
1935, செப்டம்டர் 1ஆம் தேதி, 50,000 பேர்கள் முன்னால் நின்று ரொம்ப கோபமாக, முஷ்டியை முறுக்கி தன் வழக்கப்படியான உரையை ஆற்றிக் கொண்டிருந்தார். அக்கூட்டமே ஆர்ப்பரித்தது. இவர்கள் மொத்தமுமே ஹிட்லரின் குழந்தைகள் எனும் அமைப்பைச் சேர்ந்த குழந்தைகளால் ஆனது. இந்த அமைப்பை 8-10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நாஜி கொள்கைகளைக் கற்பிக்கும் நோக்கில் ஹிட்லர் 1933இல் ஆரம்பித்திருந்தார்.
(எம்மா புட்சர் எழுதிய “Hitler Youth: how the Third Reich used children’s organisations to wage war” எனும் கட்டுரையில் இருந்து)
ஹிட்லரின் இனவாதமும், ராணுவ ஒழுங்குச் சமூகக் கட்டமைப்பும், விழுமியங்களும் விஜய்யிடம் இருந்து மாறுபட்டவை என்று அறிவோம். அது ஒரு செய்தி அல்ல. செய்தி இருவரும் பின்பற்றும் முறைமைகள் ஒன்றே என்பது. குழந்தைகள் மனதளவிலும் உடலளவிலும் வளராதவர்கள். சுயமாக முடிவெடுக்கும் முகமையும் முதிர்ச்சியும் அற்றவர்கள். அதனாலே குழந்தைகளை அரசியல் கட்சிக்காகவும், பிரச்சாரத்துக்காகவும் பயன்படுத்தக் கூடாது என சட்டம் சொல்கிறது. அதுவே நாகரிகமும் நீதியும் கூட. மூன்றே கட்சிகள்தாம் எனக்குத் தெரிந்து இந்த விதியை மீறி இருக்கின்றன - ஹிட்லரின் கட்சி, பாஜக, தவெக.
ஹிட்லரின் குழந்தைகள் (Hitler’s Youth) என்றே ஒரு அமைப்பு நாஜி ஜெர்மனியில் உருவாக்கப்பட்டது. அங்கு குழந்தைகளிடம் தொடர்ச்சியாக நாஜி இனவாதம் நேரடியாகப் பள்ளிக்கூடங்களில் பரப்பப்பட்டது. ஆசிரியர்கள் நாஜி கொள்கைகளை உதாரணங்களுக்குப் பயன்படுத்தினர். பாடநூல்களும் நாஜி கட்சியைப் போற்றும் விதமாகவே மாற்றப்பட்டன. மாணவர்களின் இத்தகைய அமைப்புகளுக்குத் தொடர்ந்து நிறைய கூட்டங்களும் ஊர்வலகங்களும் முகாம்களும் நடத்தப்பட்டு வளர்ந்தவர்கள், குறிப்பாக பெற்றோர், ஹிட்லருக்கு எதிராகப் பேசுவதைக் கண்காணித்து அரசிடம் ஒற்று சொல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர். மெல்லமெல்ல குழந்தைகள் இவ்வாறு குடும்ப வலைத்தொடர்பில் இருந்தும் சமூகத்தில் இருந்தும் உடைக்கப்பட்டு அரசின் முகவராக மாற்றப்பட்டனர். மேற்சொன்ன 1935 உரையை ஹிட்லர் நிகழ்த்தியபோது “ஹிட்லரின் குழந்தைகள்” அமைப்பில் இருந்து 60% மேலானோர் அவரது கட்சியில் உறுப்பினர்களாக இணைந்திருந்தனர். 1939இல் ஜெர்மனியில் 82 விழுக்காட்டுக்கும் மேலான குழந்தைகள் இந்த அமைப்பில் இருந்து வந்தவர்களாக இருந்தார்கள். 