எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவயப்படாமல் கொஞ்சம் நிதானமாக யோசிப்போம். கரப்பான்கள் தம்மை எதிர்க்கட்சிகளிடம் இருந்து விலக்கி வைத்துக் கொண்டு இதை ஒரு மாணவர் பிரச்சினையாக மட்டும் மாற்றினார்கள். அப்போதும் கூட இப்பிரச்சினையைத் தடுப்பதற்கான அமைப்புசார் மாற்றங்களை அவர்கள் கோரவில்லை. அரசே ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கட்டும் என விட்டுவிட்டார்கள். அவர்களுடைய பெரும்பாலான கோரிக்கைகள் தம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதே. இதுதான் முக்கிய கோரிக்கை என்றால் போராடாமலே இருந்திருக்கலாமே.
அடுத்து, அமைச்சர் பிரதானின் ராஜினாமா. அவருக்கு இன்னொரு பொறுப்பைக் கொடுத்துவிட்டு அவரைப் போன்ற அல்லது அவரைவிடக் கேவலமான ஒருவரை அமைச்சராக பாஜகவுக்கு எவ்வளவு நேரமாகும்? கடைசியாக, மாணவர்களின் பெற்றோர்களுக்கான இழப்பீடு. இதை மட்டும் கேட்டிருந்தால் அதை அரசு ஆரம்பத்திலேயே கொடுத்திருக்கும். பிரதானின் ராஜினாமா ஒரு உணர்ச்சிகரமான நாடகத்தை அரங்கேற்ற மட்டுமே உதவியது.
அடுத்து இதை ஒரு தண்டனையாக எடுத்துக் கொள்ளலாமா? அதாவது பிரதான் நேரடியாக ஊழலில் ஈடுபட்டார், இத்தனை நூறு கோடிகளைச் சம்பாதித்தார் என்று கோர முடியுமா? அதற்கான ஆதாரம் உண்டா? இல்லை எனில் அவரது ராஜினாமா எவ்வகையில் ஒரு 'தண்டனையாகிறது?' பண மதிப்பிழப்பு முடிவால் மிகப்பெரிய பிரச்சினைகள் எழுந்தன. மக்கள் இறந்தார்கள். பொருளாதாரம் நொடிந்தது. அப்படியான ஒரு தவறுக்கு நிச்சயமாக ஒரு நிதி அமைச்சரையோ பிரதமரையோ ராஜினாமா செய்யக் கோரலாம். ஆனால் சில அதிகாரிகளும் தனிநபர்களுமாகச் சேர்ந்து செய்யும் மோசடியில் அமைச்சருக்கு உள்ள பங்கு அவர் அதைத் தடுக்கும்படியான ஒரு கட்டமைப்பை உருவாக்கவில்லை, கண்காணித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான். இம்மாதிரி பரந்துபட்ட பொறுப்பை அமைச்சர்கள் எடுக்க வேண்டுமெனில் இ20 குளறுபடிக்காக கட்கரி ராஜினாமா செய்ய வேண்டாமா? இந்தியப் பொருளாதாரத்தைச் சீரழித்து விலைவாசியையும் பணவீக்கத்தையும் அதிகரிக்க வைத்த நிதியமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டாமா? உண்மை என்னவெனில் இதற்கு ராஜினாமா அல்ல தண்டனை, ஒரு பொறுப்பற்ற தகுதியற்ற அரசை வாக்களித்துக் கொண்டு வந்த மக்கள் அவர்களுக்கு தேர்தலில் தோல்வியளிப்பதே தீர்வு. இங்குதான் நாம் இப்போராட்டத்தை 1975இல் இந்தியாவில், குறிப்பாக வட இந்தியாவில், இந்திரா காந்தியின் ஆட்சியின் நெருக்கடி நிலை, வேலையில்லா பஞ்சம், வறுமை ஆகிய பிரச்சினைகளுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்திய போராட்டத்துடன் ஒப்பிட வேண்டும்.
