முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு எளிமையான கேள்வி


 

தேர்வுத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான்கள் நடத்திய நாடு தழுவிய போராட்டத்திற்கு வெற்றி. ஒன்றிய அமைச்சர் பிரதான் ராஜினாமா பண்ணிவிட்டார். இப்போது கேட்போம்: மாணவர்கள் தம் வலிமையைக் காட்ட முடிந்தது, மாணவர்கள் முன் மோடி அரசு பலவீனமாகத் தோன்றியது, பாஜக எதிர்ப்புக் குரல் அதன் நிர்வாகக் கோளாறைப் பொறுத்தமட்டில் நாடு முழுக்க ஒலித்தது என்பதைத் தாண்டி இந்தப் போராட்டங்களின் நேரடிப் பயன் என்ன? ஒன்றுமில்லை.

இந்த ஜென் ஸீ போராட்டம் ஜென் ஸீத்தனமாகவே - அதாவது சுயநலமாகவே - அமைந்தது. அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது ஒரு பக்கம் நேரடிப் பயனற்றது எனில், போலீஸை ஏவி விட்டு அடித்தமைக்காக எங்களிடம் அரசு மன்னிப்புக் கோர வேண்டும், எங்கள் மீது இடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், எங்கள் மீது எதிர்காலத்தில் வழக்குப் போட மாட்டீர்கள் என்பதற்கு உத்தரவாதம் வேண்டும் என முழுக்க முழுக்க தம்மைக் குறித்தே இருக்கிறது. மற்றவர்களுக்காக என்ன கேட்டார்கள்? உணர்ச்சிகளையும் தன்னலத்தையும் கடந்து என்னவுள்ளது? ஒன்றுமில்லை.
நம் ஊரில் பெருங்கூட்டத்தைப் பார்த்தாலே கருத்துச் சொல்வோருக்கு பயமாகிறது. நாம் கூட்டத்துக்கு ஆதரவாக மட்டுமே பேச வேண்டும், அப்போதே கவனம் கிடைக்கும், இல்லாவிட்டால் நம்மையும் திட்டுவார்கள் எனும் பயம். உண்மையில் அது ஒரு தேவையற்ற பயம். ஏனென்றால் கூட்டம் எப்போதுமே சிந்திக்கும் திறனற்றது, அது தெளிவான செயல்திட்டத்துடன் செயல்பட்டதாக உலகம் முழுக்கவே வரலாறு இல்லை.
நான் ஒரு மாற்றுக் கோரிக்கையை முன்மொழிகிறேன்:
1) கரப்பான்கள் சார்பில் அபிஜீத்தும் பிற 'தலைவர்களும்' ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் பொதுக்கல்விக்கு அதிக அளவில் நிதி ஒதுக்க வேண்டும், குறிப்பாக மாநில அளவில் நடக்கும் அரசுக் கல்லூரிகள், பல்கலைகளுக்கு நல்ல உள்கட்டமைப்புகளையும் கூடுதல் ஆய்வு நிதியையும் (ஒன்றிய அரசு தர வேண்டும் எனச் சேர்த்துக் கேட்டிருக்கலாம். நிதி போதவில்லை என்றால் ராணுவத்துக்கு ஆயுதம் வாங்கும் நிதியைக் குறைக்கலாம். கல்வி மேம்பட்டால் பொருளாதாரமும் மக்களும் மேம்படுவர். ஆயுதங்கள் அதிகமானால் அதிக உயிர்கள் போகும். யாரும் மேம்பட்டதாக வரலாறு இல்லை.)
2) பள்ளி அளவில் சராசரிக்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று தனியார் கல்லூரிகளில் இடம்பெறும் மாணவர்களின் கட்டணத்தில் 50% ஒன்றிய அரசு ஏற்கக் கேட்டிருக்கலாம்.
3) தனியார் கல்லூரிகள், பல்கலைகளில் மாணவர் சங்கங்கள் நடத்துவதில் மறைமுகத் தடையுள்ளது. மாணவர் சங்கங்களைக் கட்டாயமாக்கவும், அச்சங்கங்களுக்கு கட்டாயத் தேர்தல் நடத்தவும் சட்டம் கொண்டு வரக் கேட்டிருக்கலாம்.
4) தனியார் பள்ளிகளிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் மாணவர்களின் கட்டணம் இன்று பெரும் சுமையாக மாறி வருகின்றன. இதைச் சரிசெய்ய மாணவர்களின் கட்டணத்திற்கு ஒரு வரம்பு கொண்டு வந்துவிட்டு அதில் 30-40% தனியார் நிர்வாகம் மாணவர்களுக்கான கணக்கில் அரசின் பொறுப்பில் வரவு வைக்கவும், பட்டம் பெற்ற பின்னர் மாணவர்கள் புது வேலை கிடைத்து அதில் நிலைப்பெறும் வரை (சுமார் ஓராண்டு) அப்பணத்தை வட்டியுடன் எடுக்கவும் கோரும் ஒரு சட்டத்தைக் கொண்டு வரும்படிக் கேட்கலாம்.
