மீரான் மைதீன் குமரி மாவட்ட எழுத்தாளர்களில் தனித்துவமானவர் . குமரி மண்ணில் தோன்றிய புனைவெழுத்தாளர்களில் பொன்னீலன் , ஜெயமோகன் , நாஞ்சில் , சுந்தர ராமசாமி , லஷ்மி மணிவண்ணன் , குமார செல்வா உள்ளிட்டோரிடம் நாம் அம்மண்ணுக்கே உரித்தான பகடியை , நக்கலை , வக்கணையை காண முடியாது . ( வெகுஜன தளத்தில் இயங்கும் பிரபுதர்மராஜ் ஒரு விதிலக்கு .) அவர்களுடைய நடை கவித்துவமானது , அல்லது அரசியல் கூர்மை கொண்டது ; அவர்களுடைய மொழி குமரி பண்பாட்டின் வேறு இயல்புகளை சித்தரிப்பது , ஆனால் இந்த குணாம்சம் மட்டும் இல்லை : இம்மண்ணில் வெகுசகஜமாக பேச்சிடையே பரஸ்பரம் கிண்டலடிப்பது , அதை தமக்குள் ரசிப்பது , எந்த பிரச்சனையையும் போகிற போக்கில் எடுத்துக் கொள்வது போன்ற இயல்புகள் மக்களின் ரத்தத்தில் கலந்து போனவை . மற்ற தமிழ்ப் பகுதி மக்களிடையே காணப்படும் கோபாவேசம் , செண்டிமெண்டுகள் , முணுக்கென்றால் அழுது மன்றாடுகிறது , துண்டை உதறிக்கொண்டு வீட்டை விட்டுப் புறப்படுகிற , அருவா தூக்குகிற குணாதசியங்கள் இங்கு இல்லை . அண்மையில் தமிழ்நாடே வெள்ளத்தில் மிதந்து அல்லல்...