1939இல் 10-18 வயதைச் சேர்ந்தோர் இந்த அமைப்பில் இணைவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. குழந்தைகளைச் சேர்க்க மறுத்த பெற்றோருக்குத் தண்டனை அளிப்பதாக அச்சுறுத்தப்பட்டது. என்னதான், ஹிட்லர் கட்டாயப்படுத்தி குழந்தைகளைத் தன் கட்சியில் இணைத்ததாக இதைப் படிக்கையில் உங்களுக்குத் தோன்றினாலும் உண்மை அது மட்டுமல்ல; பல குழந்தைகள் இந்த அமைப்பினால் ஒருவித உறவுணர்வை தேசத்தின் பாலும் ஆளுங்கட்சியின் (அதாவது ஹிட்லரின் பிம்பம்) பாலும் உணர்ந்தனர். இவர்களுக்கு ராணுவப் பயிற்சி அளித்து 1945இல் இவர்களில் 12 வயதினரை ராணுவத்தின் பகுதியாகவே ஹிட்லர் ஆக்கினார். இந்தக் குழந்தைகளில் பலருக்கும் அரசியல், தேசம், யுத்த யுக்திகள், வரலாறு குறித்த எந்த உணர்வும் இருக்கவில்லை. தாம் என்ன செய்கிறோம் என்றே தெரியவில்லை. ஆனாலும் மிகுந்த பெருமையுணர்வால் இவர்கள் ஆட்பட்டிருந்தனர். அதாவது ஹிட்லர் இந்தக் குழந்தைகளின் தந்தையுருவாக (father figure) கருதப்பட்டார். போரில் ஜெர்மனி தோற்றுவிட இக்குழந்தைகளைப் படையில் இணைத்து எல்லையில் மனித அரணாக நிற்க வைத்து அவர்களைப் பலியாக்கி தன் ஆயுட்காலத்தை ஹிட்லர் நீடித்தார்.
ஹிட்லரின் அரசு இவர்களைப் பெற்றோரிடம் இருந்து பிரித்து இவர்களை அரசின் குழந்தைகளாகவே பாவித்ததால் இவர்களும் வயதுக்கு மீறின பொறுப்புணர்ச்சியைப் பாவித்து அதிலிருந்து சுதந்திரத்தையும் பரவசத்தையும் அனுபவித்தனர். இந்த வயதுப் பிள்ளைகளுக்கே உரித்தான உணர்வு தாம் பெற்றோரின் பிடியில் இருந்து தப்பித்து விருப்பப்படி வாழ வேண்டும், தமது முதிர்ச்சியற்ற நடத்தையையும் மிகைக்கற்பனையையும் சமூகம் ஆமோதிக்க வேண்டும் என்பதுதான். இதை ஹிட்லர் வழங்கினார்; பதிலுக்கு இக்குழந்தைகளின் கண்மூடித்தனமான ஆதரவை அவர் பெற்றார் - இந்தக் குழந்தைகளுக்கு வயதான பின்னர் 2005இல் அவர்களிடம் காணப்பட்ட பேட்டியில் இருந்து அவர்கள் மனத்தில் அப்போதும் ஹிட்லருடனான காலகட்டம் குறித்த பரவசமான நினைவுகள் இருந்தது என்பதைக் காண முடிந்தது. அந்தளவுக்கு ஆழமாக அரசியலாக்கமும் பிரச்சாரமும் ஒரு குழந்தையின் மனதுக்குள் ஊடுருவ முடியும்.
2022இல் குஜராத் தேர்தலில் குழந்தைகளை பாஜக தன் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தியதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டை எழுப்பியது. இதற்கு ஒரு மரபுண்டு - ஆர்.எஸ்.எஸ் அமைப்பே கலாச்சாரத்தைக் கற்றுக் கொடுக்கிறோம், சாமி கதை சொல்கிறோம் என்று இந்துக் குழந்தைகளை சிறுவயது முதற்கொண்டே இந்துத்துவ சித்தாந்தத்தை ஊட்டி உருமாற்ற முயல்வதுதான். அவ்வாறுதான் இன்றும் குழந்தைகளிடம் அது சமூகவலைதளங்கள் மூலம் பல வெறுப்புக் கருத்துக்களைப் பரப்பி வருகிறது. ஆனாலும் இவ்விசயத்தில் மோடி ஒரு எல்லையை மீறிப் போனதில்லை. ஆனால் விஜய் அதைத் துணிந்து செய்தார். அவர் தன் தேர்தல் பரப்புரையில் - தேர்தல் ஆணைய விதிமுறையையும் மீறி - குழந்தைகளிடம் தனக்காகப் பிரச்சாரம் பண்ணச் சொல்லிக் கேட்டார். அடுத்து அவர் இக்குழந்தைகளுக்கு தன் பதவியேற்பின்போது நன்றி சொல்லி தன் குற்றத்தையும் ஒப்புக் கொண்டார் (பாஜகவுடன் அவரது