5) நாடு முழுக்க தனியார் பள்ளி, உயர்கல்வி ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தை வழங்குவதற்காக சட்டம் போடக் கேட்டிருக்கலாம்.
6) கல்வியில் ஒன்றிய அரசோ வேறு அரசுகளோ தம் கொள்கைகளையும் அரசியலையும் திணிக்காது எனக் கோரும் சட்டத்தை நிறைவேற்றக் கேட்கலாம்.
இப்படி எவ்வளவோ கேட்கலாம். கேட்டிருந்தால் சில கோரிக்கைகளாவது நடப்புக்கு வந்திருக்கும். இந்தப் போராட்டம் ஒரு வரலாற்றுத் திருப்பமாக இருந்திருக்கும்.
சரி, ஒருவேளை நாம் கல்வியைத் தாண்டிக் கோருவோம் என எண்ணம் வந்தால் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தத்தைக் கண்காணிக்க எதிர்க்கட்சிகளும் நீதிபதிகளும் கொண்ட ஒரு குழு அமைக்க வேண்டும், அவர்களுடைய ஆமோதிப்பை இதை நிறைவேற்ற கட்டாயமாக்கும் சட்டம் கொண்டு வரக் கோரலாம்.
வாக்கு எந்திரங்கள் மீது ஐயம் ஏற்படாமல் இருக்க வி.வி சீட்டுகளை வைத்து சரிபார்ப்பதைக் கட்டாயமாக்கும் சட்டத்தைக் கேட்டிருக்கலாம்.
இந்த விசயங்கள் ஏன் முக்கியம் எனில் மாணவர்கள் தொடர்ந்து பலியாக்கப்படுவது அவர்களுக்கான அரசியல் முகமை இல்லாமல் ஆவதும், நாட்டில் பாஜகவின் தேர்தல் சர்வாதிகாரம் தோன்றுவதாலுமே. வேலையின்மை, பெற்றோர்களின் கடன், மக்களின் மேம்பாட்டின் அரசின் மெத்தனம், தேர்தல்களை நிர்வகித்து தம் தோல்விகளை உச்சபட்சமாகக் குறைப்பதில் மட்டுமே அரசு கவனமாக இருப்பது, பொருளாதார நிலைகுலைவு, கல்வியில் அரசின் முதலீடு குறைந்துகொண்டே வருவது ஆகிய காரணங்களாலே. இவற்றால் ஏற்படும் கோபமே இப்போராட்டங்களில் வெடித்துள்ளது. ஆனால் அக்கோபம் கண்மூடித்தனமானது. ஏன் தனக்கு இது நிகழ்கிறது என இளைஞர்களுக்குத் தெரியவில்லை அல்லது அவர்களுடைய தலைமை அவ்வாறு அறிவூட்டவில்லை. நோயைத் தீர்க்காமல் நோய்க்குறிக்கு மருந்து சாப்பிடுவது அல்லது நோயை மன்னிப்புக் கேட்கக் கோருவதைப் போன்றதே இப்போதைய தீர்வு. நோய் இன்னும் தீவிரமாகப் பரவும் என்பதே உண்மை.
இதனால்தான் அபிஜீத் தீப்கே போன்றோர் 'வாக்குகளைத் தேடி அரசியல் செய்வோர் நாங்கள் அல்ல' என்று பெருமையாகச் சொல்வது அவர்களுடைய போதாமையையே காட்டுகிறது என நினைக்கிறேன். இந்த அரசியல் தலைவர்களே இவ்வளவு பிரச்சினைகளையும் தெளிவாகப் பேசிவருகிறார்கள். இம்மாணவர்களை அப்பிரச்சினைகளை நோக்கிச் செலுத்தாமல் பூடகமாகக் கொண்டு போய் ஒரு அமைச்சரை ராஜினாமா செய்ய வைப்பது என அபத்தமாக முடித்திருக்கிறார்கள். தீப்கேயின் பெரும் போதாமை அவர் பொதுநலனைக் கருதாமல் இவ்விசயங்களைச் செய்கிறார் என்பதே. பொதுநலனைப் பேசுவதே அவசியமற்றது, அது கவனத்தைச் சிதறடிக்கும் என்கிறார். இது (அரசியலின்மை) ஒரு என்.ஜி.ஓ பாணியாகத் தெரிகிறது. பொதுநலனைப் பேசாமல் அரசியல்வாதிகளால் பிழைக்க முடியாது.
