முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாசிப்பின் போது ஒரு நாவல் மலரும் தருணம்


 

ஒரு நாவல் நல்ல நாவலாவது அது நன்றாக எழுதப்படும்போது அல்ல. சொல்லப்போனால், அது எவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்பது குறித்து எழுத்தாளருக்கு ஒரு குழப்பம் எப்போதுமே இருக்கும். அந்நாவல் முழுமையாக மலர்வது அது நன்றாக வாசிக்கப்படும்போதே. அதற்காக நாவலாசிரியர் காத்திருக்க வேண்டும். என்னுடைய "ரசிகன்" நாவலுக்கு சில விமர்சனங்கள் அது வெளியானபோதே வந்துள்ளது என்றாலும் அதன் மிகச்சிறந்த வாசிப்பு இப்போதே மா. அண்ணாமலையால் நிகழ்ந்திருக்கிறது. அவரது அபாரமான வாசிப்பைப் படிக்கவே எனக்கு இனிப்பாக இருந்தது. நீங்களும் படியுங்கள். - ஆர். அபிலாஷ்

*****
சாதிக் : தோல்விகளால் ஆன சாகசக்காரன் - மா அண்ணாமலை
நூலனுபவம் ​(38)
நூல் : ரசிகன்
ஆசிரியர் : ஆர். அபிலாஷ்
பதிப்பகம் : உயிர்மை
பக்கங்கள் : 400
வகை : நாவல்
​ஒரு கதாபாத்திரத்தின் அகமனச் சிக்கல்களை இவ்வளவு அழுத்தமாக நான் சமீபத்தில் வாசித்ததில்லை. சாதிக், ஒப்பனைகள் ஏதுமற்ற ஒருவன்; உண்மைக்கும், போலிக்குமிடையில் உலவும் ஒருவன் என வெகுஜனத்திலிருந்து வேறுபடுபவன். ஒரு கதாபாத்திரத்தை வாசகனுக்கு இவ்வளவு அணுக்கமாகக் காட்டும் போது பதற்றமேற்படுகிறது. காரணம், அப்பாத்திரத்தின் தீவிரம்.
​அத்தீவிரத்தின் முடிவு மரணமாகவே இருக்கிறது. அஃதொன்றுதான் அவர்களுக்கான தீர்வு? இருக்கலாம். அவர்களால் இயல்பாக நாம் வாழும் சாதாரண வாழ்க்கையை, சமரச வாழ்வை வாழ முடியாதா? என்ற கேள்விகள் எழும் போது அச்சம் உண்டாகிறது.
​சாதிக்கின் வாழ்க்கைக்கும் அவன் எதிர் கொள்ளும் சூழ்நிலைகளுக்கும், ஒரு வரைபடம் வரைந்தால் அது ஏற்ற இறக்கங்களாலான சீரற்ற ஒன்றாகவே அமையும். அவன் நிஜ வாழ்க்கையோடு புரியும் எண்ணற்ற சமர்களில் வென்றாலும் இறுதியில் எதார்த்தமே வெல்கிறது. அந்த எதார்த்தங்கள் போலிகளாலும், சந்தர்ப்பவாதங்களாலும் உண்டாக்கப்பட்டிருக்கின்றன. அதை பின்பற்றும் மாபெரும் திரளின் முன் சாதிக் போன்று விரல்விட்டு எண்ணக்கூடிய நிஜங்கள் தோற்றுப் போகவே செய்யும். அந்தளவிற்கு நம்மின் போலிகளால் இவ்வுலகை நிரப்பியிருக்கிறோம். பிடிப்பும், பிடிவாதமும் கொண்ட இளைஞன் ஒருவன் நம் கண் முன்னே கரைகிறான். நம்மால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. ஒரு கதாபாத்திரத்தின் அழிவை கையறு நிலையில் காணக் கிடைப்பது வாதை.
