ஒரு விசயம் எனக்குப் புரியவில்லை: தவெக அரசே ஒரு 'நேரலை விஜய் சினிமாதானே'. இதில் இவர் ஏன் தனியாக "ஜனநாயகன்" என ஒரு படத்தை எடுத்து வெளியிட வேண்டும்?
மாணவர் போராட்டத்தைத் திசை திருப்ப வேண்டுமெனில் விஜய் சும்மா மேடையில் தோன்றி அரைமணி நேரம் பேசினால் போதுமே! ஒரு சில பாடல்களையும் சண்டைக் காட்சிகளையும் அரங்கேற்றினால் இதே போராடும் இளைஞர்களே அதைக் கண்டு மனம் மகிழ்வர். இதற்காகத்தானே ஒரு கூட்டம் அவருக்கு வாக்களித்து முதல்வராக்கி இருக்கிறது. விஜய்க்கு ஆளவும் தெரியாது, ஒரு மண்ணும் தெரியாது என்று மக்களுக்குத் தெரியாதா? தெரியும். அவர்களுக்கு ஆட்சி, நிர்வாகம், அரசியல், கொள்கையெல்லாம் அலுத்துவிட்டது. ஒரு முழுமையான பொழுதுபோக்காளரை ஆட்சியில் அமர வைத்தால் நேரம் நன்றாகப் போகும் எனக் கருதினார்கள். அதுவே இப்போது நிகழவும் செய்கிறது. இப்போது 'ஜனநாயகன்' எல்லாம் காலாவதியாகி விட்டது.
என்னுடைய பரிந்துரை விஜய் தன்னுடைய மேடைப் பேச்சையும் பொதுவெளித் தோற்றங்களையும் டிக்கெட் போட்டு விற்றுவிட வேண்டும். இது ஒன்றும் புதிதல்ல. எம்.ஜி.ஆர் தான் முதல்வரான பிறகுகூட இதைச் செய்திருக்கிறார் என்று சபாநாயகர் பிரபாகர் தன் நேர்முகத்தில் சொல்லியிருக்கிறார். விஜய் தன் மேடை நிகழ்வுகளை மட்டுமன்றி அனைத்து அரசியல் செயல்பாடுகளையும் விற்றுவிட்டால் போதும். அக்காட்சிகளை ஒளிபரப்பும் உரிமையையும் ஒ.டி.டியில் விற்றுவிடலாம். வருடத்திற்கு ஒரு மாதம் மட்டும் பிக்பாஸ் போல 'விஜய் பாஸ்' எனும் 24 மணிநேர நேரலையை ஒளிபரப்பி அதற்கும் பணம் வாங்கலாம். தங்கள் தளபதியை இரவு பகலாய் பார்த்துப் பரவசத்தில் மக்கள் அடுத்த தேர்தல்களிலும் வாக்களிப்பார்கள். அவர்களுக்கு அலுக்கும் வரை இதைச் செய்யலாம். அதைக் கிளுகிளுப்பாக்கவும் என்னிடம் ஐடியாக்கள் உள்ளன. அதைப் பின்னர் பார்க்கலாம்.
விஜய்யின் அமைச்சர்கள் படத்துக்காகப் போஸ்டர் ஒட்டுவதை, வெளியிடுவதை, பார்த்து கண்ணீர் விடுவதை ஏன் விமர்சிக்கிறார்கள் எனப் புரியவில்லை. அவர்கள் இத்தனை நாளாக ரீல்ஸ் போட்டு மகிழ்ந்ததெல்லாம் இந்நடவடிக்கைகளின் மறைமுக வடிவம்தானே. தேர்தல் பிரச்சாரம், வெற்றி, ஆட்சி எல்லாமே சினிமாவின் நீட்சி எனப் புரிந்து கொண்ட அவர்களை நாம் பழிக்கலாமா? கூடாது.
கடைசியாக, அதென்ன 'ஜனநாயகன்'. ஜனநாயகத்தை ஒழித்துக் கட்ட வந்தவரே விஜய் தானே. 'சர்வாதிகாரி' என்பதே தகுதியான தலைப்பு. அதில் 'என்னையா சர்வாதிகாரின்னு சொல்றீங்க. ஆமாடா அப்படித்தாண்டா செய்வேன். உன்னால ஒரு டேஷும் பண்ண முடியாதுடா' எனும் வசனத்தையும் வைக்கலாம். மக்கள் புல்லரித்துப் போவார்கள்.
கருத்துகள்