முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ராகுலின் நியாயமான சந்தேகம்


 காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கரப்பான்களை அங்கீகரித்து ஆதரிப்பது குறித்து இருவேறு கருத்துக்கள் உள்ளதாகப் படித்தேன்: சோனியா காந்தி கரப்பான்கள் பக்கம் நிற்பது நல்லது என்கிறார். ஆனால் ராகுலோ அவர்களை நம்பத் தயாராக இல்லை. கடைசியில் பொதுவாக ஒருவரை அனுப்பி கரப்பான்களிடம் ஆதரவு சொல்லிவர வைக்கிறார்கள். ராகுல் தன் கட்சிக்காரர்களை அழைத்துக் கொண்டு பிரதமர் வீடு முன் தர்ணா செய்யப் போக கைது பண்ணப்படுகிறார். இங்கு நான் ஒன்றை கவனிக்க வேண்டும் - சில நேரங்களில் ராகுலின் கணிப்பு சரியாகவே இருக்கும்: கரப்பான்கள் ஒருவிதத்தில் பாஜக மீது மக்கள் மத்தியில் திரண்டு வரும் எதிர்ப்பையும் வெறுப்பையும் திசைதிருப்புவதற்காக உருவாக்கப்பட்டது என்று ஒருபக்கமும் (எதிர்க்கட்சிகள் தரப்பு), மோடி அரசைப் பலவீனப்படுத்த அமெரிக்க உளவுத்துறை உருவாக்கியவர்கள் என்று இன்னொரு பக்கமும் (பாஜக தரப்பு) கூறுகிறார்கள். எனக்கு மூன்றாவதாக கரப்பான்களை இயக்குவது பாஜகவுக்குள் மோடி மீது நெருக்கடி போட்டு அவரை ஓய்வு அறிவிக்கத் துடிக்கும் உட்கட்சி எதிர்ப்பாளர்கள் எனும் பார்வையுண்டு.

எது எப்படியோ இந்த மூன்றில் கொஞ்சம் கொஞ்சம் உண்மைகள் இருக்கலாம், அல்லது மூன்றில் ஒன்று உண்மையாக இருக்கலாம். அதேநேரம் இந்த ஆதரவையும் மீறி அவர்கள் வளர்ந்து விட்டார்கள். சொல்லப்போனால் இப்போராட்டம் அபிஜீத் தீப்கேவையும் மீறிப் போய்விட்டது என நினைக்கிறேன். மக்களுக்கு உள்ள வருத்தம், எரிச்சல், ஏமாற்றம் எல்லாவற்றையும் அரசின் மீது கொட்டித் தள்ளிவிட்டார்கள். இன்னொரு பக்கம், உங்களுக்கு அரசைப் பிடிக்குமோ இல்லையோ பொதுவெளியை ஆக்கிரமித்து எதிர்ப்பை வெளிப்படும்போது கிடைக்கும் கிளர்ச்சி ஒப்பற்றதாக இருக்கிறது. அப்போது ஆளும் அரசும் அவர்களுடைய அதிகாரக் கரங்களும் உங்களுடைய எதிர்ப்பின் மாய இலக்காகிறார்கள் (வெற்றுக் குறிப்பான் என்று சொல்லலாம்.). அதனால்தான் இப்படியான போராட்டங்களில் வெளிப்படும் உணர்வெழுச்சி அரசியல் எதிர்ப்பும் கோட்பாடு நிலைப்பாடும் மட்டுமல்ல. இது லும்பன் கலாச்சாரமும் அல்ல. பொதுவெளிக்கும் மக்களுக்குமான தொடர்பை நிபந்தனைக்குட்பதாக அரசு மாற்றி வைத்திருக்கிறது. நீங்கள் சில குறிப்பிட்ட வேளைகளில் குறிப்பிட்ட விதங்களில் மட்டுமே பொதுவெளியில் திரள முடியும் என்கிறது. அதன் மீதான எதிர்ப்பும் இத்தகைய கிளர்ச்சிகளில் வெளிப்படுகிறது. இப்படி மக்கள் போராட்டங்களில் பங்கெடுப்பது ஒரு 'அதிகார விளையாட்டாகவும்' மாறுகிறது. இப்போது காவலர்களிடம் அடிபடும் இளைஞர்கள் நாளை பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் இத்தகைய போராட்டங்கள் தொடர்ந்து நடந்து அவற்றின் நியாயங்கள் ஒரு கதையாடலாக்கப்பட்டு ஒரு பொதுக்கோபமாக திரட்டப்பட்டால் இதில் பங்கேற்காத பொதுமக்களின் ஒரு தரப்பு பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பார்கள்.