அப்போராட்டத்தின்போது மாணவர்கள் எதிர்க்கட்சிகளின் உதவியை நாடினர். அபிஜீத்தைப் போல அவர்களைத் தள்ளி வைக்கவில்லை. அவர்கள் ஜெய்பிரகாஷ் நாராயணின் கீழ் திரண்டனர். இது எதிர்க்கட்சிகளின் கட்டமைப்பு உதவி போராட்டத்தை வலுவானதாக்கியது. கூடவே எதிர்க்கட்சிகளும் வலுப்பெற்றன. நெருக்கடி நிலையை, எதேச்சதிகாரத்தை, அரசியல் கைதிகளால் சிறைகள் நிரம்பி வழிந்த நிலையை சகித்துக் கொண்டிருந்த மக்கள் தேர்தலில் தம் கோபத்தைக் காட்ட ஒரு வழி பிறந்தது. கல்லூரி மாணவர்கள் தாமாகத் தனித்துப் போராடியிருந்தால் இருக்கிற ஒரே தலைவர் இந்திரா தான், அவருக்குப் பதில் யாரெனத் தெரியாமல் அவருக்கே வாக்களித்திருப்பார்கள். இப்போராட்டத்தினால் எதிர்க்கட்சிகள் மொத்தமாக சிறையில் இருந்தார்கள். அவர்களுக்குப் பிரச்சாரம் பண்ணவே அவகாசமின்றி தேர்தல் நடந்தது. இந்தியா அவலமான தோல்வியைத் தழுவினார். ஏனென்றால் கல்லூரி மாணவர்களும் அரசியல்வாதிகளும் சேர்ந்து வருடக்கணக்கில் நடத்திய போராட்டமே ஒரு 'நேரடிப் பிரச்சாரமாகியது'. மக்கள் ஜனதா கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வந்தார்கள்.
ஜனதா கட்சியின் தலைமையின் கீழ் நடந்த கூட்டணி ஆட்சி வெற்றிகரமாகத் தொடர இயலாமல் போயிருக்கலாம். ஆனால் அவர்கள் தாம் ஆட்சிக்கு வந்ததும் ஒரு முக்கியமான சட்டத் திருத்தத்தைச் செய்தார்கள் - 44. இது ஒரு ஒன்றிய அரசு தான் நெருக்கடி நிலையை உள்ளூர் போராட்டங்கள், அரசுக்கான எதிர்ப்பை மட்டும் காட்டிக் கொண்டு வர முடியாது, அதற்கு நாடாளுமன்றத்தின் ஆதரவு, அமைச்சரவையின் அனுமதி ஆகியவை வேண்டும் என்று கூறியதுடன் நெருக்கடி நிலை கொண்டு வரப்பட்டாலும் கண்டமேனிக்கு மக்களைக் கைது பண்ண முடியாது எனும் உத்தரவாதத்தைக் கொண்டு கொண்டு வந்தது. இதுதான் அசலான பலன் - அப்போராட்டம் நமது அடிப்படை உரிமைகளை, மக்களாட்சியை வலுப்படுத்தியது. ஆனால் கரப்பான் பூச்சிப் புரட்சியின் சேதி என்ன? உருப்படியாக ஒன்றுமில்லை.
