முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மோடியின் சீன உறவு - சவால், மௌனம், சரண்டர்

 




செய்தி: இந்தியாவின் முக்கிய மின் உள்கட்டமைப்பு திட்டங்களில் பங்கேற்க நான்கு சீன நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி இதைக் கடுமையாகக் கண்டித்துள்ளது.

என் கருத்து: 2020இல் லடாக்கை சீனப் படையினர் ஆக்கிரமித்ததுடன் இந்திய வீரர்களைத் தாக்கிக் கொன்றார்கள். இதன்பிறகே சீன எதிர்ப்பு இந்தியாவில் குறிப்பாக இணையதளங்களில் வலுத்தது. அப்போது அமேசானில் பொருட்களின் ரெய்வ்யூக்களில் தொடர்ச்சியாக தேசபக்தர்கள் தோன்றி "இது சீனப் பொருள். இதை எதிர்க்க வேண்டும்" என்பார்கள். ஆனால் மோடியின் அரசு சீன எதிர்ப்பை பிடிக்காத மனைவியை பார்க்கும்போதெல்லாம் டார்லிங் எனக் கொஞ்சுகிற கணவரைப் போலத்தான் கையாண்டது. போகப்போக சீன எதிர்ப்பை அது கைவிட்டது. பல சீனப் பொருட்களே நம் சந்தையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் அமெரிக்காவுக்கு கடும் எதிரியாக ஆசிய ராட்சசனாக சீனா உருவாகி வந்ததால் மோடி கொஞ்சம் தயங்கித் தயங்கித்தான் சீனாவைக் கையாண்டார். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் டிரம்பிடம் போய் வணக்கம் வைத்தார், கட்டிப் பிடித்தார், வாய்நிறைய சிரித்தார். பாகிஸ்தான் உடனான யுத்தம் இதற்கு முக்கிய திருப்புமுனை - சீன தளவாடங்களைப் பயன்படுத்தி பாகிஸ்தான் இந்திய ராணுவத்தைத் திணறடித்தது. அப்போர் இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கக் கூடிய நிலையில் சீனா வென்றுவிடக் கூடாதே எனும் பயத்தில் டிரம்ப் குறுக்கிட்டு இந்தியாவையும் பாகிஸ்தானையும் போர் நிறுத்தம் பண்ணச் சொன்னதாகப் பத்திரிகைகள் எழுதின. இந்தக் கட்டத்தில் சீனாவும் ரஷ்யாவும் ஒரு பக்கமாக நின்று அமெரிக்காவுக்குச் சமமாகத் தம்மைக் காட்டிக் கொண்டன. அமெரிக்கா ஈரான் மீது தொடுத்த போர் அடுத்த முக்கியத் திருப்புமுனை. இப்போரிலும் சீனாவின் பங்கு பெரிது. அது அமெரிக்காவை ஈரான் கடுமையாக எதிர்க்கவும், தோல்வியின் விளிம்புக்குத் தள்ளவும் உதவியது. இப்போரின் முடிவில் சீனா ஒரு வலுவான ராணுவ தேசமாக அமெரிக்காவை சில அடிகள் பின்னுக்குத் தள்ளிவிட்டது. ஏனென்றால் சீனாவுக்கு எதிராகப் (ரஷ்யாவுக்கு எதிராகவும்தான்) பேச டிரம்பே தயங்குகிறார். அது போக கனிமவளத்துக்காக அவர் அங்கு சென்று ஒப்பந்தங்களும் போட்டார். ஆக தராசு சீனா, ரஷ்யா பக்கமாய் சரியத் தொடங்கிவிட்டது. ஹிந்து போன்ற நாளிதழ் நடுப்பக்கங்களில் இப்போதே இந்தியாவின் அமெரிக்கச் சார்பு வெளியுறவு தவறானது, ஈரான் போரில் இந்தியா நடந்து கொண்ட விதம் தவறு எனக் கூறும் கட்டுரைகள் வந்து கொண்டிருக்கின்றன. மோடியும் மாறிவிடத் தீர்மானித்திருக்கிறார். அதற்குச் சான்றுதான் மேற்சொன்ன மின் உள்கட்டமைப்பு திட்டங்களில் சீனா பங்கேற்கும் ஒப்பந்தத்தை இந்தியா போட்டுள்ளது. அதாவது இந்திய உற்பத்திக்கே முதலிடம், ஆத்ம நிர்பண் என நெஞ்சை விரித்துக் கூவி வரும் பாஜகவினர் தடாலடியாக கரணம் அடித்திருக்கிறார்கள்.

