போலீஸ் தடியடியில் அசுதோஷோ அபிஜீத்தோ பிற தலைவர்களோ அடிவாங்காமல் தப்பிவிட்டார்கள். ஆனால் அப்பாவி இளைஞர்களை ரத்தம் சிந்த வைத்தார்கள். ஒரு முதியவரை உண்ணாநோன்பிருக்க வைத்துவிட்டு அவர் குத்துயிரானபோது பெயருக்கு இவர்கள் உண்ணாநோன்பு இருப்பதாக நடித்துவிட்டு முடித்துக் கொண்டார்கள். இவர்களிடம் எதுவோ அழுகிப் போயிருக்கிறது. இந்த கரப்பான் தலைவர்கள் கார்ப்பரேட் மேலாளர்களைப் போல தலைமை தாங்குகிறார்கள். வேலை பார்ப்பது கீழே இருப்பவர்கள், பதவி உயர்வு இவர்களுக்கு.
அதே போல இந்த அபிஜீத் இந்தக் கரப்பான்பூச்சி கட்சி ஆரம்பிக்கும் முன்வரைக்கும் பாஜகவை விமர்சித்துப் பேசியதோ எழுதியதோ இல்லை. எதிலும் பட்டுக்கொள்ளாமல் ஆம் ஆத்மிக்காக தேர்தல் வியூகம் வகுப்பது, டிஜிட்டல் கன்டெண்ட் வேலைகளைப் பண்ணிக் கொடுக்கிறார். அவருக்கு வெளிநாட்டில் படிக்க நிதியளித்து ஒரு பாஜககாரர் அனுப்புகிறார். அங்கிருந்து சட்டென ஒரு பகடிப் பதிவு போட்டு அதை அமைப்பாக அறிவித்து இந்தியா வந்துப் போராட்டத்தை அறிவிக்கிறார். அப்போதும் கூட அவர் இந்துத்துவா குறித்தோ, பாஜகவின் ஊழல்களைப் பற்றியே பேசவில்லை. மோடியின் சர்வாதிகாரம், தேர்தல் ஆணையத்தை முறைகேடாகப் பயன்படுத்துவது, வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் குறித்து கிஞ்சித்தும் புகார் இல்லை. ஒப்பிடுகையில் சிறு பிரச்சினையான தேர்வுத்தாள் கசிவை மட்டும் எடுத்து அதை மட்டுமே பேசி ஒரு அமைச்சரின் பதவி விலகலை மட்டுமே கோருகிறார். உண்மையான மக்கள் நலன் அரசியலைப் பேசுவோரால் எப்படி இவ்வாறு பல பெரிய பிரச்சினைகளை விட்டுவிட்டு செலக்டிவ்வாக விமர்சிக்க முடியும்? ஏன் இப்போராட்டம் மோடி எதிர்ப்பாக இருக்கக் கூடாது என்பதில் அபிஜீத் மும்முரமாக இருக்கிறார்?
இந்த கரப்பான் கட்சியில் எதுவோ அழுகிப் போயிருக்கிறது. யோசித்துப் பாருங்கள் - இக்கட்சியின் போராட்டங்களை டிஜிட்டலாக சமூகவலைதளங்களில் முன்னெடுக்க, பல குழுக்களை உருவாக்க இவர்களிடம் எக்கட்டமைப்பும் இல்லை. இது இயல்பாகத் தன்னெழுச்சிதாக நடப்பதும் இல்லை. ஆனாலும் அபிஜீத் இதை எப்படி எங்கிருந்து உருவாக்குகிறார்? அவரது ஆரம்பப் பதிவு தன்னிச்சையாக வைரலானதா அல்லது அவர் அதற்குச் செலவு பண்ணி வைரலாக்கினாரா? இவ்வளவு போராட்டங்களை ஒவ்வொரு நகரமாய் பறந்து பறந்து போய் நடத்த எவ்வளவு பணம் வேண்டும்? இவருக்கு நிதியளிப்பது யார் எனும் கேள்விக்கு பதிலே சொல்வதில்லை. மக்கள் தாமாகத் தரும் பணம் என்கிறார். அப்படியெல்லாம் மக்களாகப் போய் கொட்டுவார்களா என்ன?
நீங்கள் உங்கள் பாட்டுக்கு அனுமதியின்றி ஜந்தர் மந்தரின் போராட முடியாது. இவர்களால் மட்டும் எப்படி முடிந்தது? அனுமதி இன்றிப் போராடிய இவர்களை ஏன் ஆரம்பத்தில் காவல் துறையினர் அனுமதித்தனர்? பாராளுமன்றத்தை நோக்கி அவர்கள் வருகிறார்கள் எனத் தெரியும் வரை பாஜக அரசு அவர்களைச் செல்லமாகவே நடத்தியது. எனில் பாஜகவின் யார் எதற்காக கரப்பான்களை வளர்த்து விடுகிறார்கள்? ஏன் நட்டா இவர்களைச் சந்தித்து உரையாடினார்? எத்தனையோ மாதங்கள் கோடிக்கணக்கில் திரண்டு போராடியும் சீக்கிய விவசாயிகளைச் சந்திக்க முன்வராத பாஜக தலைமை ஏன் சில நாட்களில் கரப்பான்களிடம் இணக்கம் காட்டியது? ஏன் இன்னொரு பக்கம் காவலர்களை ஏவித் தாக்கினார்கள்? எனில் பாஜகவினுள் உட்கட்சி முரண் நிலவுகிறதா?