​நாவலின் மாபெரும் பலம் மொழி. அபிலாஷ் அம்மொழியைக் கொண்டு புரியும் நர்த்தனங்களின் லயிப்புகளில் நாம் நீர்ச்சுழலை நோக்கி நகரும் பருப்பொருளாய் ஈர்க்கப்படுகிறோம். அதிலும் நாவலின் இறுதிப் பகுதிகளில் சாதிக் தன் இறுதியை நோக்கி நகர்கிறான். அவன் இறப்பதற்கு முன்னதாக, அதன் பின்னதாக என ஆசிரியரின் மொழியை வாசிக்கும் போது கனமான இரும்புக்கட்டியை நம்மோடு சேர்த்துக் கட்டிக்கொண்டு நீரில் மூழ்குவது போன்று உணர்கிறோம். போலவே சில வருணிப்புகளின் உவமைகள், புதுமையாக 'வாவ்' சொல்ல வைக்கின்றன.
மழை இன்னும் தூரலாகச் சொரிந்து தேங்கின வெள்ளத்தை மயிற்கூச்செரியச் செய்து கொண்டிருந்தது.
நம்மோட சனநாயக அமைப்புங்கறது நிலச்சுவந்தார்கள் மற்றும் பூர்ஷுவாக்களுடைய கூட்டுத் திருட்டு.
அருகில் வந்ததும் கோள்களை இழுத்து ஜீரணித்து விடும் சூரியன் போல் இருந்தாள்.
சாதி உணர்வு ரெண்டு விஷயங்களைச் சார்ந்தது அதிகாரம் மற்றும் தூய்மையுணர்வு.
​ நாவலின் தொடக்கத்தில் சாதிக்கின் அதீதத்தால் அவனைத் தள்ளி நின்றே வேடிக்கைப் பார்க்கிறோம். ரெஜினாவுடனான காதலை வலுக்கட்டாயமாகத் துறந்து தன்னைச் சிதைத்துக் கொள்ளும் போது அவன் அருகில் சென்று விடுகிறோம். உதாரணமாக நாவலின் இறுதியில் வரும் இந்தப் பகுதியை சொல்லலாம்.
​நான் ரொம்ப நாட்களுக்குப் பிறகு புத்தகம் படிக்க முயன்று மனம் ஒன்றாமல் போராடிக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் ஆர்வமிழந்து சாதிக் உடன் டிவி முன் அமர்ந்தேன். “அன்னை காளிகாம்பாள்” ஓடிக்கொண்டிருந்தது. சாதிக் சாய்ந்து படுத்து ஆழமாய் மூச்சு வாங்கினான். அவன் கண்கள் மட்டுமே துறுதுறுப்பாய் டிவி காட்சிகளைப் பின்தொடர்ந்தன. முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. யானை கோலம் போட்டு பாட்டுக்கு டான்ஸ் ஆடி தியேட்டருக்கு போய் படம் பார்க்கக்கூட முயன்றது. அது தோப்புக் கரணம் போட்டு சலூட் அடித்தது. யானை ரஜினி ரசிகன் வேறு. ஒரு கட்டத்தில் காளிகாம்பாளிடம் ஹீரோயின் கறுப்புக் கண்ணாடியைக் கொடுத்து போடக் கேட்க அவள் “என் பேரு கண்ணாம்பாள். எனக்கு ஆயிரம் கண்கள். இதில் எந்த கண்ணுக்கு இந்தக் கண்ணாடியை போட?” எனக் கேட்க நான் என் சகிப்புத்தன்மையை இழந்து டிவியை அணைத்தேன்.
​சாதிக் அசையும் சக்தி இன்றி சாய்ந்த வாகில் சொன்னான், “அதைப் போடு.”
​“எப்படிடா இதைப் பார்க்குறே? எரிச்சலாகுது.”
​“எனக்குப் பிடிச்சிருக்கு.”
​“ஏன்?”
​“அந்த யானை என்னை மாதிரி.”