அவர்கள் இந்தியாவில் எதிர்க்கட்சிகளே இல்லையெனும் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தினார்கள். அவர்கள் கட்சிகளை அங்கீகரிக்கவில்லை என்பதுடன் அரசியல் கேடுகெட்டது எனும் தொனியுடன் பேசினர். இது மறைமுகமாக பாஜக அரசுக்கு உதவியது - எதையும் பாஜகவை அகற்றி அல்ல அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களிடம் அழுத்தம் போட்டுத்தான் சாதிக்க முடியும் எனக் காட்டினர். இவ்வாறு தேர்தல் அரசியல் மீதான ஒரு அவநம்பிக்கையைத்தான், எதிர்க்கட்சிகள் மீதான உதாசீனிப்பை, புறக்கணிப்பைத்தான் நான் இப்போராட்டத்தில் கண்டேன். அரசியலில் இருந்து விலகி நிற்க விரும்பும் ஜென் ஸி தலைமுறையினரில் ஒரு பகுதியினருக்கு இப்போக்கு விருப்பமாக இருந்திருக்கும் என்பதில் எனக்கு ஆச்சரியமில்லை. சொல்லப்போனால், அபிஜீத் தன் போராட்டம் அரசியலற்றது என்பதைத்தான் 'என்னை ஹீரோவாக்காதீர்கள்' எனும்போது உணர்த்துகிறார். இச்செய்தி பாஜக தலைமைக்கு இனிப்பாக இருக்கும். அவர் அப்படிச் சொல்லாமல் எகிர்க்கட்சிகளுடன் கைகோர்த்திருந்தால் மோடி அரசு தேசவிரோதச் சட்டத்தின் கீழ் அவரை உமர் காலித்தைப் போல நீண்ட காலம் வைத்திருந்திருக்கும். அவருக்கு அது தெரியும் - அவர் சொல்கிறார், "ஐயா நான் ஹீரோ இல்லைய்யா. என் மேல வழக்குப் போடாதீங்க. நான் அமெரிக்கா போகணும். ஒருபோதும் உங்களை எதிர்க்கிறவர்களை நான் நேரடியாக வலுப்படுத்தவில்லை. நான் உங்களையோ ஆர்.எஸ்.எஸ்ஸையோ எந்த இடத்திலும் நேரடியாக விமர்சிக்கவில்லை. லைட்டா டச் பண்ணியிருக்கேன். சும்மா லுல்லுலாய்.".
நான் கரப்பான் பூச்சிகள் ஒரு 'அசல் கட்சி' ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்லவில்லை; மாறாக, அவர்கள் உப்புச் சப்பில்லாத ராஜினாமாவை விடுத்து சில சட்டத்திருத்தங்களைக் கோரியும், கல்வி நிலையங்களை நேர்மறையாகப் பாதிக்கும் முடிவுகளை எடுக்கும்படியும் கோரியிருக்க வேண்டும் என்கிறேன். அவர்கள் எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்து இப்போராட்டங்களை நாடாளுமன்ற விவாதங்களை நோக்கித் திருப்பியிருக்க வேண்டும். அதை மட்டுமே பாஜக உண்மையில் விரும்பியிருக்காது. தம் கோரிக்கைகள் நிறைவேறாதபட்சத்தில் அடுத்தடுத்து நடக்கப் போகும் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களிலும் எதிர்க்கட்சிகளுடன் ஒத்துழைப்போம் எனச் சொல்லியிருக்க வேண்டும். அப்போது இது ஒரு அசல் புரட்சியாக மாறியிருக்கும்.
இப்போதைக்கு இது ஒரு பீட்ஸா, பர்கர் புரட்சியாக, எதிர்ப்புரட்சியாகி விட்டது. மக்களிடம் இருந்த அசலான கோபத்துக்கு ஒரு சினிமாத்தனமாக தீர்வைக் கொடுத்து விட்டது. மோடியின் பிம்பச் சரிவு தீர்க்கமாக அமைய அவர் எப்படியெல்லாம் மக்களாட்சியையும் மக்களின் அன்றாட வாழ்க்கையையும் சீரழிக்கிறார் எனப் பேச வேண்டும். 1975இல் நடந்த போராட்டத்தைப் போல மாற வேண்டும். இது ஒரு அரசியலற்ற போராட்டம், மாணவர்களை அரசியல்படுத்தாமல் அவர்களை வைத்து மிரட்டுகிற, எதையும் பலனாகப் பெற்றுத் தராத போராட்டம். பர்க்கர், பீட்ஸா சாப்பிட சுவையாக இருக்கும், ஆனால் நம் உடலுக்கு எந்த சத்தும் கிடைக்காது. பர்க்கர், பீட்ஸா போராட்டங்களும் இப்படித்தான் என நான் சொன்னால் உங்களுக்குப் படிக்க சோர்வாகத்தான் இருக்கும். ஆனால் உண்மை சற்று சோர்வாக இருந்தாலும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
கருத்துகள்