கடந்த இரு நாட்களும் திருவண்ணாமலையில் பவா செல்லத்துரையும் தென்பெண்ணை இலக்கியச் சமவெள்ளியும் இணைந்து ஒருங்கிணைத்த இலக்கியப் பயிற்சி முகாமில் இருந்தேன். அற்புதமான இரு நாட்கள். என் பதின்வயதில் சென்னை கிண்டியில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கியக் கருத்தரங்கு ஒன்றிற்கு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பாகக் கலந்து கொண்டேன். இலக்கியம், பண்பாடு, சினிமா, அரசியல், கோட்பாடு என பல விசயங்கள் பேசவும் விவாதிக்கவும் பட்டன. இந்த இலக்கியப் பயிற்சி முகாமும் அப்படித்தான் இருந்தது. ஒருங்கிணைப்பாளர்களின் நோக்கம் பங்கேற்பாளர்களுக்கு படைப்பாக்கம், இலக்கியம், சமூகம் சார்ந்த முக்கியமான கருத்துக்களைக் கொண்டு சேர்ப்பதும், அவர்களை ஊக்கப்படுத்துவதுமே. அது இம்முகாமில் சிறப்பாகவே நிகழ்ந்தது எனக் கருதுகிறேன். காலை 9: 30க்குத் துவங்கி இரவு 9 மணி வரைக்கும் இடையறாமல் தொடர்ந்து அரங்குகள் நடந்தன. பங்கேற்பாளர்கள் கொஞ்சமும் சுணங்காமல் பொறுமையாக, ஒழுங்கோடு, ஆர்வத்தோடு கவனித்தனர். என்னைப் பெரும் வியப்பில் ஆழ்த்திய விசயமாக இது இருந்தது. இரண்டாம் நாளின் இறுதி அமர்வில் தம் அனுபவங்களையும் எதிர்வினையையும் பதிவு செய்திருந்தவர்கள் தமது பெறுமதியாக இந்த அனுபவங்களையும் புதிய பார்வையையும் அங்கி கிடைத்த விருந்தோம்பலையும் உணவையும் குறிப்பிட்டார்கள். மாணாக்கரில் சிலர் தமக்கு அங்கிருந்து விடைபெறவே மனம் வரவில்லை என்றார்கள். அதற்கு முதலில் அங்கு நிலவிய சினேக உணர்வும் களங்கமற்ற அணுகுமுறையும் ஒரு முக்கிய காரணம். அடுத்து, அந்த பத்தாய அரங்குகளும் சூழலும் அவ்வளவு ரம்மியமாக இருந்தது - சிலுசிலுவென்ற காற்று, சறே புழுக்கமான வெட்டவெளி, அழகாக அமைக்கப்பட்ட கலையுணர்வு மிக்க கட்டிடங்கள். ஒரு மின்விளக்கிற்கு பிரம்புக் கூடையை லேம்ப் ஷேடாக மைத்திருந்தார்கள், புத்தகங்களை அழகான வேலைப்பாடுகள் மிக்க மரக்கட்டிலில் பரத்தி அடுக்கியிருந்தார்கள், அதை அவர்கள் இடம் மாற்றுவதற்காக தூக்கிச் சென்றதைப் பார்க்க ஒரு ராணியை பல்லக்கில் வைத்துத் தூக்கிச் செல்வதைப் போலிருந்தது. சிற்றுண்டிகளில் நாட்டுப்புற ரசனையுடன் செய்யப்பட்டிருந்தன - மல்லாட்டை, கொண்டைக் கடலைச் சுண்டல், சிறுதானிய கருப்பெட்டி உருளை, நாட்டுக்கோழி கறிக்குழம்பு போன்றவை புத்துணர்ச்சி ஊட்டின. அந்த இடத்துக்கென்றே ஒரு ஆளுமை இருந்தது. ஏதோ அந்தப் பத்தாயமே ஒரு தனி உயிரி என்பதைப் போல. அது அமைதியாக நிதானமாக அன்பாக மூச்சுவிடுவதைப் போல. ஒரு இடத்தில் சென்று இருப்பதைவிட ஒரு இடத்துடன் உறவாடியும் அணைத்துடம் இணக்கமாக இருப்பதைப் போன்ற உணர்வை பத்தாயம் தந்தது. அங்கு ஏன் இத்தனை எழுத்தாளர் நண்பர்களும் கலைஞர்களும் சென்று வந்து கொண்டே இருக்கிறார்கள் எனப் புரிந்துகொண்டேன். அங்கு சென்று மூன்று மாதங்கள் இருக்க முடிந்தால் ஒரு நாவலை மகிழ்ச்சியாக எழுதி முடிக்க இயலும். அப்படி ஒரு இடம்.
