அயர்லாந்து மற்றும் இங்கிலாந்திற்குச் சென்று டி20, ஒருநாள் தொடர்களை ஆடிய இந்திய அணி மூன்று தொடர்களை அடுத்தடுத்து இழந்திருக்கிறது. ஒரே ஒரு போட்டியை மட்டுமே வென்றுள்ளார்கள். இந்தளவுக்கு மோசமான சவுக்கடியை இதற்கு முன் தோனியின் தலைமையிலான சில அயல்நாட்டு டெஸ்ட் தொடர்களிலேயே இந்திய அணி பெற்றது. ஒருநாள், டி20 போட்டிகளில் எப்படியாவது சமாளித்து விடுவோம். இப்போது எல்லா வடிவங்களிலும் விழி பிதுங்கி நிற்கிறோம். டி20 உலகக்கோப்பையை அண்மையில் வென்ற அணி, ஒருநாள் உலகக்கோப்பையில் இறுதிப்போட்டியை அடைந்து தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அணி இப்படி ஓட ஓட விரட்டப்படுவதைக் காண அவமானமாக இருந்தது. இத்தோல்விகளுக்கு இரண்டே காரணங்கள்:
1) வியூகங்கள், அணித்தேர்வு, தலைமையில் தயாரிப்பின்மை
2) மோசமான உடற்தகுதி
முதல் பிரச்சினை அகார்க்கரும் சரி, கம்பீரும் சரி இத்தொடர்களை முக்கியமாகக் கருதி தயாராகவில்லை. கொஞ்சம் லகுவாக எடுத்துக் கொண்டு ஏதோ பரிசோதனை செய்வதாக நியாயம் கூறி மட்டமான முடிவுகளை எடுத்தார்கள். நேரடியாக ஷ்ரேயாஸை டி20 அணியில் தலைவராக்கியது, சூர்யகுமாரை ஏதோ ஆடு திருடுவது போல இரவோடு இரவாக அணியில் இருந்து தூக்கியது, ஐ.பி.எல் முடிந்ததுமே அப்கானிஸ்தானுடன் தொடர்கள், இலங்கையில் ஒரு ஏ அணியை அனுப்பி போட்டித் தொடரில் ஆட வைத்தது, இன்னொரு பக்கம் அயர்லாந்து போட்டித்தொடர், அடுத்து உடனே இங்கிலாந்து தொடர் மோசமான திட்டமிடலின் விளைவு. ஐ.பி.எல்லுக்குப் பின்பு இந்திய அணி இப்படி அடுத்தடுத்து அயல்நாடுகளுக்குப் போய் உடற்தகுதியிலும் ஒற்றுமையிலும் சொதப்பி அடிவாங்குவதைப் பலமுறை பார்த்துவிட்டோம். கொஞ்சமாவது விவரம் இருந்தால் அப்கானிஸ்தான், இலங்கை, அயர்லாந்துப் பயணங்களை ஒத்திப் போட்டுவிட்டு இங்கிலாந்து தொடரை மட்டும் கவனம் செலுத்தி இருப்பார்கள். வீரர்களை முன்பே இங்கிலாந்து அனுப்பி இரண்டு வாரங்கள் பயிற்சி கொடுத்திருப்பார்கள். ஷ்ரேயாஸை மெல்ல மெல்ல அணிக்குள் நிலைப்படுத்திவிட்டு தலைமையைக் கொடுத்திருப்பார்கள். உடற்தகுதி முழுமையாக இல்லாதோரை மொத்த அணிக்குள் தேர்வு செய்திருக்க மாட்டார்கள். ரோஹித்தை நீக்கப் போவதாக செய்தியைக் கசிய விட்டிருக்க மாட்டார்கள். இப்போது அணித்தலைவர், பயிற்சியாளர், தேர்வாளர்கள், வாரிய அதிகாரிகள், ரோஹித் எல்லாருக்கும் அசிங்கமாகி விட்டது.
இத்தொடர்களை வெல்ல வேண்டும் எனும் நோக்கம் இந்திய அணிக்கு உண்மையிலே இருந்ததா அல்லது ஏதோ ஆடி தத்தம் இடத்தைப் பாதுகாக்க வேண்டும் என நினைத்தார்களா? கம்பீர் பரிசோதனை எனும் பெயரில் சஞ்சு சாம்ஸனைக் கையாண்ட விதன், குல்தீப்புக்கு வாய்ப்பளிக்காதது என பல நிர்வாகக் கோளாறுகள். இங்கிலாந்து அணியைப் பாருங்கள். ஒரு டெஸ்ட் தொடர் முடிந்ததும் வெள்ளைப் பந்துக்கு என்று இன்னொரு அணியைக் களமிறக்குகிறார்கள். அவர்களில் சிலர் ஐ.பி.எல் ஆடியிருந்தாலும் அவர்களது உடற்தகுதி நம்முடையதை விட மேலானதாக இருந்தது. ஆர்ச்சர் எல்லா போட்டிகளிலும் தளராமல் வீசினார். 145 கிலோமீட்டர் வேகத்தை அவர் குறைக்கவில்லை. ரஷீத் விக்கெட் எடுக்காவிடினும் அவர்கள் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்பளித்தனர். பட்லரும் அப்படித்தான் - கம்பீர் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருந்திருந்தால் என்றோ பட்லரைத் தூக்கியிருந்திருப்பார். ஆனால் அவர்தான் அண்மையில் நடந்த போட்டிகளில் தொடர்களின் போக்கையே மாற்றும் இன்னிங்ஸ்களை ஆடியிருக்கிறார். என்னதான் புகார்கள் சொல்லப்பட்டாலும் மெக்கெல்லம் தன் வீரர்களை அரவணைத்துக் கொண்டு செல்வதில் பாராட்டத்தக்கவர். கம்பீரை அப்பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு பாஜகவின் தமிழ்நாட்டுப் பொறுப்பாளராக நியமிக்க வேண்டும். அவருக்கு ஏற்ற பொறுப்பு அதுதான். ரவி சாஸ்திரியெல்லாம் தெய்வ லெவல் என கம்பீர் நினைக்க வைத்துவிட்டார். அகார்க்கருக்கும் ஓய்வு தேவை. அவரது அணித்தேர்வு ரொம்ப மட்டமாக உள்ளது.
கருத்துகள்