அரசு ஒரு ரகசிய ஒப்பந்தத்தில் இருப்பதால் இதைக் குறித்து தேர்தல் ஆணையமோ ஒன்றிய அரசோ விசாரிக்கவில்லை). இதையடுத்து அவர் செய்து வருவதுதான் ஆபத்தானது - அவர் இக்குழந்தைகளிடம் தன் மீதான ரசிக மனப்பான்மையை வளர்ப்பதற்காக பள்ளிகளில் பல பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்துமாறு தன் கட்சிக்காரர்களைப் பணித்துள்ளார். திருவள்ளூரில் விஜய் பிறந்தாளின் போது குழந்தைகளை பெரும் எண்ணிக்கையில் விஜய்யின் தோற்றத்தின் வரைகோட்டில் அமர வைத்துப் படமெடுத்தார்கள். வேறு பள்ளிகளில் விஜய்யின் ‘பீஸ்ட்’ படப் பாட்டை மாணவர்களைப் பாட வைத்து அதைக் கொண்டாட்டமாக மாற்றுகிறார்கள். இது ஒரு வெகுளித்தனமான செயலாக சிலருக்குப் படலாம். தவெகவினர் ‘தற்குறிகள்’ என்று அவர்கள் இதை கண்டுகொள்ளாமல் போகலாம். ஆனால் இதன்பின்னால் ஒரு தெளிவான பிரச்சாரத் திட்டமுண்டு. இன்றைய 12-15 வயது மாணவர்களை அவர் இலக்காக்கி அவர்களிடம் தன் மீதான ரசனையை அரசியல் ‘அதிகாரச் சுவையாக’ உணர வைக்கிறார். அதற்கு ஒரு அரச அங்கீகாரத்தை அளிக்கிறார். இதன்மூலம் இவர்களுடைய இதயத்திலும் இவர்களுடைய பெற்றோரின் இதயத்திலும் ரசிக மனநிலையைச் சார்ந்த அரசியல் ஆதரவை வளர்க்கலாம் என உத்தேசிக்கிறார்.
இதற்கு முன்பு விஜய் ரசிகராக இருப்பது மக்கள் திரளின் பகுதியாக மாறுகிற திளைப்பை மட்டுமே ஒருவருக்கு அளிக்கும். இன்று நீங்கள் அவ்வாறு இருப்பது அரச அதிகாரத்தின் பகுதியாக மாறும் அதிகாரத் திளைப்பை அளிக்கிறது. இதை உடனடியாகச் செய்ய முடியாது. மெல்ல மெல்ல இதைக் குழந்தைகளின் மூளைக்குள் திணித்து அவர்களை மூர்க்கமான ‘குழந்தைப் போராளிகளாக’ மாற்றுவதே உத்தேசம். என்னதான் சட்டமன்றத்தில் இது கண்டிக்கப்பட்டாலும் வரும் ஐந்தாண்டுகளில் பல்வேறு கட்டங்களில் இது தொடர்ச்சியாக பல நிலைகளில் நிகழத்தான் போகிறது: ஏனென்றால் இது நடந்தது பள்ளிகளில். பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான ராஜ்மோகன் இதற்கு பொறுப்பு ஏற்று மன்னிப்புக் கோரவோ முதல்வர் இதை நடத்தியவர்களைத் தண்டிக்கவோ இல்லை. அதற்குப் பதில் பெயருக்கு ஏதோ ஒரு பொறுப்பாளரை கட்சியில் இருந்து நீக்கம் செய்ததாகச் சொல்லி இருக்கிறார்கள். இது ஒரு கட்சிப் பிரச்சினை அல்ல. இது ஒரு குற்றம். இம்மாதிரி மேம்போக்கான நடவடிக்கைகளைப் பார்க்கையில்தான் இந்தப் போக்கு நிச்சயம் தொடரப் போகிறது எனத் தோன்றுகிறது. இவ்விசயத்தில், மனுஷ்யபுத்திரன் சன் நியூஸ் விவாதம் ஒன்றில் தெரிவித்த கருத்து கவனிக்கத்தக்கது: “இக்குழந்தைகளை விஜய் அடுத்த சட்டமன்ற தேர்தலில் இவர்கள் வளர்ந்து வாக்களிக்கும் வயதுக்கு வந்து தனக்கு வாக்களிப்பார்கள் எனும் உத்தேசத்தில் மூளைச்சலவை செய்கிறாரா?” ஆம், அதேதான். இது ஒன்றும் புதிதல்ல. வரலாற்றில் ஏற்கனவே நடந்துள்ளதுதான்.