​நான் அப்பதிலை எதிர்பார்க்கவில்லை. பிறகு டிவியை இயக்கி படத்தைப் பார்த்தபடி அவன் சொன்னான், “பிடிக்காத வேலையை மணிக்கணக்கா மெஷின் மாதிரி பண்ணிக்கிட்டு வீட்டுக்கு வந்தா எனக்கு ஒண்ணுக்கும் சக்தி இருக்கிறதில்லை. எனக்கு இந்த மாதிரி படம் தான் பிடிக்குது. சொல்லப்போனால் இதைவிட கேவலமான படம் பாக்கணும்ன்னு தோணுது." (பக்.309)
சாதிக்கின் அழிவைக் காட்டும் சித்திரமிது. நானும் கூட மன நெருக்கடிக்கு உள்ளாகும் நேரங்களில் பழைய கருப்பு வெள்ளை படங்கள் மீது ஆவல் கொண்டு பார்த்திருக்கிறேன். ஏன்? எதனால்? என்றெல்லாம் உடனடியாக சொல்ல முடிந்ததில்லை. அவை ஒருவித பாதுகாப்பு உணர்வை எனக்குக் கொடுப்பதாய் எண்ணிக்கொண்டேன். உண்மையில் நிஜ உலகின் சமர்களோடு போராட முடியாமல் போகும் என் சோம்பேறித்தனங்களுக்கு ஒரு அடைக்கலம் தேவைப்பட்டது.
இப்படி அவன் வேதனைகளைக் கண்ணுறும் போது அவன் முன்பிருந்த சாதிக்காகவே இருந்திருக்கக் கூடாதா? என மனம் ஏங்கத் தொடங்குகிறது. இதுதான் நாவலின் வெற்றி. முடிவு தெரிந்து விட்ட ஒருவனின் முடிவை அறியும் பொழுது அதன் துக்கத்தை தாளாது மனம் தளர்வடைகிறது. அவ்வளவு செறிவான மொழிநடையை கொண்டுள்ளது. ஆனாலும் நம்மால் அத்துக்கத்தை அனுபவிக்க மட்டுமே முடிகிறது; அதை மட்டுமே நம்மால் செய்ய முடியும். ஏனெனில் நாவலின் தொடக்கமே சாதிக்கின் இறப்புச் செய்தியோடுதான் தொடங்குகிறது.
ஒற்றைக் கதாபாத்திரத்தின் மூலம் நானூறு பக்க நாவலை சுவாரஸ்யமாக்கிட முதல் அத்தியாயத்திற்கு 'செங்கதிர்' எனும் சிறுபத்திரிக்கை கை கொடுக்கிறது. அதுதான் சாதிக்கின் பிடிவாதத்திற்கு எரிபொருளாகிறது; அவனை எரிக்கவும் செய்கிறது. ஒன்றின் அதீதத்தைக் கண்டடைந்து தோல்வியுற்றவனின் வாதைகள் சொல்லில் அடங்காதவை. துர்பாக்கியமாக இறுதிவரை அவனின் அடையாளமாகவே அது மாறிப் போகிறது. அவன் மறக்க நினைத்தாலும் அச்செயல்களின் கடந்த காலங்கள் அவனை விடுவதில்லை.
​கிளம்பும் போது சாதிக் என்னிடம் சொன்னான் “எங்க போனாலும் அந்த பத்திரிகை எங்கூடயே வருது. அத்தனை காப்பியையும் அழிச்சிட்டாலும் அதோட நிழலை அழிக்க முடியாதுன்னு தோணுது. நான் என் வாழ்க்கையை முழுக்க புதுசா துவக்கணுமுன்னு நினைக்கிறேன். ஆனால் எப்பவுமே முடியறதில்ல. கடந்த காலத்துல இருந்து ஆயிரம் குரல்கள் கேட்டுக்கிட்டே இருக்கு.”
​“நீ ஒரு முக்கியமான பத்திரிகை நடத்தி இருக்கே சாதிக். அதுக்கு பெருமைப்பட்டுக்கோ.”
