அப்படிச் சொல்கிறவர்கள் அடுத்த நொடியே ஒழுங்கின் முகமூடியை பணத்துக்காக, அதிகாரத்துக்காக அணிவார்கள். அல்லது இதற்கு நேரெதிராகவும் செய்வார்கள். நாம் அப்படிச் செய்யாதபோது இப்படித்தான் ஆகும்.
இன்று உண்மையின் பொருள் மாறிவிட்டதா, மக்கள் எதைச் சொன்னாலும் நம்புகிறார்களா, மக்கள் தாம் விரும்பும் (கட்டமைக்கப்பட்ட) உண்மைகளை மட்டுமே பின் தொடர்கிறார்களா? இல்லை. உண்மை என்பது நம் உடலால் நாம் உருப்பெற வைப்பது. நாம் உண்மையை வாழ்ந்தாக வேண்டும். நினைத்தாலோ, சொன்னாலோ போதாது. மக்களுக்கும் தமது உலகுக்கும் இடையில் ஒரு இடைவெளி எந்திரமயமாக்கலின்போது தோன்றியது என்கிறார்கள். கடவுளின் கண்டுபிடிப்பின்போதுதான் இது முதலில் தோன்றியது என நினைக்கிறேன். ஏனென்றால் நாம் கடவுளுக்காக யோசிக்கவும், உணர்வுவயப்படவும் துவங்கியபோது நாம் அதை எப்படிச் செய்ய வேண்டும் என சொல்லித் தர மதமும் பூசாரிகளும் தோன்றினார்கள். எந்திரங்கள் கடவுளின் இடத்தை எடுத்துக் கொள்ள இந்த இடைவெளி இன்னும் அகலமானது. கடவுளின் இடத்தைப் பணம் எடுத்துக் கொள்ள பூசாரிகளின் இடத்தை வணிகர்கள் எடுத்துக் கொண்டார்கள். நாம் செலுத்தும் உழைப்பும் நாம் அனுபவிக்கும் உலகின் பொருட்களுக்குமான இடைவெளி நம்மால் கடக்க முடியாததாகியது, புரிந்து கொள்ள இயலாதததாகியது. தொழில்நுட்பம் இதை நிரப்ப முடியாதபடிக்கு எடுத்துச் சென்றது. எனக்கும் உங்களுக்கும், எனக்கும் நான் அமர்ந்து ஓட்டுகிற பைக்குமான இடைவெளி என்பது அதை நான் எப்படி நிகழ்த்த வேண்டும் என்பது முன்-தீர்மானிக்கப்பட்டதால் தோன்றுவது. நாம் ஒவ்வொன்றிலும் நடிக்க ஆரம்பிக்கிறோம். அதன் பிறகு நாம் நினைப்பதை எல்லாம் நடிக்கலாமே என நினைக்கிறோம். நாம் நடிப்பதை எல்லாம் நினைப்பதாக நம்பலாம் என நினைக்கிறோம். ஒரு வலுவான குழு வந்து நீ நடிப்பதை எல்லாம் நினைப்பதாகச் சொல்கிறாயே அதை நான் தீர்மானித்து உனக்கு செட் அப் பண்னித் தருகிறேன் என்கிறது. நாம் அவர்களுக்கு ஒப்புதல் அளிக்கிறோம். நடிகர்கள், இயக்குநர்கள் சேர்ந்து நம்மை இயக்குகிறார்கள். இவர்கள் அடுத்து நம் அரசியலுக்குள்ளும் வாழ்க்கைக்குள்ளும் வருகிறார்கள். இவர்களே பின்னர் சமூகவலைதளங்களையும் தீர்மானிக்கிறார்கள். இவர்களே செய்தித் தொடர்பையும் கையில் எடுக்கிறார்கள்.
இப்படி இந்த நீண்ட பயணத்தின் முடிவில் நாம் இப்போது எதையும் பேசவோ நம்பவோ முடியாத இடத்தை அடைந்திருக்கிறோம். பிந்தை-உண்மையின் உலகில் நாம் செய்ய முடிந்தது முதலில், உணர்ச்சிகளை மட்டும் நம்பாமல் பகுத்தறிவை நம்புவது, முடிவற்று கேள்விகளை எழுப்புவதும், யாரையும் எதையும் சாராமல் முகமையுடன் இருப்பதாகும். இரண்டாவது, நாமாக மட்டும் வாழ்வது. தவறு செய்வதை, வீழ்வதை வெறுக்காமல் அதை ரசிப்பது. தனிமையை அஞ்சாமல் இருப்பது. நமக்குள் ஆதாரமாக இருக்கிற உணர்ச்சிகளைத், நம் உடலில் இருந்து மட்டும் தோன்றும், நம் மனம் அதன் நீட்சியாக ஏற்கிற உணர்ச்சிகளைத் தீவிரமாக நம்புவது. அதன்படி (யாரையும் முடிந்தளவுக்குத் துன்புறுத்தாமல்) வாழ்வது. உண்மையை ஒரு தகவலாகவோ கருத்தாகவோ விழுமியமாகவோ அல்லாமல் இவ்வாறாகப் பார்க்கையில் நமக்கு அது உண்மையா பொய்யா எனும் பிரச்சினை எழுவதில்லை. இவ்வாறு வடிவட்டி வடிகட்டிப் பின்னுக்குச் செல்வதே தீர்வு.
யோசித்துப் பார்த்தால் நான் சொல்வது மனித வளர்ச்சியில் குழந்தைக்கும் பதின்வயதினருக்கும் இடைப்பட்ட நிலை எனப் புரியும் (இன்றைய குழந்தைகள் இந்த நிலையை தொழில்நுட்பத்தினால் இழந்து விட்டார்கள்). மனிதனின் ஆதார நிலை தனிமைதான். நாம் பிறருக்கு ஏற்றபடி, பிறரால் ஏற்கும்படி ஒன்றைச் சொல்ல வேண்டும் என நம்பும்போதே பொய் சொல்லத் தொடங்குகிறோம். தனிமையில் பொய் இல்லை. அதாவது தனிமையில் 'மற்றவர்களை' நாம் கற்பனை செய்யாதவரைக்கும். அங்கு செல்வதுதான் இன்று பிந்தை-உண்மை உலகில் இருந்து தப்பிக்க நமக்குள்ள தீர்வு.
கருத்துகள்