முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அப்பாக்களின் ஆட்டம்

முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணித் தலைவரான நசீர் ஹுசேனின் அப்பா தன் குழந்தைகளின் வளர்ச்சியை முன்னிட்டு அறுபதுகளில் இந்தியாவை விட்டவர். இவர் வைர, ரத்தின வியாபார பரம்பரையை சேர்ந்தவரல்ல, வெளிநாட்டு தலைமை கிளைக்கு உள்ளூரிலிருந்து போன கணினி பொறியியலாளருமல்ல. கைவசமிருந்த சில்லறைத் திறமைகளை பயன்படுத்தி அன்னிய நாட்டில் வேரூன்ற இந்த குடும்பத்துக்கு ரொம்ப காலம் பிடித்தது. அதனாலே பொருளாதார ஸ்திரமின்மை காரணமாய் வழக்கமாய் இந்திய மத்திய தர குடும்பங்களில் காணப்படும் இறுக்கங்கள், கட்டுப்பாடுகள், பதற்றம் போன்றவற்றை புலம்பெயர்ந்த நசீர் பால்யத்திலே அனுபவித்தார். இது அவரது ஆளுமையை பெருமளவில் பாதித்தது. இத்தகைய சூழலில் வளரும் குழந்தை இருவிதங்களில் எதிர்வினை செய்யும்: (அ) எதிர்மறையாக ஒரு கலகக்காரனாக மாறலாம்; (ஆ) தனித்துவமான ஆளுமை பெற்றோரின் நிழலில் குறுக்கிட, ஒரு பிரதிபிம்பம் போன்ற வாழ்வை வாழலாம். நசீர் ஹுசேன் தன் தந்தையின் நிழலிலிருந்து மிகத் தாமதமாக வெளிப்பட்டதை 'தீயுடன் விளையாடுதல்' என்ற நூலில் பேசுகிறார்.

இரண்டு வருடங்களுக்கு முன் ஏழு, எட்டு வயது குழந்தைகளுக்கான கோடைப்பருவ கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தை எம்.சி.சி மைதானத்தில் பார்த்தேன். குழந்தைகளின் அபாரமான பொறுப்புணர்வு, சலிப்பு, பலதரப்பட்ட திறமைகள் என பார்க்க முதிர்ந்தவர்களின் ஆட்டத்தை விட சுவாரஸ்யமாக, கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது. குழந்தைகளுக்கு பீல்டிங் எனப்படும் பந்துக்காக காத்திருக்கும் பொறுமை இல்லை. பலரும் ஆட்டத்தின் போது அடிக்கடி மைதானத்தில் உட்கார்ந்து விடுவார்கள். பயிற்சியாளர்கள் "டேய் ஏந்திரு கெட் அப்" என்று வாய் கிழிய கத்துவார்கள். பெற்றோர்கள் சப்பாட்டுக் கூடை, தண்ணீர் பாட்டில், டவ்வல் சகிதமாய் காத்திருப்பார்கள். அணித்தலைவன் பேருக்குத் தான். ஆட்டத்தை எல்லையில் நின்று நடத்துவது பயிற்சியாளர்கள். நான் பார்த்த அணியின் தலைவன் சோட்டூ எல்லைக் கோட்டில் நின்று நகம் கடித்தான். பயிற்சியாளர்கள் இந்த சிறுவர்களை அலசுவது கேட்க பயமாக இருக்கும். ஸ்ரீராம் என்றொரு சிறுவன் லூப்போடு கச்சிதமாய் சுழல்பந்து வீசினான். "இன்னும் பத்து வருஷத்ல இவன் தமிழ் நாடு ரஞ்சி ஆடுவான் சார்" என்றார் ஒருவர். அபினவுக்கு சில மைக்ரோநொடிகளுக்கு முன்னரே பந்து வரும் திசை, விழப்போகும் இடம் தெரிந்தது. சம்பிரதாய அமைதி ஆட்டம் ஆடி 47 ரன்கள் சேர்த்தவன், குளறுபடியான ரன் அவுட்டால் வெளியேற நேர, ஒருவர் பாய்ந்து வந்து அவன் முதுகில் அப்பினார்: " நாயே நாயே அவன் ஓடினால் நீயும் ஏன்டா ஓடுறே, ஹாப் சென்சுவரியை தவற விட்டியே போருமா நாயே ". அவர்தான் அப்பாவாம். வழிமுழுக்க உரக்க பையனை திட்டிக் கொண்டே வந்தார். குற்றவுணர்வில் தாரை தாரையாய் சிறுவன் கன்னத்தில் வடிவதை கவனிக்க பொறுமையில்லை. அந்த குழந்தை எதிர்காலத்தில் நிச்சயம் கிரிக்கெட் ஆடமாட்டான் என்று தோன்றியது. ஆனால் இங்கிலாந்தில் ஒரு குழந்தை தொடர்ந்து ஆடியது.