ஏன் குழந்தைகள்? பாசிஸவாதிகளுக்கு குழந்தைகளை மூளைச்சலவை செய்வது மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக வாக்காளர்களை குழந்தைகளாக நடத்தப் பிடிக்கும். வளர்ந்தவர்கள் சிந்தித்து முடிவெடுப்பவர்கள். அவர்களுடைய சிந்திக்கும் திறனை மயங்க வைத்து அவர்களை கண்மூடித்தனமாக பிரச்சாரத்துக்கு ஏற்ப செயல்பட வைப்பதே அவர்களின் இலக்கு. இதனாலே அவர்கள் மக்களட்சி முறையை வெறுக்கிறார்கள். அவர்கள் முழுமையாக அடிபணிதலை விரும்புகிறார்கள். சிலர் தேசம், இனத்தின் பெயரில் அடிபணிதலைக் கேட்டால் விஜய்யைப் போன்ற ஒருவர் தன் மீதான ரசனையின் பெயரில் அதைக் கோருகிறார். ‘உங்கள் விஜய், உங்கள் விஜி, உங்கள் விஜய்யாக … உங்கள் வீட்டுப் பிள்ளைகாக வாக்களியுங்கள்’ எனும்போது அவர் உணர்வுவயப்பட்டு முடிவெடுங்கள் என்று மக்களின் சிந்தனைத் திறனை ரத்து செய்யக் கோருகிறார். வெகுமக்கள் ஹீரோயிச சினிமாவிலும் இதுதான் நடக்கிறது. வெகுமக்கள் சினிமாவின் அழகியல் அதன் இயல்பிலேயே ஆதிக்கவாதத்துக்கு பணிதலை ஒரு கொள்கையாக ஏற்றுக் கொண்டதுதான். இதை ஆதிக்கவாத அழகியல் என்று சினிமா கோட்பாட்டாளர்கள் அழைக்கிறார்கள். இப்படங்களில் மக்களாட்சி முறையே பிழைபட்டது; காவல்துறை, நீதித்துறை உள்ளிட்ட எல்லா நிறுவனங்களும் ஊழல்யமமாகி செயலிழந்திருக்கும். மக்களுக்குச் சிந்திக்கும், செயல்பட்டு மாற்றத்தை நிகழ்த்தும் திறன் இருக்காது; அவர்கள் வேடிக்கைப் பார்த்துக் கைத்தட்டுபவர்களும் கோரிக்கை வைப்பவர்களும் மட்டுமே (“என்னமாதிரி இந்த நாடும் ஊனமாகிடக் கூடாது, வா தலைவா” என்று ஒரு மாற்றுத்திறனாளி ஷங்கரின் “ஜெண்டில்மேனில்” ஹீரோவை அரசியலுக்கு வர அழைக்கும் காட்சியை நினைத்துப் பாருங்கள்.) மக்கள் ஒரு பெரும் திரளாக ஒற்றைக் குரலுக்குப் பணிவதும், உணர்வயப்பட்டு கோஷமிடுவதும் இப்படங்களில் மீளமீள காட்சிப்படுத்தப்படும். மக்கள் பேசி முடிவெடுப்பதாகவோ சிந்திப்பதாகவோ ஒரு காட்சி கூட இராது. இதை நீங்கள் அப்படியே நடைமுறை உலகுடன் ஒப்பிட்டால் இது ஒரு அபத்தம் என விளங்கும். முழுமையான எதேச்சதிகார அரசுகள் கூட தொடர் பிரச்சாரத்தாலும் (வாக்குத் திருட்டாலும்தான்) மக்களை வென்று ஆட்சியில் நீடிக்க இயல்கிறது. மக்களின் முகமையுடனும் சிந்தனைத் திறனுடனும் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து போராட வேண்டி உள்ளது.