​“இல்ல சங்கர். அது எனக்கு எவ்வளவு அவமானமா இருக்குன்னு உனக்குப் புரியல.” (பக்.324)
​இரண்டாவது அத்தியாயமாக ரெஜினாவின் காதல். போலிகளற்ற ஒருவன் இதிலும் தோற்றுப் போகிறான். அத்தோல்வியிலிருந்தே அவனின் அழிவு தொடங்குகிறது. ஒரு லட்சிய இளைஞனாகத் நம்மிடமிருந்து தூரமாக வாழ்ந்து கொண்டிருந்தவன். இப்பகுதிகளில் கொஞ்சம் நம்மருகே நடந்து வருகிறான். இவ்வத்தியாயத்தில் சாதிக்கை நம்மோடு சேர்த்துக்கொள்ள நிறைய பகுதிகள் வருகின்றன. அதிலொன்றில் ரெஜினாவைத் தேடி வரும் சாதிக் அவள் எங்கே இருக்கிறாள் எனத் தெரியாமல் அவளுடைய வீட்டை மட்டும் கண்டடைகிறான். ஆனால் அவள் அங்கில்லை என்பதைக் கண்டறிந்த பின் பக்கத்து வீட்டுக்காரரிடம் தான் தங்கியிருக்கும் ஓட்டலைச் சொல்லுகிறான்.
​நான் அவனிடம் கேட்டேன்: “ஏன் ஓட்டல் பெயர சொன்னே?”
“எப்பிடியும் அவளோட அப்பாவ பார்த்தாகணும். ஆக்சுவலி, நான் இன்னிக்கு அவர் இருந்திருந்தா நேரேபோய்ப் பேசி முடிச்சிரலாமுன்னுதான் நெனச்சேன். இனி அவரே என்னைத்தேடி வருவாரு. அவளோட கதி என்னாச்சுன்னு தெரியலையே?”
“தெரியாத ஊருக்கு வந்து அடிவாங்கிச் சாவணுமா?”
“எல்லா ஊரிலயும் அதே மனிசங்கதானே. இப்பிடி தயங்கித் தயங்கித் தாண்டா நாம வெளங்காம போறோம். யோசிக்கிறதை நிறுத்தணும். நெனச்சதே அப்பவே பண்ணணும்.”
“வாயைக் கொடுத்து அடி வாங்குறதுன்னா இதுதான்.” ( பக்.216)
இந்நிகழ்வு காதலின் தீவிரத்தில் இருக்கும் பெரும்பாலான இளைஞர்களின் சாகசச் செயல். இதன் மூலமும் சாதிக்கை நாம் இன்னும் நெருக்கமாக அறிந்து கொள்கிறோம்.
​மூன்றாவது அத்தியாயத்தில் அவன் ரஜினி ரசிகர் மன்றத்தில் இணைந்து செயல்படுகிறான். நாவலின் தொடக்கத்தில் பிரமிப்பாகத் தெரிந்தவன் இங்கு பரிதாபகரமானவனாக மாறிப்போகிறான். ​Bonnie Chamberlain எழுதிய 'The Face of Judas Iscariot' கதையில் இயேசுவின் வாழ்க்கையை ஓவியங்களாக வரைய ஓவியர் ஒருவர் பணிக்கப்படுகிறார். குழந்தை இயேசுவிற்கான கள்ளம் கபடமில்லாத முகத்திற்கு மாதிரியாக வரும் சிறுவன், காலங்கள் பல கடந்த பின் இயேசுவை காட்டிக் கொடுத்த ஜூடாஸ் இஸ்கேரியத்தின் கொடூரமான முகத்திற்கும் பொருந்தி போகிறான் என்பதாக முடியும். அது போன்றதொரு அவல நிலையை சாதிக்கும் அடைகிறான்.
