சமூக வலைதளத்துக்கு மட்டுமல்ல புத்தக வாசிப்பிலும் கூட எந்த இரும்பு விதிமுறைகளும் இல்லை - போக்குகள் உண்டு. நாம் போக்குகளைப் பார்த்து அவை விதிகள் என நினைப்போம். பேஸ்புக்கில் அப்படித்தான் நூறு வார்த்தைகளுக்குள் எழுதும் போக்கு வந்தது. மக்கள் சிலநேரங்களில் எதையும் ஊன்றிப் படிக்க வருவதில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். சின்னச்சின்ன பத்திகளில் கருத்துக்கள், நகைச்சுவைப் பதிவுகளை உடனடியாகப் படித்து மனதை ஆற்றிக் கொள்கிறார்கள். இது ஒரு வகை. ஆனால் மக்கள் எப்போதும் இப்படி இருப்பதில்லை என்பதும் முக்கியமான உண்மை - இதை என் அனுபவத்தில் கண்டுகொண்டேன்:
நான் மிக மிக நீளமான கட்டுரைகளை எழுதி அவை 30,000-50,000 தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டிருக்கிறது, பல்லாயிரம் பேர்களால் படிக்கவும் பகிரவும் பின்னூட்டத்தில் விவாதிக்கவும் பட்டுள்ளன (தரவுகள் உள்ளன). ஆயிரம் வார்த்தைகள் கொண்ட பதிவுகள் லட்சக்கணக்கில் படிக்கப்பட்டுள்ளன. யார் எதற்காகப் படிக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் படிக்கிறார்கள் என்பது நிஜம். ஒரே ஒரு நிபந்தனையை என்னால் உணர முடிகிறது - நேர்மையாக, துணிச்சலாகச் சொல்ல வேண்டும்; உண்மையாக நம்பிச் சொல்ல வேண்டும்.
ஆகையால் நீளம் ஒரு பொருட்டே அல்ல. ஆனால் விசயம் மட்டுமே பொருட்டானது - நீங்கள் ஒரு சிக்கலான தத்துவக் கருத்தை எப்படிச் சொன்னாலும் அது சுலபத்தில் மக்களிடம் போய்ச் சேராது. அதன் வாசிப்புப் பரப்பு மிக மிகக் குறைவாக இருக்கும். இதை நான் தெளிவாகப் புரிந்துகொள்கிறேன்: நானும் இருபது ஆண்டுகளுக்கு முன் அப்படியான கட்டுரைகளைப் படிக்கச் சிரமப்பட்டிருப்பேன். ஒன்றுமே விளங்கியிருக்காது. அதேநேரம் இவை எழுதத் தேவையில்லாதனவா? நிச்சயமாக அல்ல. ஒரு விசயம் அது தத்துவார்த்தமாக, இலக்கியத்தனமாக இருக்கிறது என்றாலும் அது ஒருவர் சந்திக்கும் நெருக்கடியின் மையத்தைத் தொடுகிறது எனில் அவர் அதை எழுத வேண்டும். அதைப் பத்து பேர்களோ ஐம்பது, நூறு பேர்களோ படித்தால் கூடத் தவறில்லை. (அவ்விசயம் தவறாக, தட்டையாக மாற்றப்படும்போது மட்டுமே சுலபத்தில் பலரால் படிக்கப்பட முடியும்.)
சரி சிக்கலான ஒன்றை ஏன் எழுத வேண்டும்?
அப்போதுதான் எழுத்தாளருக்கே அதை எழுதி விவாதித்து ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும். நேர்மையாக உண்மையாக இருந்தால் அவருக்குத் தன் தவறுகளும் அப்போது விளங்கும்.
சிக்கலான சில விசயங்கள் திரும்பத்திரும்ப பேசப்படும்போது அவை மக்களிடம் போய்ச் சேர்ந்துவிடும்.
சிலரோ பலரோ, எண்ணிக்கை ஏன் வாசிப்புக்கு முக்கியமாக இருக்க வேண்டும்? அது உற்பத்தி, நுகர்வுத் தொழிலில் இருந்து வந்தப் பழக்கம்தானே. நுகர்வின் பொருண்மையை வைத்து காசு சம்பாதிக்கலாம். ஆனால் யாரும் இங்கு ஒரு கட்டுரையை வைத்தோ கதையை வைத்தோ கோடீஸ்வரர் ஆகப் போவதில்லை. ஆகையால் தமிழ் எழுத்தாளருக்கு எண்ணிக்கை ஒரு பொருட்டல்ல.