கரப்பான்களின் போராட்டத்தின் பின்னால் ஏதோ பாஜக தலைமை அரசியல் காய்நகர்த்தல்கள் இருப்பதாக எண்ணுகிறேன். அவர்கள் இவர்களை வைத்தாட இவர்கள் அப்பாவி இளைஞர்களை வைத்தாடுகிறார்கள். இவர்களுக்குச் சம்மந்தமில்லாமல் தன்னெழுச்சியாக வேறு பல இளைஞர்கள் இன்னொரு பக்கம் போராடுகிறார்கள்.
இப்போராட்டத்தை மோடியின் தலைமை மீது அழுத்தம் போட்டு அவர் பலவீனப்பட்டு வருவதாகச் சித்தரித்து அவரிடத்து இன்னொரு தலைவரைப் பரிந்துரைக்க சில உட்கட்சிக் குழுக்கள் பயன்படுத்தப் போகின்றன. அடுத்த இரு ஆண்டுகளில் இதைப் போல பல போராட்டங்கள், விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கும். ஆனால் அவை ஒட்டுமொத்தமாக பாஜகவை பலவீனப்படுத்தாமல் ஏதாவது ஒரு சின்ன விசயத்தை முன்னிட்டு பெரிதாக நடத்தப்படும். ஏன் என்றால் அவர்களுடைய இலக்கு 2028க்குள் மோடியை ஓய்வறிவிக்க வைப்பது. கடந்த தேர்தலில் மோடி ஆட்சியமைக்கச் சிரமப்பட்டார். அப்போதே அவரது ஆட்சி நிலைக்காது என்றும், ஆர்.எஸ்.எஸ் அவரை நீக்கிவிட விரும்புகிறது என்றும், 2028க்குள் அது நடக்கும் என்றும் சொல்லப்பட்டது. அந்தப் புள்ளியை இப்போது நடக்கும் விசயங்களுடன் பொருத்தினால் சில விசயங்கள் தெளிவாகும்.
ஆனால் மோடி அவ்வளவு சுலபத்தில் வீழ்த்தப்படக் கூடியவர் அல்ல என்பது அவரது அரசியல் வாழ்வை குஜராத்தில் இருந்தே கவனிப்போருக்குத் தெரியும். அதற்காக அவரைத் தன்னிச்சையாக ஆட்டம் போட விடலாமா என அவரது உட்கட்சி எதிரிகள் நினைப்பார்கள். இது அவர்களுக்குள் நடக்கும் ஒரு தலையணை யுத்தம்.
பிரதானின் ராஜினாமா கோரிக்கை ஒரு கண்துடைப்புதான். கரப்பான் கட்சித் தலைவர்கள் இதைப் பயன்படுத்தி சில அரசியல் பயன்களை அடைவார்கள். போராடும் இளைஞர்கள் தம் காயத்தை அற்றிவிட்டு அன்றாட வாழ்க்கையைப் பார்க்கப் போவார்கள். பயர் விடுவோர் அடுத்தடுத்த வைரல் செய்திகளுக்கு பயர் விடலாமா என யோசித்துக் கொண்டிருப்பார்கள்.
பி.கு: நாடு முழுக்க அங்கங்கே இளைஞர்கள் பாஜகவுக்கு எதிராகப் போராடும் போது உணர்ச்சி வசப்பட்டு நா தழுதழுத்து பிரஞ்சுப் புரட்சி, தேச விடுதலைப் போராட்டம் என்றெல்லாம் நினைக்காமல் இப்படி விமர்சிக்க கொஞ்சம் கூச்சமாகத்தான் இருக்கிறது. ஒருவராவது பூச்சாண்டி கதைகளை நம்பாமல் சந்தேகங்களை எழுப்ப வேண்டாமா? ஆம் ஆத்மி போராட்டம், ஊழலுக்கு எதிரான போராட்டம், நேபாளத்தில் இளைஞர் போராட்டம், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்புக்காக அறைகூவல் எல்லாம் எங்கு போய் முடிந்தன எனப் பார்த்துப் பார்த்து என் மனம் மரத்துப் போய்விட்டது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது: ஆம் ஆத்மி போராட்டத்தின்போது அரவிந்த் கேஜ்ரிவால் சாலையில் அமர்ந்து முழக்கம் எழுப்பினார். "ஒரு தலைவர் இப்படி சாலையில் இருந்து சண்டை போட்டால் அதைப் பார்க்கும் பொதுமக்களுக்கு எவ்வளவு ஆவேசம் பிறக்கும்? இதுதான் உண்மையான தலைமை" என்று என் எழுத்தாள நண்பர் ஒருவர் ஆவேசமாகச் சொன்னார். பின்னர் அதே கேஜ்ரிவால் எப்படி அச்சந்தர்பத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸையும் அன்னா ஹசாரேவையும் பிறரையும் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தார், அவரைப் பயன்படுத்தி பாஜக எப்படி காங்கிரஸை முறியடித்தது, தில்லியை ஆண்ட கேஜ்ரிவால் எவ்வளவு ஊழல் செய்தார் என்பதையும் கண்டோம். "ஊழலுக்கு எதிரான இந்தியா" இயக்கம் பின் எப்போது நடந்த ஊழலுக்கும் சாலையில் இறங்கவில்லை. அது நன்றாக எடுக்கப்பட்ட ஒரு ஷங்கர் படம் என ஒவ்வொருவருக்காக பின்னர் புரிய ஆரம்பித்தது. இப்போது அதே கட்சி ஆட்கள் 'தேர்வுத்தாள் கசிவுக்கு எதிராக இந்தியா' என ஒரு புதிய படத்தோடு வந்திருக்கிறார்கள்.
இப்போது நான் சுலபத்தில் உணர்ச்சி வசப்படுவதில்லை. கொஞ்சம் கண்ணீர் சிந்தினால் நம் கண்களை விலை பேசி விற்று விடுகிறார்கள்.
கருத்துகள்