​இவைகளால் மட்டுமே இந்நாவல் சிறப்படையவில்லை. ​அதில் வந்து போகும் சாமானியர்கள், பேசிய விசயங்களில் அதன் சுவை குன்றாமல் பாத்துக் கொள்கிறார்கள்.
​எனக்கிது, அபிலாஷை வாசிக்கக் கிடைத்த அவரின் முதல் புனைவு. கட்டுரைகளில் பழகியிருந்த எனக்கு புனைவின் மூலம் வேறொரு அனுபவமாகத் தெரிந்தார். மேலும் ​கட்டுரையை விட புனைவில் எளிமையாகத் தெரிகிறார்.
சிறுபத்திரிக்கை, தனிமனிதன், சமூகம்,
எழுத்தாளர்கள் என எல்லாவற்றிலும்
உள்ள போலிகளை சமரசமின்றி நாவல் பேசுகிறது. உதாரணமாக புத்தகங்கள் அதிகமாக எழுதும் இக்காலகட்டத்தைப் பற்றிய சாதிக்கின் கருத்துகள் இவை:
"​வருசா வருசம் வந்து குவியுற புத்தகங்களை படிக்க ஒரு ஆயுசு இருந்தா பத்தாது. முதலாளித்துவ உற்பத்தி முறை இலக்கியத்துல வந்ததோட குளறுபடி. "
"மார்க்ஸ் சொன்னது மாதிரி பழையபடி இலக்கியம் பூர்ஷீவாக்களுக்கும் ஆண்டைகளுக்குமான பொழுதுபோக்கு வஸ்துவா மாறிப் போச்சு."
" ​இன்னிக்கு வண்டி வண்டியா எழுதுற வந்துட்டாங்க. நான் முன்னே சொன்னேன் இல்லியா. அந்த பூர்ஷீவா வாசகர்களுக்காக எழுதித் தள்ளுற அடிமை எழுத்தாளர்கள்."
​எனக்கென்னவோ இவையெல்லாம் சாதிக்கின் வழி அபிலாஷ் பேசுவதாகவே படுகிறது. உபயம் : 'எழுத்தாளராக இருப்பது எப்படி?' நூல்.
நாவலாக அதன் போக்கில் நாம் சிலாகித்திருக்க நமக்கு நிறைய வழங்கும் இந்நூல், சில குழப்பங்களாலும் ஆக்கப்பட்டுள்ளது. முதலாவது, கதை சொல்லி. பெண்களைக் காணும் இடங்களில் எல்லாம் அவர்களின் அத்தனை விஷயங்களையும் வருணிக்கிறான். ஏன் இவ்வாறு அப்பாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது என்பதில் நமக்கு குழப்பம் ஏற்படுகிறது. அதிலும் சாதிக் மூளை சிதறி தரையில் விழுந்து கிடக்கும் போது பதற்றமாக வரும் பிரவீணாவையும் வருணிக்கிறது. இரண்டாவது சாதிக். ரெஜினாவை தற்கொலைக்கு தூண்டியதாக சிறைக்குச் சென்று வரும் சாதிக், அதன் பின்னரே தன் நடவடிக்கைகளை மொத்தமாக தலைகீழாக்கி விடுகிறான். அவ்வொரு காதல் தோல்விதான் அவனை அழிவை நோக்கி நகர்த்துகிறதா? அக்காதல் தோல்விக்கும் அவன்தானே காரணம். அல்லது தன் கடந்த கால அவமானங்கள், வெறுமைகள் தான் காரணமா? அல்லது வாசகனே அவற்றை கண்டறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை சாதிக்கின் அதீதமான பிடிப்புகளே அவனை மாற்றி விடுகின்றனவா? என எண்ணற்ற வினாக்களுடன் தான் நாம் நூலை வாசிக்க முடிகிறது. ஆச்சரியமாக இவ்வினாக்களுக்கான நிகழ்வுகளே நாவலை சுவாரசியமாக்குகின்றன.
நன்றி அபிலாஷ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...