சினிமா அவ்விதத்தில் பாசிசத்தின் ஒரு உன்னதமான நிலையைக் காட்சிப்படுத்துகிறது: மக்கள் சிந்திக்காமல் மொத்தமாக திரள்கிறார்கள், பணிகிறார்கள், ஒற்றைச் சொல்லுக்குப் பணிந்து வாக்களிக்கிறார்கள். ஒரு திரையரங்கில் மக்கள் கூட்டமாகத் திரண்டு கைத்தட்டி ஆர்ப்பரிக்கும் அனுபவமானது ஒரு பாசிசத் தலைவரின் கையசைப்புக்கும் மக்கள் கூட்டம் பணிந்து வரிசையில் நின்று பேரணி போகிற செயலுடன் ஒப்பிடத்தக்கது. இதனாலே நாஜி ஜெர்மனியில் 1000 படங்களுக்கு மேல் அரசின் வழிகாட்டுதலின் படி எடுக்கப்பட்டன. முசோலினி திரைப்படத்தை தன் கையிலுள்ள வலுவான ஆயுதமாக அறிவித்தார். என்னதான் பிரச்சார இலக்கியங்கள் உண்டென்றாலும் வாசிப்பு மனிதர்களைத் தனிமனிதர்களாக உடைக்கிறது, சிந்திக்கத் தூண்டுகிறது. சினிமா அதன் இயல்பிலேயே மனிதர்களை ஒற்றைத் திரளாக மாறியே ஒரு காட்சியைத் துய்க்க வைக்கிறது. அதாவது, சினிமா வளர்ந்தவர்களை தம் அறிவிலும் மனதிலும் குழந்தைகளாக மாற்றுகிறது. தொடர்ந்து சினிமா மயக்கத்தில் ஒரு சமூகத்தை வைத்திருக்கும்போது அவர்களை சின்னச்சின்ன சமிக்ஞைகள், முழக்கங்கள், வாசகங்களைத் தந்து ஒரு ரிமோட் பொம்மையைப் போலச் செயல்படுத்த இயலும்; இது ஆய்வில் நிரூபிக்கப்பட்ட ஒன்றுதான்.
சினிமா அளவுக்கு வாசிப்பால் பாசிசத்துக்கு உதவ இயலாது. இரண்டுக்கும் இடையில் (மேக்ஸ் வெபர் கிறித்துவத்துக்கும் முதலீட்டிய பொருளாதாரத்துக்கும் இருப்பதாகச் சொன்ன) தேர்ந்தெடுக்கப்பட்ட ஈர்ப்பு (elective affinity) உள்ளது. அதாவது இரண்டும் பார்க்க வேறுவேறாகத் தெரியும். ஆனால் அவை தற்செயலாக கைகோர்த்துக் கொண்டு பரஸ்பர வளர்ச்சிக்கு உதவும். ஒன்று மற்றொன்றின் கருவியாகவும் மாறும். சினிமாவின் பிரச்சினை அது ரசிகர்களை ‘குழந்தைத்தனமான வாக்காளர்களாக’ மாற்றுகிறது என்பது மட்டுல்ல. வெகுமக்கள் சினிமா ஒரு வடிவமாகவே மக்களாட்சி முறையின் போக்குக்கு விரோதமான முறைமையைக் கொண்டிருக்கிறது.
சினிமா மக்களைச் சிந்திக்க விடாமலும் சுயமாக வாக்களிக்கவோ விவாதிக்கவோ கேள்வி கேட்கவோ விடாமல் தடுக்கிறது. நீங்கள் கடந்த முப்பதாண்டுகளில் தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற படங்கள் அத்தனையையும் எடுத்துக் கொள்ளுங்கள்: அவற்றில் பாசிசம் மறைமுகமாக வெவ்வேறு பெயர்களில் (புரட்சி, மாற்றம், முன்னேற்றம், துணிச்சல், வெறித்தனம்) கொண்டாடப்பட்டிருக்கும். மக்கள் திக்கின்றி தவிக்க ஒருவர் அவர்களுக்காக முடிவெடுப்பார். ஒருவர் தோன்றி தீயவர்களைக் கொல்வார். ஒருவர் என்கவுண்டர் செய்வார். லஞ்சம், ஏற்றத்தாழ்வு, வறுமை எல்லாவற்றுக்கும் தீர்வு ஒருவரை கண்மூடித்தனமாக நம்புவது என்பார். இது வெறுமனே ஹீரோயிசம் அல்ல. நம் இயக்குநர்களும் நடிகர்களும் இதையே நம்புகிறார்கள். அதையே மக்களை நம்ப வைக்க விரும்புகிறார்கள். வெகுமக்கள் சினிமாவின் இலக்கணமே இதுதான்: அது