இலக்கியப் பார்வையாளர்கள், பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையும் இன்று இந்த வணிக நோக்கத்துடனே பிணைக்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையை வைத்து அதிகமான நிதியாளர்களைப் பெற முடியும், அதிக நிதி அதிக அதிகாரத்தைத் தரும், வசதிகளைத் தரும், அதிக எண்ணிக்கை அயல்நாட்டு ஆதரவாளர்களை ஈர்க்கும். ஆக, இது ஒரு வணிக உத்தேசம் மட்டுமே. அதனாலே சில அமைப்புகளும் கட்சிகளும் பணம் கொடுத்து கூட்டம் சேர்க்கிறார்கள். இணையக் கூலிகளை வைத்து டிஜிட்டல் விருப்பக்குறிகளை, பகிர்வுகளைப் பெருக்குகிறார்கள். உங்களுக்கு அப்படியான உத்தேசம் இல்லையெனில் எண்ணிக்கை ஒரு பொருட்டல்ல. நீங்கள் ஒரு கருத்தை, பார்வையைப் பகிர்கிறீர்கள். தொடர்புறுத்துவதே உங்கள் நோக்கமெனில் அதை ஓரிருவருடன் சொன்னாலே தாராளம். கருத்தளவிலான தாக்கமே நோக்கமெனில் எண்ணிக்கை அல்ல கருத்தின் சாரமும் உண்மைத்தன்மையுமே அதைச் சாதிக்கும்.
எல்லாமே இந்த உலகில் வணிகமாக்கப்பட வேண்டியதில்லை எனும்போது நாம் வணிகச் சட்டகத்துக்கு வெளியே வைத்து மனிதச் செயல்பாடுகளைப் பார்க்கத் தொடங்கினால் தெளிவாகி விடும். நமது படைப்பாக்கச் செயல்கள், அறிவுச் செயல்பாடுகள் மகிழ்ச்சியானதாகும்.
எனக்கு வரவர எந்தக் கருத்துக்கும் மையமென ஒன்று இல்லையெனத் தோன்றுகிறது - கருத்துக்கள் தொடர்ந்து தோன்றிக் கொண்டே இருக்கின்றன. ஏனென்றால் அதில் ஒரு மகிழ்ச்சி உள்ளது. சில கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப் படுகின்றன. அதற்கும் காரணம் மகிழ்ச்சிதான். ஒரு துளி உண்மை நம் அருகில் வந்து நம் கையில் உட்காரும்போது நாம் மகிழ்ச்சியாகிறோம். இதில் எதுவும் யாரையும் 'தாக்கம் செலுத்துவதில்லை'. தாக்கத்தையும் நாம் மகிழ்ச்சியாக மட்டுமே பார்க்க முடியும்.
கருத்துக்கள் அடிப்படையில் மொழிக் கட்டமைப்புகள். சில சொற்கள் சேர்ந்து அமைந்து உருக்கொள்ளும் விதம் பலவித அர்த்தங்களை அவைச் சுமக்கவும் புதிது புதிதாகக் கற்பனை பண்ணவும் ஏதுவாக இருக்கும். இவற்றை மக்கள் அடிக்கடி எல்லா இடங்களிலும் பயன்படுத்துவார்கள். ஆணியே புடுங்க வேண்டாம் போன்ற நகைச்சுவைக் கட்டமைப்புகளும், செவ்விலக்கியங்களைப் படித்து அவற்றின் வழி நவீன இலக்கியத்தை அமைக்க வேண்டும், இலக்கியத்துள் மகத்தான தரிசனம் இருக்க வேண்டும் ஆகிய இலக்கிய வாக்கியங்களும் இப்படியானவையே. இவற்றை யாரும் உள்ளுணர்ந்து சொல்வதில்லை. சடங்கார்த்தமான மேம்போக்கான இந்தக் கட்டமைப்புகளை நாம் பயன்படுத்தி ஒரு இடைவெளியைக் கடந்து போகிறோம். அப்போது நாம் நினைத்ததைச் சொல்லி விட்டதாக திருப்தி கொள்கிறோம் (நிஜத்தில் நாம் எதையும் சொல்லியிருக்க மாட்டோம்). இந்த சந்தோஷத்தை பேருந்து நிலையத்தில் நிற்கையில் பேருந்து வந்ததும் வரும் உணர்வுடன் ஒப்பிடலாம். பேருந்தில் ஏறிச் சென்று நாம் அலுவலகத்திலோ இன்னொரு இடத்திலோ கஷ்டப்படத்தான் போகிறோம். ஆனால் ஏறியதும் அப்பாடா என்றிருக்கும். இக்கட்டமைப்புகளை மக்கள் பரவலாகப் பயன்படுத்தினால் ஒரு நகைச்சுவை நடிகரோ இலக்கியவாதியோ தாக்கம் செலுத்துகிறார் எனப் பொருளில்லை.