பெரும் கூட்டமாக இளைஞர்கள் திரண்டு பிரதமரை விமர்சித்துக் கூடியதைப் பாராட்டாமல் இருக்கிறேனே, எனக்குப் பைத்தியமோ என சிலருக்குத் தோன்றக் கூடும். எப்படி விமர்சித்தார்கள்? பிரதமருக்கு பிரா அணிவித்தும், அவரைப் பெண்ணாகச் சித்தரித்தும், அவரது விதைகளைப் பிதுக்குவதாகச் சித்தரிக்கும் படங்களைக் காட்டியும், நடுவிரல் காட்டியும். இது ஒரு குழந்தைத்தனமான அதிகார எதிர்ப்பு மட்டுமே. தம்மைக் கட்டுப்படுத்தும், தண்டிக்கும் எவருக்கும் இந்த இளைஞர்கள் இதையே செய்வார்கள். இது எதிர்ப்பை அவமதிப்பாகச் சிதறடிக்கிறது. எந்தப் பதாகைகளிலும் அரசின் ஊழல்கள், மதவாதம், தேர்தல் முறைகேடுகளை விமர்சித்து வாக்கியங்களையோ படங்களையோ நாம் காணவில்லை. மோடி தன்னை ஒரு சர்வாதிகாரியாகப் பெருமைப்படுவதால் அவருக்கு இது ஒரு வீழ்ச்சி. ஆனால் அவரது அரசின் மீதான மக்கள் எதிர்ப்பாக இப்போராட்டத்தில் தின்ரண்டு வந்த செய்தி என்ன? ஒன்றுமில்லை.
மேலும், எச்செயலும் தனக்கான நடைமுறைப் பயனைக் கருதாமல் நிகழ்ந்தால் அது நேர வீணடிப்பு மட்டுமே என்பது என் நம்பிக்கை. நடைமுறை பயனை யோசிப்பதுதான் இலக்கைத் தீர்மானிப்பது, பொதுவாழ்வில் நிகழும் ஒன்றுக்கு இலக்குக்கு வேண்டுமெனில் அது அரசியல் நோக்கத்தில் இருந்துதான் வர முடியும். எல்லா சமூகப் பிரச்சினைகளையும் விலக்கி வைத்து, மாணவர் பிரச்சினைகளையும் கூட தீர்வை நோக்கிக் கொண்டு செல்லாமல் திசைமாற்றுகிற உணர்ச்சிகர அரசியல் போக்கை கரப்பான்பூச்சித் தலைமையிடம் காணலாம். இதே சிக்கலை நாம் வங்க தேசத்திலும் நேபாளத்திலும் நடந்த போராட்டங்களிலும் கண்டோம். ஜல்லிக்க்கட்டுப் போராட்டத்திலும் கண்டோம். அவர்களுடைய போராட்டங்களின் முடிவில் வந்த மாற்றங்களின் பின்பும் மக்கள் அதே சீரழிந்த ஆட்சியையே வேறு கட்சியின் வடிவில் காணுகிறார்கள். தெளிவான பொருளாதார, நடைமுறைத் தீர்வுகளைக் கோராத போராட்டங்களினால் வேறென்ன கிடைக்கும்?
இது கடைசியில் எங்கே போய் முடியுமெனில் இந்த ஆற்றலைத் திரட்டிக்கொண்டு சில அரசியல்வாதிகள் வேறு சிலரைப் போட்டுத்தள்ளுவதற்கும் தமக்கான அதிகாரத்தை அடைவதற்கும் பயன்படும். விஜய் பாட்டிலுக்குப் பத்து ரூபா எனப் பாடியபோதும், பெண்கள் பாதுகாப்புக்குத் தான் உத்தரவாதம் அளிப்பதாகச் சொன்னபோதும் அவரை ஆதரித்தவர்கள் எப்படி, என்ன வழியில், திட்டமென்ன எனக் கேட்கவில்லை. உணர்ச்சிவயப்பட்டு வாக்களித்தார்கள். அதன் பயனை இப்போது அனுபவிக்கிறார்கள். மக்கள் போராட்டமும் இப்படித்தான். விரிவாக விவாதிக்காமல், யோசிக்காமல் நடந்தால் அது கோபத்தைக் காட்ட மட்டுமே பயன்படும். தியாகம், கோபம், துணிச்சல், காயங்கள் ஒரு நேரடிப் பயனை அளிக்காவிடில் அதற்கு என்ன மதிப்பு? விவசாயிகள் போராடினார்கள், சட்டத்தை ரத்துப் பண்ண வைத்தார்கள். அதைப் போல பொருண்மையாக இவர்கள் எதைச் சாதித்தீர்கள்?
இப்போது பாஜக என்ன நினைக்கும்? "இன்ஸ்டாவை நாம் நன்றாகப் பயன்படுத்த வேண்டும்." ஏனென்றால் பாஜகவின் நிர்வாகம், கொள்கை, சித்தாந்தம் தவறு எனும் சேதியை கரப்பான்கள் கடத்தவில்லை. அப்படிச் சொல்வது தேர்தல் அரசியல், நாங்கள் இப்போது அரசியல் பண்ண மாட்டோம் என்றார்கள். நாளை இவர்களே தேர்தலில் நிற்பதாக உத்தேசித்தாலும் சர்ப் எக்ஸல் பாணியில் தூய்மை, நிர்வகத் திறன் எனத் தூக்கிக் கொண்டு வருவார்கள் என நினைக்கிறேன்..
அன்புள்ள கரப்பான்களே, இதை நீங்கள் செய்த நோக்கமென்ன, அதனால் கிடைத்த நடமுறைப் பயன் என்ன? இதனால் உங்கள் வாழ்க்கையோ மக்கள் வாழ்க்கையோ மேம்படும் என்பதற்கான ஆதாரம் என்ன?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...