நசீர் ஹுசேனின் அப்பாவுக்கு ஏனோ பையனின் கிரிக்கெட் எதிர்காலம் மேல் அபார நம்பிக்கை. ஹுசேனுக்கு கால்சுழல் பந்து வீச்சில் திறமை இருந்தது. மட்டையாட்டம் சுமார்தான். பள்ளி ஆட்டங்களில் அவன் வீழ்த்தும் விக்கெட்டுகளின் எண்ணிக்கை பொறுத்துதான் வீட்டில் கால நிலை அமையும். பையன் சொதப்பினால் அப்பா அதை தன் சுயதோல்வியாகக் கொண்டு புகைவார். அது குடும்பத்தில் அனைவர் முகத்திலும் எதிரொலிக்கும். ஆட்டத்தில் வெற்றி என்றால் வீட்டிலும் கொண்டாட்டம். 'கறி' எனப்படும் இந்திய உணவு சமைக்கப்படும். எல்லாம் சுமூகமாக போய்க்கொண்டிருந்தது. 12 வயதில் ஹுசேன் திடுதிப்பென வளர்ந்து உயரமாகிடும் வரை. அந்த உயரம் அவன் பந்து வீச்சை பாதித்தது (பொதுவாய் குள்ளம் சுழல்பந்து வீச்சுக்கு உகந்ததாய் கருதப்படுகிறது). விக்கெட்டுகள் விழவில்லை. அவனது திறமையை இழந்து விட்டான் என்று பயிற்சியாளர்கள் தெரிவிக்க அப்பா இடிந்து போனார். பையனோடு முகம் கொடுப்பதை தவிர்த்தார். வீட்டில் சாவுக்களை. ஹுசேன் எதாவது செய்ய வேண்டியிருந்தது. மட்டையாட்டத்தில் இருந்த ஓரளவுத் திறமையை மெருகேற்றி முன்னேறினான். உற்சாகமான அப்பா இப்போது மட்டையாட்டத்தை பற்றிக் கொண்டார். நசீர் தேசிய அணியில் இடம்பிடிக்க வியூகம் வகுத்தார். அப்பாவுடனான உறவை நீட்டிக்க நசீர் தான் களமிறங்கும் ஒவ்வொரு ஆட்டத்திலும் சதம் அடிக்கும் நெருக்கடி இருந்தது. இந்த அழுத்தம் அவர் ஆட்டத்தை பெருமளவில் பாதித்தது. கவனம், பொறுமை, கடும் உழைப்பு சக்கரங்கள் ஆகி, இவரது ஆட்டத்தை நகர்த்தின. திறமையாளிகள், உழைப்பாளிகள் என்று எல்லாத் துறைகளிலும் பிரிவுகள் உண்டு. ஆனால் உழைப்பையும், திறமை வெளிப்பாட்டையும் பிரிப்பது மிக மெலிதான கோடே. கடும் உழைப்பாளிகளாய் இருப்பதில் தவறில்லை. சுதந்திரமாக தங்களை வெளிப்படுத்த அனுமதிப்பதுதான் முக்கியம். ஹுசேனுக்கு ஒவ்வொரு பந்தை சந்திக்கும் போது அவுட்டாகி விடுவோமோ என்ற பயம் இருந்தது. அவரால் தன்னை இயல்பாய் வெளிப்படுத்த முடியவில்லை. அதனால் எப்போதும் தட்டுத்தடுமாறி ஆடுவராக உருவானார். ஆனால் இவரது அதிகவன ஆட்டம் நெருக்கடி நேரங்களில் அணிக்கு கைகொடுத்தது. நசீர் விரைவில் அப்பாவின் கனவை நிறைவேற்றினார். இங்கிலாந்து அணியில் இடம்பிடித்தார். பிறகு நடந்ததெல்லாம் வரலாறு என்றாலும் திரைமறைவில் கிரிக்கெட் ஆட்டம் தந்த நெருக்கடிகள், மனஅழுத்தம் பற்றி இந்த நூலில் வரும் தகவல்கள் புதியவை.