                        

இங்கு மற்றொரு விசயத்தையும் கவனிக்க வேண்டும்: சீனா பக்கம் இந்த அரசு இதற்கு முன்பே சாய்ந்திருந்தால் 20 ராணுவ வீரர்கள் மட்டுமல்ல பாகிஸ்தானுடனான போரில் இறந்த மக்களின் உயிர்களையும் காப்பாற்றியிருக்கலாம். சீனாவுடன் நல்லுறவை ஏற்படுத்தி பாகிஸ்தானைக் கட்டுக்குள் வைத்திருந்திருக்கலாம். அது பாகிஸ்தானை அமெரிக்கா பக்கம் சாய்த்திருக்கும். ஒருபக்கம் மட்டுமே இருக்க வேண்டிய நிர்பந்தம் பாகிஸ்தானின் நிலையை பலவீனப்படுத்தி இருக்கும். நடந்து முடிந்த அமெரிக்க-ஈரான் போரில் பாகிஸ்தான் ஒரு இடைத்தரகர் அந்தஸ்தைக் கொண்டு தன் உலக அந்தஸ்தைப் பெருக்கியது. இதை இந்தியா தடுத்திருக்க முடியும். சீனா, ரஷ்யா, ஈரான் நட்பைப் பயன்படுத்தி ஈரான் போரின்போது கச்சா எண்ணெய், பெட்ரோல் விலை உயர்வு இந்தியாவைப் பாதிக்காமல் பார்த்திருக்க முடியும். ஈரான் போருக்கு முன் இஸ்ரேலுடன் இந்தியா பாராட்டிய நல்லுறவும் இப்போது கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது. இஸ்ரேலை இப்போது அமெரிக்காவும் கைவிடத் தொடங்கி உள்ளது. இந்தியாவுக்கு இஸ்ரேல் தரும் உளவு மென்பொருட்களைத் தவிர வேறெந்த பலனும் இல்லை என்றாலும் மோடிக்கு ஏதோ தனிப்பட்ட சில உறவுகள் இஸ்ரேல், அமெரிக்காவிடம் உள்ளது என ராகுல் காந்தியும், பிற எதிர்க்கட்சியினரும் சொல்லி வருவதில் சிறிது உண்மை இருக்க வேண்டும். அல்லாவிடில் அவர் இப்படி விழுந்து விழுந்து அமெரிக்காவை ஆதரிக்கவும் இப்போது கால தாமதமாக சீனாவையும் அடிபணியவும் அவசியம் இல்லை. யோசித்துப் பாருங்கள் - இப்போதைய ஒப்பந்தம் நமது உள்கட்டமைத் திட்டங்களில் சீனாவுக்கு இடம் அளிக்கிறது. இது நமது பாதுகாப்புக்குப் பாதகமாகும். இதைக் குறித்து சங்கிளுக்குக் கவலை இல்லையா?

உள்ளூரில் வாக்கு எந்திர மோசடி, வாக்காளர் பட்டியல் திருத்தம், தொகுதி மறுவரைவு என தேர்தல்களை வெல்வதில் காட்டுகிற புத்திசாலித்தனத்தை மோடி வெளியுறவுத் துறை விசயங்களில் காட்டுவதில்லை. ரொம்பவே திக்குமுக்காடுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...