நாம் இந்த தவெக அரசை ரொம்பவே மிகை மதிப்பீடு செய்கிறோம் என தாமதமாகப் புரிந்துகொள்ள பழனி கோயில் நில மோசடி உதவியது. கடந்த சட்டமன்றக் கூட்டத்தில் அமைச்சர் ரமேஷ் முன்னாள் அமைச்சர் சேகர் பாபு கோயில் நிலத்தை பார்க்கிங் வசதிக் கட்டமைப்புக்காகப் பயன்படுத்தியது ஒரு முறைகேடு என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த கட்டமைப்புப் பணிக்கான ஒப்பந்தத்தை ரத்தும் செய்தார். நான் இதை ஒரு ஆர்.எஸ்.எஸ் கொள்கை என்றே பார்த்தேன். ஏனென்றால் ரமேஷ் ஒரு முன்னாள் ஆர்.எஸ்.எஸ் என்று அவரது பழைய முகநூல் பதிவுகளை வைத்துக் கணித்தேன். ஆர்.எஸ்.எஸ்காரர்கள் கோயில் சொத்தை வைத்துச் சம்பாதித்து அதைக் கோயிலுக்குப் பயன்படுத்துவதை அவர்கள் ஏற்க மாட்டார்கள். கோயில் நிதியைச் சமூகம் கொடுத்து அதைவைத்து விழா நடத்துவது, மதப்பிரச்சாரம் செய்வது ஆகிய பணிகளை மட்டும் செய்ய வேண்டும் என்பது அவர்களுடைய கொள்கை. இவ்வாறு செய்யும்போது அதற்குள் கறுப்புப் பணம் விளையாடுவது சுலபமாகும். பல கார்ப்பரேட் சாமியார்கள் இப்படித்தான் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கிக் கொடுக்கிறார்கள். ஆனால் பழனி நில மோசடியைப் பார்க்கையில் ரமேஷ் இந்தளவுக்கு எல்லாம் கொள்கை ரீதியாகவோ விரிவாகவோ சிந்தித்துத் திட்டமிடக் கூடியவர் அல்லர் என்று விளங்குகிறது. அதுதான் சுவாரஸ்யமே. ஆர்.எஸ்.எஸ், பாஜகவினருக்கு எதிலுமொரு தொலைநோக்குத் திட்டம் இருக்கும். தவெகவினருக்கோ உடனடியாக ஒன்றைக் கொள்ளையடித்து முழுங்கி ஏப்பம் விடுவதைத் தாண்டி எந்த அக்கறையும் இல்லை.
ரமேஷுக்கும் அவரது குழுவினருக்கும் இந்த நில மோசடி 100 கோடித் திட்டம் சட்டமன்றக் கூட்டத்துக்கு முன்பே இருந்திருக்க வேண்டும். அதனால் அவர்கள் மோசடிப் புகாரை முன்கூறாக சேகர் பாபு மீது போட்டுவிட்டு தாம் ஏதோ கோயில் நிலத்தைக் காப்பாற்றுவதாக தோரணை காட்டி வேலையை ஆரம்பிக்கிறார்கள். ஆனால் முதலில் இந்த கோயில் நிலத்தை சேகர் பாபுவிடம் இருந்து காப்பாற்றுகிறோம் எனும் குற்றச்சாட்டு பரபரப்பாகவில்லை. அதில் சரக்கில்லை. யாரும் நம்பவும் இல்லை. சரி விடு என்று அவர்கள் அவசர கதியில் சார்பதிவாளரைச் சென்னைக்கு இடம் மாற்றிவிட்டு கொடைக்கானலில் இருந்து ஒரு பொறுப்புச் சார்பதிவாளரை ஒருநாளைக்கு மட்டும் அவரிடத்தில் கொண்டு வந்து பழநியில் நிலமோசடிக்குப் பதிவு பண்ணுகிறார்கள். நூறு கோடி நிலத்தை இரண்டு கோடிக்கு விற்கிறார்கள். அதாவது குறை-மதிப்பீடு பண்ணி ஊழல் செய்து பணத்தை அடிக்கிறார்கள். இப்படி கோயில் நிலத்தைத் தனியாருக்கு விற்பதே தவறு என்பது வேறு விசயம். எல்லாமே யோசித்துப் பார்க்க ரொம்ப அற்பமாக, கேவலமாக இருக்கிறது. பிக்பாக்கெட்காரர்கள் இப்படித்தான் கும்பலாக வருவார்கள். இலக்கைக் கவனம் திருப்புவதற்காக ஒருவரை அனுப்புவார்கள். அவர் சத்தம் போட்டு திசை திருப்பும்போது இன்னொருவர் வந்து திருடுவார். அதே உத்தியைத்தான் தவெகவினர் இங்கும் பயன்படுத்துகிறார்கள். இதிலும் அப்டேட் ஆக மாட்டீர்களா? ரொம்பக் கேவலமாக உள்ளது.
என்னுடைய வருத்தமெல்லாம் இவர்கள் ஆர்.எஸ்.எஸ், பாஜகவினர் அளவுக்குக் கூட வொர்த் இல்லை, பெரும் திட்டங்கள் இல்லை, மோசமான தேசக் கட்டுமானக் கனவுகள் கூட இல்லை, ஒரு தவறான சித்தாந்தம் என்றாலும் அவர்களுக்கு இருப்பது கூட இவர்களுக்கு இல்லையே என்பதுதான். அவர்கள் ஏதோ அகண்ட பாரதத்துக்காகவாவது வேலை பார்ப்பார்கள். அதற்காக வன்முறையில் ஈடுபடுவார்கள், மோசடி செய்வார்கள் என்பது வேறு விசயம். ஆனால் இவர்களோ தம் அகண்ட வயிற்றைத் தாண்டி எதைப் பற்றியும் அக்கறை கொள்வதில்லை. உங்களைப் போய் நான் மிகை-மதிப்பீடு பண்ணிவிட்டேனே என நினைக்க அதைவிடக் கேவலமாக இருக்கிறது. ஆம், அவர்கள் உண்டியல் திருடுவார்கள். ஆனால் அதைத் தாம் சொந்தமாகக் கட்டிய கோயிலில்தான் செய்வார்கள். நீங்களோ அடுத்தவன் கோயில் உண்டியலில் மட்டுமே கண்வைக்கிறீர்கள்.
சங்கிகளே உங்களைவிட மேல் என்று நான் மட்டுமல்ல வேறு சிலரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அதை நினைத்தால் இன்னும் கேவலமாக இருக்கிறது. எங்களுக்கும் ஒரு தரம் இருக்கிறது அல்லவா! உங்கள் குற்றங்களை விமர்சிப்பது ரொம்பக் கீழ்த்தரமாக இருக்கிறது. அதுவும் இந்த 'பிக்பாக்கெட்' லெவல் வழக்கை சி.பி.ஐக்கு மாற்றுவது இன்னும் கீழ்த்தரமாக இருக்கிறது. இப்படியான ரியல் எஸ்டேட், மோசடிப் பத்திரம் வழக்குப் பதிவு வழக்குகள் பல்லாயிரக்கணக்கில் இருக்கின்றன. சி.பி.ஐக்கும் ஒரு தராதரம் இருக்கிறது அல்லவா.
அன்று அக்குற்றச்சாட்டை உங்கள் மீது வைத்தமைக்காக என்னை மன்னிச்சிருங்க அமைச்சரே. நீங்க அந்தளவுக்கு வொர்த் இல்ல.
கருத்துகள்