முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாட்டில் பாஜக எதிர்ப்புப் போராட்டங்களை நீர்த்துப் போக வைக்கும் தவெக டூல் கிட்

 நியாயமாக தேர்வுத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டம் தமிழ்நாட்டில் பொதுவெளிகளில்தான் நடந்திருக்க வேண்டும். தில்லி, பீகார், பஞ்சாபில் எல்லாம் அப்படித்தான் நடக்கின்றன. ஏன்?


1) தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் விஜய் அடிப்படையில் ஒரு பாசிஸ்டு என அறிவோம். அவர் இங்கு மக்கள் திரள்வதாக இருந்தாலும், அசைவதாக இருந்தாலும் அதனால் தனக்கும் தன் கட்சிக்கும் (அதாவது கட்சி எனும் ரசிகர் மன்றம்) லாபம் உள்ளதா எனப் பார்ப்பார். தான் இல்லாத எதுவொன்றையும் அவர் அனுமதிக்க மாட்டார். இது பொதுவாக சர்வாதிகாரிகளின் இயல்பே.

2) பாஜகவுக்கு எதிராக தானோ தன் கட்சிக்காரர்களோ (அதாவது போஸ்டர் ஒட்டும் ரசிகர்கள்) தன் மக்களோ (தனது ரசிகர்கள் என அவர் நம்புவோர் அல்லது இந்தியா முழுக்க தன் ரசிகர்கள் மட்டுமே இருப்பதாக அவர் நம்புவதால் அனைவருமே) தான் நினைப்பதை மட்டுமே பேச வேண்டுமென அவர் விரும்புகிறார். பாஜகவை நேரடியாகத் தான் எதிர்ப்பதாகபோ தன் மாநிலத்தில் எதிர்ப்பை தான் அனுமதிப்பதாகவோ ஒரு தோற்றம் ஏற்பட்டுவிட்டால் அடுத்த தேர்தலின்போது தனக்கு அவர்களின் 'உதவி' கிடைக்காமல் போய்விடக் கூடும், தனக்கெதிராக கரூர் வழக்கு முடுக்கி விடப்படும், கட்சித்தாவல் வழக்கில் தனக்குப் பிரச்சினை வருமென அவர் அஞ்சுகிறார்.

3) அதற்காகப் போராட்டத்தையும் ஒரேயடியாகத் தடுக்க முடியாது. அதனால் கம்யூனிஸ்டுகளின் பாலன் இல்லத்தில் மட்டும் போராடுங்கள், வெளியே கல்லூரிகளிளோ கடற்கரையிலோ கூடாது என மறைமுக 144 போட்டுவிட்டார். மார்க்ஸிஸ்டுகள் தனது ஏஜெண்டுகளைப் போலே தமிழ்நாட்டில் நடந்துகொள்வதால் அவர்கள் வசம் போகும் போராட்டம் ஒரு 'வரம்புக்குள்' தான் இருக்குமென நம்புகிறார். இதன்படியே இப்போராட்டம் நடந்து வருகிறது - தில்லியிலோ பீகாரிலோ வங்காளத்திலோ நாம் பார்க்கும் மோடிக்கு எதிரான கருத்துக்களை, கேலிகளைத் தமிழ்நாட்டில் கேட்கவில்லை. அப்படியே ஓரிருவர் பேசினாலும் அது ஒரு சிறுபான்மைக் கூட்டத்தின் குரலாக மட்டுமே இருக்கிறது, பெரும்பான்மை மக்களை இது ஈர்க்கவில்லை எனும் சித்திரத்தை உருவாக்கி விட்டார் விஜய்.

4) தவெக அரசை வெளியிலிருந்து ஆதரிப்பதாகச் சொன்னாலும் தினம் தினம் விஜய்யைப் பாதுகாக்கும் கட்சி முகமாகவே சண்முகமும் பிறரும் செயல்படுவதைப் பார்க்கையில் ஒரு பயங்கர கூட்டணிக் கட்சியாகவே தெரிகிறார்கள். கூட்டணிக் கட்சியின் அலுவலகத்துக்குள் போராட்டக்காரர்களை முடக்குவது 'வீட்டுக் கைதைப்' போன்றதுதான். சொல்லப்போனால் பனையூரில் நடத்தியிருந்தால் ரொம்பக் கேவலமாக இருக்குமென்றுதான் பாலன் இல்லத்தைத் தேர்வு பண்ணியிருக்கிறார்கள்.