அந்தப் பயிற்சி முகாமின் ஒரு முக்கியமான சிறப்பாக நான் கருதியது ஜனநாயக, பன்மைத்தன்மை கொண்ட தலைமை. மாயாவியான தலைமை. பவா செல்லத்துரை எந்த இடத்திலும் தன்னை முன்னிறுத்தவோ தனது நம்பிக்கைகளும் கருத்தியலும் பேச்சையோ உரையாடலோ தீர்மானிக்கிறது என்று உறுதிப்படுத்தவோ முயலவில்லை. அவர் இருந்ததே தெரியவில்லை. இதையே நான் தென்பெண்ணை இலக்கிய இலக்கியச் சமவெளி அமைப்பினருக்கும் சொல்வேன். அவர்கள் பின்னணியில் இருந்து வேலை பார்த்துக் கொண்டே இருந்தனர். அதேசமயம், பேச்சாளர்களும் பங்கேற்பாளரும் இணைந்து தம் விருப்பப்படியும் நம்பிக்கைகளின் படியும் அங்கு ஒரு பன்மைத்துவ தலைமையை உருவாக்கிட அனுமதித்தனர். இதனாலே எனக்கு இது என் பதின்வயதில் நான் பங்கேற்ற கருத்தரங்கை நினைவுபடுத்தியது என நினைக்கிறேன். ஒரு கூட்டத்திற்கு வரும் மக்களை வைத்து எதாவது ஒரு செயற்பாட்டுத் திட்டத்தை நிறைவேற்ற நாம் உத்தேசித்தால் அது அவர்களை அடிமைப்படுத்தும் முயற்சியாகி விடும். அதாவது அவர்களை வைத்து அடுத்தடுத்த கூட்டங்களைத் திட்டமிட்டு அவர்களுடைய நன்மதிப்பை நன்றியுணர்ச்சியாகவும் அமைப்பின் ஆற்றலாகவும் திசைதிருப்பினால் அது ஒரு கல்ட் அமைப்பாக மாறிவிடும். பவாவும் தென்பெண்ணை அமைப்பாளர்களும் அத்தகைய உத்தேசம் கொண்டிருக்கவில்லை என்பது பாராட்டத்தக்கது. இலக்கிய வெளியில் மக்கள் களங்கமற்றவர்களாகவும் ராணுவ ஒழுங்குக்கு உட்படாதவர்களாகவும் இருப்பதே சுதந்திரம். அதைப் பறிகொடுக்கலாகாது. இது இப்படியே நிலைக்க வேண்டும்.
யாருடைய மதிப்பீடுகளையும் அஞ்சாமல் கருத்து சொல்ல முடிந்தது. பேச்சாளர்களுக்கு மட்டுமல்ல பங்கேற்பாளர்களுக்கும்தான். தவெகவின் தேர்தல் வெற்றியும் நடவடிக்கைகளும் அறிவுத்தரப்பினரிடமும், வாசகர்கள், கலைஞர்களிடத்தும் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தை, சலனங்களைப் பரவலாகப் பார்க்க முடிந்தது - ஒருவிதமான கசப்பு, கோபம், குழப்பம், கேள்விகள் எனக் கலவையாக வெளிப்பட்டன. பேஸ்புக்கில் தொடர்ந்து நாம் எழுதுகிற, விவாதிக்கிற விசயங்கள் அங்கு அரங்கிலும் ஏதோ ஒருவிதத்தில் கரையை வந்தடைந்து மோதி ஆர்ப்பரிக்கும் அலைகளாக தோன்றி உடைவதைக் கண்டேன். நான் அங்குச் சந்தித்த வாசக நண்பர்களும் பெரும்பாலும் என்னைப் பேஸ்புக்கில் படிப்பவர்கள் அல்லது உயிர்மை இதழ் வாசகர்களாக இருப்பவர்கள் எனக் கண்டுகொண்டேன். அத்தனைப் பேர்களை அங்கு சந்தித்துப் படமெடுத்துக் கொண்டதும், அன்பைப் பரிமாறியதும் எனக்கு வெகு உற்சாகமாக இருந்தது. சிலர் தமது பங்கேற்பு சான்றிதழை