சர்வதேச ஆட்டத்துக்கு முந்தின இரவுகளில் பெரும்பாலும் ஹுசேன் தூங்குவதில்லை. சதா கண்ணாடி முன் மட்டையுடன் நின்றும் எதிரணி பந்து வீச்சாளரை கற்பனை செய்து பயிற்சி செய்வார். அதிகாலை தூங்க முயன்றாலும் அடுத்த நாள் தான் சந்திக்கப் போகும் பந்துகள், சூழல் என்று மனம் ரீங்கரித்துக் கொண்டே இருக்கும். துயரம் என்னவெனில் 96 ஆட்டங்களிலும் இந்த நிலைதான். ஆட்டத்தின் போது பெவிலியனில் தன் முறைக்காக காத்திருப்பது நசீருக்கு கடுமையான மன உளைச்சலைத் தருவது. எதிர்மறைக் கற்பனைகளின் அழுத்தம் தாங்காமல் எப்போது ஆடுகளத்துக்கு ஓடுவது என்று தவிப்பார். இந்த காத்திருப்பின் நெருக்கடி காரணமாகவே துவக்க ஆட்டக்காரர்கள் நெடுநேரம் நிலையாக ஆடி ஓட்டம் சேகரித்த நிலையில் ஆட வரும் ஹுசேன் எளிதில் அவுட்டாகி விடுவார். விக்கெட்டுகள் வேகமாய் சரிந்து சீக்கிரமாய் ஆட வரும்போது சிறப்பாய் ஆடுவார். நகைமுரணாக, இந்த தனித்துவமான மனநிலை ஹுசேனுக்கு நெருக்கடி ஆட்டக்காரர் அடையாளத்தை பெற்றுத்தந்தது. இவரது சிறந்த ஆட்டம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 207. இந்த ஆட்டத்தின் போது தனக்கு உடலும் மனமும் இயைந்து போகும் ஒரு அபூர்வமான மனநிலை கிட்டியதாக சொல்கிறார். சுதந்திரமாக இவர் அடுத்து ஆடியது தன் கடைசி ஆட்டத்தில் தான். பதினாலு வருட கிரிக்கெட் வாழ்விலிருந்து ஓய்வு பெறுவதாய் ஏற்கனவே அறிவித்த நிலையில் நசீருக்கு அடையவோ, இழக்கவோ ஏதும் இருக்கவில்லை. இவரது மிகச்சிறந்த ஆட்டமாக இது அமைந்தது. சிறப்பாய் ஆடுவதன் சூத்திரம் இந்த இறுதி சில மணி நேரங்களில் அவருக்கு புரிந்தது. 

"தீயோடு விளையாடுவது" எனும் ஆங்கில சொலவடைக்கு அவசியமின்றி ஆபத்தில் ஈடுபவது என்று பொருள். ஒரு ஆவேசமான கலகக்காரனாக நசீர் பற்றிய பொதுச்சித்திரம் இந்நூல் படிக்கையில் கலைகிறது. ஆபத்து பற்றி எப்போதும் உள்ளூர பதறிய, தன் ஆட்ட வாழ்வை இறுதி கணங்களில் மட்டுமே கொண்டாடத் தெரிந்தவரின் கதை இது. மேலும் இந்நூலில் அணித்தலைமையின் மனவியல் பற்றி சில கூர்மையான அவதானிப்புகள் வருகின்றன. 1999இல் சிம்பாப்வே இனக்கலவரத்தைக் கண்டித்து இங்கிலாந்து அணி அங்கு செல்ல மறுத்தது. அப்போது சர்வசதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மால்கம் ஸ்பீட் அற உணர்வற்று நடந்து கொண்டதை, வீரர்களை கால்நடைகள் போல் நடத்தியதை ஹுசேன் கண்டிக்கிறார். நாம் அறியாத ஐ.சி.சியின் எந்திர முகம் இது. தற்போது ஐ.பி.எல் தாதா லலித் மோடி இந்தியாவில் மனித உயிர்கள் சர்வசாதாரணமாய் தீவிரவாதத்துக்கு பலியாகும் பயங்கர சூழலில் டெஸ்டி ஆட்டங்களை தொடர்ந்து ஆடும்படி இங்கிலாந்து அணியினரை மிரட்டி பணியவைக்கப் பார்க்கிறார். ஐ.பி.எல் எனும் டினோசர், கால்நடை சந்தையான கிரிக்கெட்டை கசாப்புச் சந்தையாக்கி விட்டது. 