5) மார்க்ஸிஸ்டுகள் தன் ஏஜென்டுகள் எனில், தான் பாஜகவின் ஏஜெண்ட் என்பதை நிரூபிக்க ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். அவரது மிஷன் சக்ஸஸ் என்றே சொல்ல வேண்டும். என்ன, கூடுதலாகத் தான் தனது படத்தையே மோடி அரசைப் பாதுகாக்கும் நோக்கில் எடுத்திருப்பதைப் போல 'ஜனநாயகன்' படத்தையும் அதே நேரத்தில் வெளியிட்டு தன் அமைச்சர்களை அழ வைத்து ரீல்ஸும் வெளியிட்டுப் பார்த்தார். படம் தோல்வியடைந்ததால் அது எடுபடாமல் போய்விட்டது.

6) நான் சொல்வதைப் புரிந்துகொள்ள நீங்கள் தமிழ்நாட்டில் நடக்கும் போராட்டங்களை கேரளாவிலும் கர்நாடகத்திலும் நடக்கும் போராட்டங்களுடன் ஒப்பிடுங்கள். கேரளாவில் சுதந்திரமான பாஜக எதிர்ப்புப் போராட்டங்கள் நடக்கின்றன. பெங்களூரில் ப்ரீடம் பார்க்கில் மட்டும் மக்கள் திரள அனுமதி. இருந்தும் கூட பத்தாயிரம் பேர்களுக்கு மேல் திரள்வதாக டெக்கான் கிரானிக்கல் சொல்கிறது. ஒப்பிடுகையில் இங்கு எண்ணிக்கை குறைவுதான்.

7) இதைத்தான் 'நீட் எதிர்ப்புக்கு நாங்கள் ஆதரவுதான், ஆனால் பாஜக அரசு எதிர்ப்பாக அது மாறுவதை ஏற்க மாட்டோம், அப்படிச் செய்வதை வேறுவழியில் டீல் பண்ணுவோம்' என முன்னெச்சரிக்கை மிரட்டல் விடுத்திருக்கிறார் பழனியாண்டவர் கோயில் சொத்தைத் திருடிய அமைச்சர். (அடுத்து வரும் வாரங்களில் பாஜகவினர் அமைச்சர் ரமேஷைக் கொஞ்சம் மென்மையாகவே இவ்வழக்கில் டீல் பண்ணுவார்கள்.) இவர் சொல்வதில் கொஞ்சமாவது லாஜிக் உண்டா, போராட்டமே பாஜக அரசுக்கு எதிராகத்தானே என்று நாம் கேட்க முடியாது. இவர்கள் ஆட்சிக்கு வந்ததிலேயே எந்த லாஜிக்கும் இல்லையே. மேலும், அவர் தவெகவுக்கு வரும் முன்பு இந்துத்துவா முழங்கியவர்தானே.

8) இப்படியெல்லாம் பூட்டி வைத்தும்கூட அந்த மாணவர்கள் தம்மால் இயன்ற அளவுக்கு எதிர்த்துப் போராடத்தான் பார்க்கிறார்கள். அதுகூட விஜய்யை எரிச்சலூட்டுகிறது.

9) பாஜக அரசின் நிர்வேகச் சீர்கேட்டை விமர்சிப்பது, அமைச்சரின் ராஜினாமாவைக் கோரும் போராட்டம் நீட் எதிர்ப்பு என மாறுவது போராட்டத்தை நீர்த்துப் போக வைக்கிறது. நான் இதையே கூட ஒரு பாஜக பாதுகாப்பு உத்தியாகத்தான் பார்க்கிறேன். நீட்டை ஒழிப்பதை மற்றொரு சந்தர்ப்பத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

10) கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முடிவெடுக்க வேண்டும் - அது மோடியை எதிர்க்கிறது எனில், மோடியை மறைமுகமாக ஆதரித்து ஒரு புரோக்கர் போலச் செயல்படும், போராட்டங்களை முடக்கும் பாசிஸ்டான விஜய் ஆட்சியை ஆதரிக்க முடியாது. ஒரு பக்கம் திருடனை எதிர்த்துக் கொண்டே திருடனுக்குக் கதவைத் திறந்து விடும் வேலையையும் பண்ணக் கூடாது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...