அடிப்படையில் மக்களாட்சிக்கு, விவாதங்களுக்கு, முரண்களுக்கு, முரண்களின் முடிவில் எட்டப்படும் ஒருமித்த கருத்துக்களுக்கு எதிரானது. மக்களாட்சி குறித்து விமர்சிக்கிற சினிமாவை எடுங்கள். அவற்றில் தொடர்ச்சியாக சர்வாதிகாரமே தீர்வாக வைக்கப்படும். சினிமாவில் இப்படித் தெரிவது மென்-பாசிசம். இதை நான் என் கற்பனையில் சொல்லவில்லை. Sabel Inguanzo, Araceli Mateos, Homero Gil de Zúñiga ஆகியோர் 300க்கும் மேற்பட்டவர்களிடம் ஒரு ஆய்வை நடத்தி அமெரிக்கன் பொலிடிக்கல் ரிசர்ச் எனும் இதழில் பிரசுரித்த கட்டுரையில் பார்வையாளர்களிடம் எப்படி எதேச்சதிகாரம் சினிமா பார்ப்பதன் மூலம் தோன்றுகிறது என நிரூபித்திருக்கிறார்கள். சினிமா பார்க்கும் வழிமுறை அடிப்படையில் எதேச்சதிகார உளவியலை ஊன்றி வளர்க்கிறது என்பதே அவர்களுடைய அவதானிப்பு (The Silver Screen and Authoritarianism: How Popular Films Activate Latent Personality Dispositions and Affect American Political Attitudes). மனோஜ் குமார் ஜா பிரண்ட்லைன் இதழில் இந்திய சினிமாவை முன்வைத்து ஒரு ஆய்வைச் செய்ததில் இப்படியான முடிவுக்கு வருகிறார்: “India’s media, film, and digital ecosystem are a culture industry manufacturing consent for authoritarian power. Democracy must resist.”. அதாவது எதேச்சதிகாரத்தை ஏற்றுக் கொள்ளும்படியாக இந்திய சினிமா மூளைச்சலவைப் பணியை சிரமேற் கொண்டிருக்கிறது. மக்களாட்சி முறை இதை எதிர்த்துப் போராட வேண்டும். “எதேச்சதிகார பிரச்சார சினிமா (அதாவது கிட்டத்தட்ட எல்லா மசாலா படங்களுமே) மக்களின் பகுத்தறியும் திறனை ஒழித்து, சிக்கலான கதையாடல்களைப் புரிந்து கொள்ளும் திறனை மழுங்கடித்து அவர்களை எளிய, உணர்ச்சிகரமான கதையாடல்களை மட்டுமே ஏற்க வைக்கின்றன” என்று அவர்கள் மேலும் சொல்கிறார்கள் (“Manufactured fame, manufactured consent”, அக்டோபர் 3, 2025).
மேலும், இவ்வாறு பழக்கப்பட்ட சினிமா ரசிகர்களால் இருமையாக மட்டுமே (தூய சக்தி × தீய சக்தி) உலகைப் பார்க்க இயல்கிறது. விஜய்க்கு நேர் பின்னால் உள்ள வரிசையில் அமர்ந்திருக்கும் அவரது முன்னாள் ரசிகர் மன்றத் தலைவர்களான எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் நடந்து கொள்வதைப் பாருங்கள். அமைச்சர் கீர்த்தனாவைப் பாருங்கள் - விஜய் எதாவது சினிமா வசனத்தைப் பேசும்போது மட்டும் அவர்களது வாயெல்லாம் பல்லாகிறது. எதாவது புள்ளிவிபரத்தையோ திட்டத்தையோ அவர் படித்தால் அவர்கள் முகம் சோர்ந்து விடுகிறது. விஜய்யை ஆதரிப்போருக்குத் தொடர்ந்து விதவிதமான கற்பனை எதிரிகளும் ஆபத்துக்களும் தேவைப்படுகின்றன. தம் வாழ்வின் நடைமுறைப் பிரச்சினைகளுக்கு (மன அழுத்தம், உறவுப் பிரச்சினைகள், அந்நியமாதல், தனிமையில் இருந்து வேலையின்மை, வெப்பயமயமாதல் வரை) எல்லாம் காரணம் இந்த பயங்கரமான தீய