எனக்கு கரப்பான் பூச்சி கட்சியின் நோக்கம் குறித்து ஐயங்கள் உண்டு எனினும் அவர்களுடைய முற்றுகைப் போராட்டத்தின்போது தலைவர்களை விட்டுவிட்டு அப்பாவி இளைஞர்களைக் காவலர்களும் உள்ளூர் ரௌடிகளுமாக லத்தியை வைத்து அடித்து மண்டையை உடைத்ததையும் மூர்க்கமாகத் தாக்கியதையும் பார்க்கப் பாவமாக இருந்தது. இந்த இளைஞர்கள் வாழ்க்கையில் செவிளில் ஒரு அறை கூட வாங்காதவர்கள் எனப் பார்த்தாலே தெரிகிறது. அடியைத் தாங்கும் திராணி இல்லாதவர்கள். முதன்முதலாக ஒரு போராட்டத்தில் பங்கேற்று அடி வாங்கியதும் குழந்தைகளைப் போல அழுது கலங்குகிறார்கள். இந்தளவுக்குக் கொடூரமாக இவர்களை நடத்தத் தேவையில்லை. அதேநேரம் இதற்குத் தீர்வுதான் என்ன?
இப்படிப் போராட்டக்காரர்களைத் தாக்குவதற்கு காவல்துறையின் விதிமுறைகளின் அதிகாரம் உள்ளது. ஆனால் தம்மைப் பாதுகாத்திட போராட்டக்காரர்களுக்கு சட்டத்தில் பாதுகாப்பில்லை. நமது சட்டம் போராட்டக்காரர்களுக்கு இடமளிக்கும் விதம் உருவாக்கப்படவில்லை. இது ஏன் என்று சிந்தித்தால் ஒன்று புரியும் - இந்திய ஜனநாயகம் மக்களின் முழுப் பங்கேற்பைக் கொண்டதோ அதற்கு இடமளிப்பதோ அல்ல. நம் மக்களும் அரசியலைத் தமது உரிமைகள், பொருளாதார தேவைகளைப் பொறுத்து மதிப்பிட்டு வாக்களிப்பதோ சிந்திப்பதோ இல்லை. பெரும்பான்மையான மக்களுக்கு அரசியல் அக்கறை மிக மிகக் குறைவு. ஆகையால்தான் அவர்களை உரிமையற்ற மந்தையாக நடத்தும் அரசுகளும் சட்டங்களும் அமைந்திருக்கின்றன. இவர்களுக்கு ஸ்விட்சர்லாந்து, கனடா போன்ற நாடுகளின் கருத்தெடுப்பு போராட்டம், ஆட்சியாளர்களை மீள அழைக்கும் உரிமை ஆகியவற்றைக் கொடுத்தால் அதை எந்த அக்கறையும் இன்றி வீணடிப்பார்கள் எனத் தோன்றுகிறது. நம் மக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என யோசித்தால் அதற்குப் பின்னால் 400-500 ஆண்டு அடிமை வாழ்க்கை, பஞ்சம், வறுமையால் ஆட்பட்ட வாழ்க்கையின் வரலாறு இருக்கும். இந்த வரலாற்றின் நீட்சிதான் இன்றுள்ள மோடி அரசு. ராகுல் காந்தி பிரதமர் ஆனாலும் இதே காவலர்கள் இப்படித்தான் போராட்டக்காரர்களை அடிப்பார்கள்.
தமிழ்நாட்டைப் பாருங்கள். சினிமா மோகத்தில் எவ்வளவு சுலபத்தில் தகுதியில்லாதவர்களை துளி கூட சிந்திக்காமல், பகுத்தறியாமல் வாக்களித்து அரியணையில் அமர்த்தி விட்டார்கள்; தேர்தலையே ஒரு பொழுதுபோக்காகப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இவர்களைப் போன்ற மக்களையே இந்தியாவில் பல மாநிலங்களில் காண்கிறோம். மக்களாட்சி குறித்த பிரக்ஞையும் புரிதலும் கல்வியில் இருந்தும், அரசியல் செயல்பாடுகளில் இருந்தும், பொருளாதார அறிவில் இருந்துமே வர முடியும்.
