முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சினிமாவும் சர்வாதிகாரமும்

 



அரசியலை கேடுகெட்டதாகக் காட்டி மக்களாட்சியே படிக்காத முரடர்கள், திருடர்கள், ரௌடிகளின் ராஜ்ஜியம்தான் எனச் சித்தரித்ததில் பெரும் பங்கு இந்திய வெகுமக்கள் சினிமாவுக்கும் தமிழ் சினிமாவுக்கும் (குறிப்பாக ஆக்‌ஷன் படங்கள்) உண்டு. அதேநேரம் இவர்களுக்கு எதிர்நிலையில் அதிகாரிகளையும் (ஐ.ஏ.எஸ்) காவல் அதிகாரிகளையும் படித்த இளைஞர்களையும் சினிமா வைத்தது. அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தீய சக்தி vs தூய சக்தியானமக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகார வர்க்கம், இளைஞர் திரள். இந்த தூய சக்தியின் முக்கியமான குணம் அது தன்னெழுச்சியாகச் செயல்படவும், அதிகாரத்தைக் கொண்டோ வன்முறையின் வழியாகவோ தீய சக்தியைக் கட்டுப்படுத்துவார்கள் என்பது. இந்தத் தூய சக்தியை நாம் அப்படியே நீட்டித்தால் அரசியலற்ற அதேநேரம் அதிகாரமிக்க ஒரு வர்க்கம் வருகிறது. சினிமாவில் இவர்களை எப்போதும் அதிகாரத்தில் விளிம்பில் இருப்பவர்களாகவும் இவர்கள் கொந்தளித்தால் அதிகாரத்தின் மையத்தை அடைந்து கோட்டையைப் பிடிப்பார்கள் என்றும் காட்டுவார்கள். இவர்கள் யாரைக் குறிப்புணர்த்துகிறார்கள் புரிந்துகொள்ள நாம் இவர்களுக்கு எதிர்நிலையில் உள்ளவர்கள் (தீய சக்தி) எதைச் சுட்டி நிற்கிறார்கள் எனப் பார்த்தால் போதும்: மக்களாட்சியின் அதிகாரம், வாக்குகளின் அதிகாரம். தீய சக்தி vs தூய சக்தி என சினிமா சித்தரித்து வந்தது மக்களாட்சி அதிகாரம் vs மக்களின் அமோதிப்புத் தேவையில்லாத சர்வாதிகாரம்தான். இதை உணர்ச்சிகரமாக சமூகப் பிரச்சினை, ஏற்றத்தாழ்வு எதிர்ப்பு, ரௌடிகள், ஊழல் ஒழிப்பு என்றும் இளைஞர்களின் புரட்சி என்றும் காட்டியதால் இதில் மறைந்திருந்த அசல் அரசியலை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம்.

நமது புரட்சிப் படங்களில் / ஆக்‌ஷன் படங்களில் (சமூகத் தீமை எதிர்ப்புக் கதைகள்) 99 விழுக்காடும் அதிகாரத்தை அதிகாரமற்றவர்கள் வீழ்த்தும் கதையல்ல, மக்களாட்சி அதிகாரத்தை சர்வாதிகாரம் வீழ்த்தும் கதையே. அரசியல்வாதிகளை, முதலாளிகளை காவல்துறை அதிகாரியோ ஐ.ஏ.எஸ் அதிகாரியோ தனித்து மோதி வீழ்த்துவது, ரௌடிகளை காவல் அதிகாரி என்கவுண்டர் செய்வது, இளைஞர்கள் சேர்ந்து அரசாங்கத்தை வீழ்த்துவது, ஊழல்வாதிகளை ஒழிப்பது எண்பதுகளில் இருந்து தொண்ணூறுகள், ரெண்டாயிரத்தின் துவக்கம் வரையிலான சினிமா கதைகள் எனில் ரௌடிகள் தீமைக்கு எதிராகப் போராடுவது அதன் பிறகான பத்தாண்டுகளில் வெற்றி பெற்ற படங்களின் கதை. இப்படங்கள் எடுக்கப்பட்டு வந்த அதே அசமயத்தில்தான் அதிகாரிகளின், காவலர்களின் தியாகம், துணிச்சலைப் போற்றி நிறைய பத்திரிகைகள் பேசி வந்தன. இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுக்க இருந்தப் போக்குதான். இதுவே அதிகாரிகள் கட்சி அரசியலுக்குள் வந்து முதல்வர், ஆளுநர் வரை ஆக உதவியது என நினைக்கிறேன். ஷங்கரின் “முதல்வன்” படம் ஒரு ஊடகவியலாளர் தன் நேர்முகம் எடுக்கும் திறனை மட்டுமே வைத்து ஆட்சியைப் பிடிப்பதைக் காட்டியது. அதாவது அவர் மக்களைச் சந்தித்துத் தன் கருத்தியலை எடுத்து வைத்து மக்களின் பரவலான ஆமோதிப்பை, ஆதரவைப் பெற்று ஆட்சியமைப்பதில்லை. தவெக அலை போல ஒரு அலை தோன்றி அவர் முதல்வர் ஆகிறார். ஆனதும் அவர் எந்த ஆலோசனை, விவாத முறையையும் பயன்படுத்தாமல் மக்கள் பிரச்சினைகளை நேரடியாகப் பார்த்துத் தீர்க்கிற ‘நேரடி நிர்வாகத்தைச்’ செய்கிறார். நேரடியென்றால் அதிகார வர்க்கத்தின், அரசாங்கக் கட்டமைப்பின், பிரதிநிதிகளின் குறுக்கீடு இல்லாத நிர்வாகம். இது ஒரு மென் சர்வாதிகாரம் மட்டுமே.