சக்திகள் (ஆளுங்கட்சி (அப்போதைய திமுக ஆட்ச), சிறுபான்மையினர், பாகிஸ்தானியர், அர்பன் நக்ஸல்கள்) என்று அவர்கள் நம்பத் தலைப்படுவார்கள். இதுக்கும் அதுக்கும் என்ன சம்மந்தம் என்றால் அவர்களுக்கு விளக்கத் தெரியாது. அவர்கள் இப்படியான எளிய எதிரிகளைக் கட்டமைத்துக் கடந்து விட விரும்புகிறார்கள். இது அப்படியே சினிமாச் சட்டகத்தை நடைமுறையில் வைத்துப் பார்ப்பதுதான். சினிமாவில் நடக்கிற எதுவும் நடைமுறையில் கிடையாது, அதனாலே சினிமா அழகானது என நினைக்கிற மசாலா ரசிகர்கள் மெல்ல மெல்ல நடைமுறை உலகைப் பொருட்படுத்தாமல் நகரத் தொடங்குவார்கள். அதனால்தான் தவெகவிற்கு வாக்களிப்பவர்களாலும் தம் முடிவின் விளைவு என்ன, தவெகவினால் தம் அன்றாட வாழ்வில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா என்று யோசிக்க விரும்ப மாட்டார்கள். இரண்டும் வேறு வேறு எனத் தெளிவாக இருப்பார்கள். நடைமுறையின் இடத்தில் அவர்கள் கனவை வைத்திருப்பார்கள். இதுவே பாசிசத்துக்கு மிகவும் லாபமான உளவியல். விஜய் இவர்களைத் தன் குழந்தைகளாக மாற்றி வைத்திருக்கிறார், ஏற்கனவே குழந்தைகளாக இருப்பவர்களையும் மூளைச்சலவை செய்து தன் ‘நெடுநாள் குழந்தைகளாக’ வைத்திருக்கத் திட்டமிடுகிறார்.
இதை நாம் வேடிக்கையாகக் கடந்து விடுகிறோம். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருகிற நாயகனுக்கும் இந்த திரைக்கதை மட்டுமே புரியும். அவர்கள் சினிமாவில் பிரயோகித்த மென்-பாசிச மொழியையே தம் பிரச்சாரத்திலும் நிர்வாகத்திலும் பயன்படுத்துகிறார்கள்.
சினிமா பாசிசத்துக்கும் அரசியல் பாசிசத்துக்குமான வேறுபாடு இது: முன்னது கலாச்சார அளவில், வெகுமக்களின் கூட்டு உளவியலில் செயல்படுகிறது, பின்னது சமூகக் கட்டமைப்புகளில், நடைமுறையில் மக்களின் உணர்ச்சியைத் தூண்ட வைக்கிற இனவாதம், மதவாதம், வன்முறை, வெறுப்புப் பிரச்சாரத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. இரண்டின் ஊடகங்கள் தாம் வேறுவேறு. ஆனால் இலக்கு ஒன்றுதான் - கட்டற்ற அதிகாரம், ஊழல் கொள்ளை, தம்மை ஆதரிக்கும் முதலீட்டாளர்களுக்கான நிதிக்கொள்கைகள். விஜய்யால் தன் சினிமா மொழியையும் பாசிச மொழியையும் சுலபத்தில் விருப்பப்படி மாற்றிமாற்றிப் பயன்படுத்த முடிவது இதனாலே. விஜய்யை அவரது ஊடகத்தை வைத்து மட்டும் மதிப்பிடும்போது அவரது பாசிசம் நமக்குச் சட்டெனப் புலப்படாமல் இருப்பதும் இதனாலே.
ஹிட்லர் தன் குழந்தைகளை உலகப்போரின்போது மனித அரணாகப் பயன்படுத்தி இரையாக்கினார். விஜய் தன் ‘குழந்தைகளை’ தன் நிர்வாகமின்மை, சீரழிவினால் முதிர்ச்சியற்ற, வேலையற்ற, முன்னேற்றமற்ற ஒரு சமுகமாக மாற்றி படுகுழியில் தள்ளுகிறார். உலகப்போரில் ஜெர்மனி தோற்றதும் நேய நாடுகளின் படைகள் வந்து ஹிட்லரின் குழந்தைகளை மீட்டனர். விஜய்யின் குழந்தைகளை யார் மீட்பர்?
நன்றி: உயிர்மை, ஜூலை 2026
கருத்துகள்