நான் என் கையால் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஸ்டாலின் ராஜாங்கம், டி. தர்மராஜ், செல்வேந்திரன், பிரபாகர் வேதமாணிக்கம், விஷ்ணுபுரம் சரவணன், யாழன் ஆதி ஆகிய நண்பர்களுடன் பேசுவதற்கு கிடைத்த சந்தர்ப்பங்களும் நற்பேறுதான். மனுஷ்ய புத்திரனுடன் நிறைய பேச வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தேன். அவர் பெங்களூரின் இளவெயிலைப் போல சற்று நேரம் இதமாக அடித்துவிட்டு காரில் ஏறிப் பறந்துவிட்டார். அவர் தனது அருமையான நீண்ட உரையில் பார்வையாளர்களுடன் கேள்விகள் எழுப்பி விவாதித்து கவிதை அனுபவம் என்றால் என்னவென்று நெருங்கச் சென்ற விதத்தைப் பார்க்கையில் திமுகவில் இருந்து விடுப்பெடுத்து எதாவது ஒரு பல்கலையில் பேராசிரயராகச் சேர்ந்தால் நன்றாக இருக்கும் எனப் பட்டது. அவர் மட்டுமல்ல அங்கு பேசிய எழுத்தாளர்கள் அனைவருமே என்னைத் தம் பேச்சுத்திறனால் வியக்க வைத்தனர். கடந்த சில ஆண்டுகளில் நமது படைப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், கட்டுரையாளர்கள் பொதுமக்களுடன் தொய்வின்றிப் பேசும் ஆற்றலைப் பெற்றுவிட்டார்கள் என்று தோன்றியது. இரண்டாம் நாள் காலையில் கொஞ்சம் வெளியே சுற்றியதால் ஸ்டாலின், டி. தர்மராஜ், பிரயளயன் ஆகியோரின் உரைகளை மட்டுமே தவற விட்டேன். பிரபாகர் வேதமாணிக்கத்தின் உரையைப் பாதியில் இருந்து கேட்டேன். என்ன ஒரு அற்புதமான பேச்சு. அனுராதா, சந்திரா, கடற்கரய், சிறீல் அலெக்ஸ், என். ஶ்ரீராம், நர்சிம், ஜெயராணி, றாம் சந்தோஷ், நாராயணி கண்ணகி, செல்வேந்திரன், ஜெ.பி சாணக்யா என பலருடைய பேச்சுக்களையும் ரசித்தேன். நீண்டகாலம் சிறையில் இருந்து தன் நாடகப் பயிற்சியால் மீண்டு வந்து தற்போது நடிகராகவும் பயிற்றுநராகவும் செயல்படும் ஒருவரது பேச்சும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
நான் நீண்ட நாட்களாக சந்திக்க விரும்பிய இலக்கியவாதி ஜெ.பி சாணக்யா. அவர் இந்தப் பயிற்சி முகாமுக்கு வருகிறார் என்பதே உற்சாகமூட்டுவதாக இருந்தது. இரண்டாம் நாளன்று அவரைத் தேடிக் கொண்டிருந்தேன். நரைத்த தலையும் தாடியுமாக இருந்த அவரை என்னால் சுலபத்தில் அடையாளம் காணவியவில்லை. பல்லவிதான் அடையாளம் கண்டு சொன்னாள். நான் அவரிடம் சென்று பேசி நீண்ட நேரம் அவருடன் செலவிட்டேன். அவருடைய ஆளுமையில் ஒருவித விளையாட்டுத்தனம் உண்டென்றாலும் அடிப்படையில் அவர் கவிஞர் தேவதேவனைப் போல மிகவும் மென்மையானவர். யாரையும் பழிக்கவோ மறுக்கவோ விரும்பாத இணக்கமான மனிதர்.
புத்தகக் கண்காட்சியில் வருடம் தோறும் நான் அடையும் புத்துணர்ச்சியை விட பத்து மடங்கு அதிகமாக கடந்த இரு நாட்களில் அங்கு அனுபவித்தேன்.
கருத்துகள்