இத்தகைய படங்களின் இன்னொரு இயல்பு ஒரு தனிமனிதர் தானாகவே போராடி எல்லா மக்கள் பிரச்சினைகளையும் சரி பண்ணுவார் என்பது. நிஜவுலகில் மக்கள் ஒன்று திரண்டு உழைத்தும் போராடியுமே சிறுகச்சிறுக பிரச்சினைகளைச் சரி பண்ணுவார்கள். ஆனால் வெகுமக்கள் சினிமா அதன் இயல்பிலேயே மக்களை ஒரு தொந்தரவாகக் காண்கிறது. ஒரு படம் திகிலான ஆக்ரோஷமான சினிமாவாகிட ஒருவரே கதையின் நாயகனாக இருக்க முடியும். ஆக, வெகுமக்கள் சினிமாவின் இயல்பே சர்வாதிகாரத்தன்மைதான். அது மக்கள் தம் சுயதேர்வை, சுயசிந்தனையை ஒரு நாயகனிடம் விட்டுக் கொடுத்துவிட்டு அவனிடம் சரணடைய வேண்டும் என்கிறது. சினிமா பார்க்கும் அனுபவம் கூட அப்படியான செயலற்ற நிலைதான். அதனாலே சினிமா மக்களை சர்வாதிகாரத்துக்குப் பழக்குகிறது, சினிமாக்காரர்களும் அதிகாரத்துக்கு வந்ததும் சர்வாதிகாரிகள் ஆகிறார்கள் என நினைக்கிறேன்.
சரி அரசியலுக்கு வருவோம். வெகுமக்கள் ஆக்‌ஷன் சினிமா ஒரு எதிர்-அரசியலைப் போதிக்கிறது என்றேன். எதிர்-அரசியல் எனும் கலைச்சொல்லை நான் Revenge of Power எழுதிய மொய்ஸிஸ் நெய்ம்மிடம் இருந்து எடுத்துக் கொள்கிறேன். எதிர்-அரசியல் என்றால் மக்களாட்சி அரசியலை எதிர்க்கிற அரசியல். சர்வாதிகார சக்திகள், வலதுசாரிகள், வெகுமக்கள் சினிமா இயக்குநர்களுக்கு கொள்கை விசயத்தில் ஒத்துப் போகிறது: அவர்கள் மக்களாட்சி அமைப்பை வெறுக்கிறார்கள். அது ஒழிந்து அந்த இடத்தில் மக்களோடு நேரடித் தொடர்பற்ற படித்தவர்கள், அதிகாரிகள், காவல் அதிகாரிகள், அல்லது தன்னிச்சையாக மட்டும் செயல்படும் ஒரு தைரியமான அரசியல் தலைவர் வர வேண்டும் என நினைக்கிறார்கள். ஒரு பிரச்சினையென்றால் அதன் தீர்வு என்ன, அதனால் யார் யார் பாதிக்கப்படுவர், பயன்பெறுவர் எனச் சீர்தூக்கிப் பார்க்காமல் நொடியில் முடிவெடுப்பவர்கள். சிந்தனை, கூட்டுப்பரிசீலனை, விவாதம், பொறுமை ஆகியவற்றை ஊழலென்றும் மந்தநிலையென்றும் இச்சினிமாக்களும் பத்திரிகைகளும் சித்தரித்தன. அப்படித்தான் மக்களாட்சி அமைப்பின், அரசு எந்திரத்தின் எல்லா வடிகால்களையும், படிநிலைகளையும், ஆலோசனை, மறுபரிசீலனை கட்டமைப்புகளையும் ஊடறுத்து தனக்குத் தோன்றுவதைச் செய்கிற ஒரு தலைவருக்காக நாம் காத்திருக்கத் தொடங்கினோம். அப்படியே மோடி வந்தார். அப்படியே தமிழ்நாட்டில் விஜய்யும் வந்தார். மக்கள் இவர்களுடைய செயல்பாடுகளைப் பரிசீலித்து வாக்களிக்கவில்லை, பிம்பத்தைப் பார்த்து வாக்களிக்கிறார்கள். இவர்களும் அதிகாரம் பெற்ற பிறகு பிம்பத்தைத் தவிர