இந்தக் குழப்பமான சூழ்நிலையில் ராகுல் காந்தி இப்போராட்டத்தை தனியாக முன்னெடுக்க நினைப்பதை நான் விமர்சிக்க மாட்டேன். அவர் எதிர்கொள்ளும் அரசியல் சிக்கலையே அது காட்டுகிறது. நிஜத்தில் மோடி ராகுலின் எதிர்ப்பை சுலபத்தில் ஏற்பார். அவருக்கு ராகுலுடன் மோதுவது பலனளிக்கக் கூடியது. இளைஞர்களின் கோபத்தை கட்சிக்காரர்களின் தூண்டுதலால் நடக்கும் குழப்பம் என அவர்கள் திசைதிருப்புவார்கள். அதேநேரம் இப்போராட்டம் காங்கிரஸுக்கு சிறிது உதவப் போவதில்லை. உத்தவ் தாக்கரேவை அழைத்து வந்து கையைப் பற்றி உயர்த்திக் காட்டிய அபிஜீத் தீப்கேவால் ராகுலை அவ்வாறு அழைத்து வர முடியாது. காங்கிரஸ் சார்பு தமக்கு இல்லையெனக் காட்டுக் கொள்ள வேண்டும் என்பது அவரது தெளிவான முடிவாக இருக்கிறது. அதைப் பார்க்கையில்தான் ஒருவேளை பாஜகவினுள் இருந்துதான் யாரோ அபிஜீத்துக்கு உதவுகிறாரோ எனும் சந்தேகம் வலுக்கிறது. இதையேதான் ஷஷி தரூரும் சொல்கிறார். கரப்பான்கள் இப்பிரச்சினை முடிந்ததும் கலைந்து போவார்கள். ஆனால் காங்கிரஸுக்கு பாஜகவுக்கு எதிரான தெளிவான கருத்தியல் பார்வையும் இலக்கும் உண்டு, அவர்கள் தொடர்ந்து எதிர்ப்பார்கள் என்கிறார். அபிஜீத் என்னதான் அம்பேத்கரின் படத்தை அவ்வப்போது உயர்த்திப் பிடித்தாலும் அவர் இந்துத்துவத்தை எதிர்ப்பதோ ஆர்.எஸ்.எஸ்ஸைக் கண்டிப்பதோ பாஜகவின் வாக்களர் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை விமர்சிப்பதோ இல்லை. அவர்களிடம் இவ்வளவு பூடகத்தன்மை இருக்கும்போது அவர்களை கட்சிகள் போய் ஆதரிப்பது அபத்தமாக முடியும்.
நாடெங்கும் கிளர்ச்சி செய்யும் கல்லூரி மாணவர்களையும் இந்தக் கரப்பான்களையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. இளைஞர்கள் மோடியைப் போட்டுக் கலாய்க்கிறார்கள், கோடி மீடியாவை துரத்தி அடிக்கிறார்கள். ஆனால் கரப்பான்கள் நமது சண்முகம் தோழர் விஜய்யை விமர்சித்துக்கொண்டே "ஜுஜ்ஜு புஜ்ஜு" எனக் கொஞ்சுவதைப் போலத்தான் பாஜகவையும் மோடியையும் நடத்துகிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...