துளி கூட செண்டிமெண்ட் இல்லாமல் சிந்தித்து ஒரு நிறுவனத்தின் லாபக்கணக்கைப் பார்த்து முடிவெடுக்கும் முதலீட்டாளரைப் போல வாக்களிப்பவரே ஒரு நல்ல வாக்காளர். ஆனால் நம் மக்கள் ராணுவ உடை தரித்து பிரதமர் போஸ் கொடுத்தால் வாக்களிப்பார்கள். கோயில் கட்டி அங்கு போய் பிரதமர் தரிசித்தால் வாக்களிப்பார்கள். வாடி வாடி வாடி கைப்படாத சீடி எனப் பாடி ஆடிக் காட்டினால் வாக்களிப்பார்கள். நீங்கள் ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ. நீங்கள் நிறுவனத்தின் பொறுப்பில் வந்ததும் நட்டம் அதிகமாகி இழுத்து மூடும் நிலை வருமென்றால் முதலீட்டாளர்கள் உங்களை அடித்துத் துரத்துவார்கள். இந்நாடு பிரஜைகளின் வரியினால் நடக்கும் ஒரு நிறுவனம் மட்டுமே. அவ்வரிப்பணத்தைச் செலவழிக்க உரிமை கோரும் சடங்கே தேர்தல். அவர்களை ஏதோ பெரிய தியாகிகள் போன்றும், நடிகர்கள், ராணுவ தளபதிகள் போலவும் பார்க்கிற நம் மக்கள் கையில் எதாவது தனியார் நிறுவனம் போனால் என்ன கதியாகும் என யோசியுங்கள். "ரெண்டில ஒண்ணு பார்க்கலாம்" என டான்ஸ் ஆடிக் காட்டினால் கம்பெனியே போனாலும் பரவாயில்லை என்று பதவியில் தொடர விட்டுவிடுவார்கள். ஆனால் அப்படி பொருளாதார ரீதியாக மட்டுமே அரசியலைப் பார்க்க எவ்வளவு சிந்தனை ஆற்றலும், அவகாசமும், கல்வியும் மக்களுக்கு வேண்டும். இப்படியான திறனும் கல்வியும் இல்லாதவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தால் மக்களாட்சி கேவலமாகிவிடும் என உலகளவில் மக்களாட்சி ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அதற்காக வாக்குரிமை கொடுக்காமலும் இருக்க இயலாது. இந்தியாவின் அடிப்படையான சிக்கல் இதுதான்.
என்று மக்கள் துளி கூட செண்டிமெண்ட் இல்லாமல் தம்மைச் சுற்றி உள்ள நிலவரத்தைக் கவனிக்கிறார்களோ, ஒவ்வொன்றையும் பொருளாதாரச் சுரண்டலாக, ஏமாற்றாகப் புரிந்து கொள்கிறார்களோ, கோயிலுக்குப் போனதும் இங்கு ஒருநாளைக்கு எவ்வளவு வருமானம் வருகிறது, எதற்கு வருகிறது, எங்கு போகிறது, இங்கு பக்தனாக வரும் தனது உற்பத்திப் பங்களிப்பு என்ன, தன்னைப் போன்றோர் இல்லாமல் ஒரு கோயில் இருக்க முடியாது எனும்போது ஏன் அங்கு தனக்கு அதிகாரம் இல்லை என்று யோசிக்கிறார்களோ, ஏன் ஒரு தலைவருக்கு, அமைச்சருக்கு இவ்வளவு அதிகாரம், பணம், ஏன் தன் உழைப்பைச் சுரண்டியே பிறர் வசதியாக வாழ்கிறார்கள் என்று கேட்கிறார்களோ, இங்கு உழைத்து எவனும் இங்கு பணக்காரர் ஆவதில்லை, எல்லா பணக்காரர்களும் திருடர்களே எனப் புரிந்து கொள்கிறார்களோ, எல்லா அதிகார வர்க்கத்தினரும் கொள்ளையர்கள் தாமோ எனச் சந்தேகம் கொள்கிறார்களோ அதன் பிறகுதான் அவர்கள் இந்த மக்களாட்சி அமைப்பைச் சரிவரப் புரிந்து கொள்வார்கள். என்று ஒரு பிரதமரோ அமைச்சரோ நாடாளுமன்றத்தில் கடந்த ஓரண்டில் தம் ஆட்சியில் எந்தளவுக்கு விலைவாசி குறைந்திருக்கிறது, உற்பத்தி அதிகரித்திருக்கிறது, ஏன் வரி குறையவில்லை என்று பேசி நியாயப்படுத்துகிறார்களோ அன்றுதான் இது உண்மையான மக்களாட்சியாக இருக்கும். இத்தனை ஆயிரம் பேர்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் கொடுத்தோம், வீடு கட்டிக் கொடுத்தோம் என்று ஒன்றிய அமைச்சர் பேசினால் எங்கள் பணத்தை எடுத்து எங்களுக்கே தருவதில் ஏன் நீ பெருமை காண வேண்டும், நீ என்ன உற்பத்தி பண்ணினாய், நீ என்ன உபரியைப் பெருக்கினாய், உற்பத்திக் கணக்கென்ன, லாபக் கணக்கென்ன, உன்னால் என்ன பிரயோஜனம் என மக்கள் திரும்பக் கேட்டால் இந்தியா சிறந்த மக்களாட்சி அரசைப் பெறும். கடவுளே வந்தாலும் சந்தேகத்துடன் கேள்வி கேட்பேன், எவனையும் நம்ப மாட்டேன் என்பவரே அத்தகைய மக்களாட்சிக்குத் தகுதியான பிரஜை.