வேறெதைதையும் பொருட்படுத்துவதில்லை. மக்களாட்சியை வேரோடு அறுத்துவிட்டு எதிர்க்கட்சிகளற்ற, எந்த வரைமுறையும் கேள்விகளும் இல்லாத ஒரு சர்வாதிகாரத்தை நோக்கியே நகர்கிறார்கள். தமது ஆட்சியில் எந்த அமைச்சர்களும் நிறுவனமும் பெயர் பெற்றுவிடக் கூடாது என உறுதி செய்கிறார்கள், பலவீனர்களையும் கையாட்களையும் மட்டுமே அருகில் வைத்துக் கொள்கிறார்கள், கட்சியும் ஆட்சியும் தனிமனிதர் மட்டுமே எனும் எண்ணத்தை ஆழமாகப் பதிய வைக்கிறார்கள், ஊடகங்களை ஒன்று விலைக்கு வாங்கி விடுகிறார்கள், அல்லது மௌனமாக்குகிறார்கள், அரசின் குற்றங்களை இயல்பான நடைமுறையாக்குகிறார்கள், கருத்து சுதந்திரத்தை, போராட்டங்களை வெறுக்கிறார்கள், அவற்றுக்கான இடத்தை குறைத்துக் கொண்டே வருகிறார்கள், தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள். இப்படித்தான் மக்களாட்சியை சர்வாதிகாரம் ‘பழிவாங்குவதை’ நாம் காண்கிறோம்.
இத்தகைய சர்வாதிகாரிகளுக்கு மக்கள் தொடர்ந்து வாய்ப்பளித்தால் அவர்கள் ஒரு கட்டத்தில் தேர்தல்களை மக்களின் அசல் பங்களிப்பு அல்ல வெற்றுச் சடங்குகளாக மாற்றுவார்கள் என்கிறார் நெயிம். தேர்தல் சர்வாதிகார ஆட்சி தோன்றுகிறது. ஏனெனில் இவர்கள் மக்களாட்சி முறையில் உள்ள நிலையாமையை, அதிகார எதிர்ப்பைப் பயப்படுகிறார்கள். இந்தப் பயம் சமூகத்தின் மையத்தில், குறிப்பாக முதலீட்டிய சக்திகள் இடையே, எப்போதுமே இருக்கிறது என நினைக்கிறேன். இதுவே சர்வாதிகாரமே நல்லது என ஒருபக்கம் நேரடியாகவும், மக்களாட்சி குறைபட்டது, ஊழலானது, தீய சக்தி, சர்வாதிகாரமே ஹீரோயிசம், தூய சக்தி, நியாயம், நீதி, சமத்துவம் என இன்னொரு பக்கம் சினிமாவில் மறைமுகமாகவும் மக்களிடம் பரப்பப்படுகிறது.
பி.கு: சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோ ஒட்டுமொத்த சமூகத் தீமையையும் எதிர்ப்பது ஹாலிவுட்டில் வெறும் தீமை எதிர்ப்புதான் - ஊழல், மாபியா, ஏ.ஐ, சூப்பர் வில்லன், பிரம்மாண்ட வினோத விலங்கு என. ஆனால் இந்திய சினிமாவில்தான் மக்களுக்காகப் போராடுவது என ஒரு அரசியல் பிரச்சினையாக, எதிர்-அரசியல் பிரச்சாரமாக கதை உருவாக்கப்படுகிறது. அதனாலே நம் சர்வாதிகாரிகளும் வித்தியாசமாக இருக்கிறார்கள் - மக்களுக்காக நான் எனக்காக மக்கள் என்று சொல்லி மக்களின் உரிமையைப் பறித்து விடுகிறார்கள். இதே காரணத்தால்தான் மக்களாட்சி வெறுப்பு பேசி வெல்லும் சினிமா நாயக நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஆபத்தானதாக இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...