கடைசியாகத் தொடர்புறுத்துவது - உண்மையாக ஒருவர் எழுதும்போதும் மேம்போக்காக ஒருவர் கிளுகிளுப்பூட்டும்போதும் அந்த இன்பம் காரணமாக நாம் அவரை நேசிக்கத் தொடங்குகிறோம். அவரது எழுத்து / பேச்சு நம்மிடம் 'கனெக்ட்' ஆவதாக நினைக்கிறோம். நாம் நினைக்கும் உண்மை எந்தளவுக்கு ஆழமாகக் 'கனெக்ட்' ஆகியுள்ளது என்பதைத் தாண்டி இதிலும் பொருளில்லை. ஆழமாகத் தொடர்புறும்போது இருவருமே இருத்தலை ஆழமாக உணர முடிகிறது. இதன் பொருள் நாம் ஒரு கருத்தை 'டெலிவரி' செய்துவிட்டோம் என்பதல்ல.
உண்மை, அதனால் கிடைக்கும் தொடர்புறுத்தல், அதனால் வரும் மகிழ்ச்சி என்பதைத் தாண்டி மொழியில் ஒன்றுமே இல்லை (அதிகாரத்தையும், பணத்தையும் மட்டும் நாடுவோரைச் சொல்லவில்லை).
இப்படி மிக மிக எளிமையாக, அடிப்படையாக எழுத்தைப் புரிந்து கொள்ள விரும்புகிறேன். இலக்கியத்திலும் எழுத்து, கூட்டம் போடுவது இவ்வாறு எளிமையாக மாற வேண்டும். தமிழ் இலக்கியத்தைப் பின் தொடர்வோரின் எண்ணிக்கை 10,000 இல் இருந்து ஒரு கோடியாக மாறினால் அதனால் பயனுண்டு. நமது செயல்பாடுகளை வணிக நலன்கள் சாத்தியமாக்காவிடில் அவை நின்று போகும் எனும்படியாகப் பார்த்தால். ஜப்பான் ஒரு சிறு நாடாக இருந்தாலும் அங்கு வாசிப்பு ஒரு முக்கியச் செயலாக இவ்வாறுதான் கலாச்சாரப் பழக்கமாக வெளியில் இருந்து அரசாலும் இலக்கிய அமைப்புகளாலும் உருவாக்கப்பட்டது. சில நாடுகளில் ஒரே ஒரு படைப்பாளிக்கு நோபல் விருது கிடைப்பது பெரும் அலையை உருவாக்கும் (அதற்கான கட்டமைப்புகள் ஏற்கனவே உள்ள போது ). அதை ஒரு இலக்கிய அமைப்புச் செய்ய முயலலாம். ஆனால் அது எழுத்தாளர்கள், வாசகர்களின் பணி அல்ல. ஒரு வீடு எப்படி கட்டிடம் அல்லவொ ஒரு அமைப்பின் பணிகளும் இலக்கியம் அல்ல. ஆகையால், இங்கும் கூட எண்ணிக்கைப் பொருளற்றது.
நான் தூய்மைவாதம் பேசவில்லை. மொழிப் பயன்பாடை அதன் ஆழமான தளத்தில் வைத்துப் பார்க்கக் கோருகிறேன். ஒரே ஒருவர்தான் படிக்கப் போகிறார் எனத் தெரிந்திருக்கும் நூற்றுக்கணக்கான பக்கங்களை இரு எழுத்தாளர்கள் பரஸ்பரம் கடிதங்களக எழுதிய காலத்தில் சில இலக்கியவாதிகளுக்காவது இது தெரிந்திருந்தது. இன்று நாம் ஒரே ஒருவருக்காக 50,000 சொற்களை மின்னஞ்சல்களாக அனுப்பத் தயாரா? இல்லை. இலக்கியக் கூட்டம் நடக்கும்போது மேடையில் அல்ல, அரங்குக்கு வெளியில்தான் முக்கியமான உரையாடல்கள் நடக்கும் என இன்றும் கூறுவோர் அந்தக் காலத்தைச் சேர்ந்தவர்கள்தாம். நான் அப்படி வெளியே இருப்பதுதான் உள்ளே இருப்பது என்கிறேன்.
கருத்துகள்