திருவண்ணாமலை இலக்கியப் பயிற்சி முகாமில் பிரபாகர் வேதமாணிக்கம் இதைப் பற்றிப் பேசுகையில் கல்வியாளர்களே இந்ந்லைக்குப் பொறுப்பு என்றார். அதில் நிறைய உண்மை உண்டு - பள்ளிகளில் அன்றாட உலகைப் பொருளாதார அலகுகளின் படிப் பார்க்கச் சொல்லித் தருகிற பாடங்கள் இல்லை. கல்வியின் பயன்மதிப்பு என்ன, அது எப்படி கட்டணத்துக்கு ஈடாகிறது என்று கேட்கிற ஒரு மாணவரைக் கூட நான் பார்த்ததில்லை. வெறுமனே மொழி, கணிதம், வரலாறு, அறிவியல் மட்டுமே போதிக்கிறோம். பத்து ரூபாய்க்கு ஒரு பழம் வாங்கலாம் என்றால் அந்த பத்து ரூபாய் மதிப்பு எப்படி பழத்தின் மீது ஏற்றப்படுகிறது என குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தந்து அவர்களைக் கேள்வி கேட்கத் தூண்டுவதில்லை. சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கும் பணத்துக்குமான தொடர்பை விசாரிக்கச் சொல்லித் தருவதில்லை. கடவுளையும் அரசையும் இறையாண்மையையும் கேள்வி கேட்க உயர்கல்வியில் கூட அனுமதிப்பதில்லை.
இதெல்லாம் இங்கு நடக்கும் என நம்பிக்கை இல்லை. ஒரு லட்சம் தந்தால் மாதம் 50,000 வட்டியாகத் தருகிறேன் என்று விளம்பரம் பண்ணினால் உடனே பத்தாயிரம் பேர்கள் ஒரு கோடியைக் கொண்டு போய் மோசடிக்காரர்களிடம் கொடுக்கிற நாடு இது. அதெப்படி ஒரு லட்சத்துக்கு இப்படி வட்டி தர முடியும், அதில் அவனுக்கு என்ன லாபம் வர முடியும், இதற்கு முன் இதைச் சாதித்திருக்கிறானா, அதற்கான ஆதாரம் என்ன, வங்கியால் செய்ய முடியாததை இவன் எப்படிச் செய்ய முடியும், நம் பணத்தை எந்தெந்த பங்குகளில் முதலிட்டு இவன் நமக்கு இவ்வளவு வட்டி தருகிறான், அதில் ஏன் பிறரால் முதலீடு பண்ணவில்லை என்று யோசிக்காத கூட்டத்தினர் இங்கு உண்டு. தம்மை எதாவது ஒரு மோசடி மனசாட்சியைச் சீண்டினால் நடந்து திரள் திரளாகத் தெருவுக்கு வந்து முழக்கமிட்டு லத்தியடி வாங்கி அடுத்த நாள் அன்றாட வேலையைப் பார்க்கப் போய், தம் தலைவர்கள் தம் ரத்தத்தை வைத்து ஐந்து நட்சத்திர விடுதிகளில் பேரம் பேசுவது தெரியாமல் அலைந்து திரிகிற மக்களின் தேசம் மட்டுமே இது. இதுவே நம் சாபக்கேடு!
கருத்துகள்