பெற்றோர்களின் வற்புறுத்தலால் கிரிக்கெட்டில் நுழைந்த இருவேறு உதாரணங்களை இந்தியாவில் பார்க்கலாம். 

நவ் ஜோத் சிங் சித்து ஒரு பேட்டியில் " நான் எதற்கு கிரிக்கெட் ஆடுகிறேன் என்று பலமுறை வியந்ததுண்டு. என் கிரிக்கெட் ஆட்ட வாழ்வில் நான் விரும்பி ரசித்து ஆடியது மிகக்குறைவு " என்றார். அவர் மேலும் நெகிழ்ந்து சொன்னார்: " இப்போது ஒரு வர்ணனையாளனாக, பேச்சாளனாக நான் மிகவும் இயல்பாக உணர்கிறேன், ஈடுபாட்டோடு செயல்படுகிறேன் " சித்துவின் இந்த நாற்பது வயதிலான தாமத மலர்ச்சி பிறரையும் கூட ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இவரது செறிவான சுவாரஸ்யமான ஆங்கிலத்துக்கு, அதிரடியான கருத்துக்களுக்கு ஒரு தனி ரசிகப்படை உருவானது. அடுத்தடுத்து சொலவடைகள், ஒப்பீடுகள், மணிமொழிகள் தெறிக்கும் இவரது பிரவாக மொழியை ஊடகங்கள் 'சித்துவிசம்' என்று கொண்டாடின. கிரிக்கெட் பற்றி இவர் பேசினது பாதி உளறல்தான். ஆனால் கவாஸ்கர், ரவி சாஸ்திரியை விழுங்கி விடும்படியான பிரபலத்தை குறுகிய காலத்தில் அடைந்தார். கிரிக்கெட் விவாதங்களின் போது உணர்ச்சிவசப்பட்டு இவர் பிதற்றும் அபத்தங்களை, தன்னம்பிக்கையோடு செய்யும் கோமாளித்தனங்களை ஆங்கில செய்தி சானல்கள் ஒரு காமெடி டைம் போல் பயன்படுத்தின. திமிறும் மொழியின் வேகத்தோடு ஈடுகொடுக்கும் ஆர்ப்பாட்டமான உடல் மொழி சித்துவுக்கு இருந்தது. ஆட பாட கூட தயக்கமில்லை. தமிழில் சித்துவோடு வைகோவை ஓரளவு ஒப்பிடலாம். ஊடகங்களின் செல்லப்பிள்ளையை விரைவில் பா.ஜ.கா சுவீகரித்துக் கொண்டது. மீண்டும் டீ.வியில் பார்த்த போது சித்து காவி முண்டாசுடன் பொதுமக்கள் மத்தியில் அதே கொந்தளிப்புடன் பேசிக் கொண்டிருந்தார். கோமாளிகளுக்கும், பொழுதுபோக்காளர்களுக்கும் அரசியலில் முக்கியமான இடம் உண்டு என்பதை தத்துவ ஞானி பிளேட்டோ நூற்றாண்டுகளுக்கு முன்னரே கணித்திருந்தார். 

சித்துவின் அப்பா உயிரோடு இருந்திருந்தால் மகனின் எதிர்காலம் பற்றிய தனது கணிப்பின் தவறை அந்த சர்தார்ஜி உணர்ந்திருப்பார். சித்து கிரிக்கெட்டில் ஒளிவிட வேண்டும் என்பதே அவர் கனவு. ஆனால் குறைந்தபட்ச திறமை உடைய மகன் ரஞ்சி ஆட்டங்களில் ஓட்டங்கள் எடுக்கத் திணறி ஆடுகளத்தில் விறைத்துப் போய் நின்றான். பந்தின் திசை, விழப்போகும் இடத்தை அரை நொடிக்கு முன் கணிக்கும் திறன் இவருக்கு இல்லை. செய்தித்தாள் ஒன்று இவரை 'அடிக்கத் தெரியாத வினோதம்' என்று பரிகசித்தது. மனமுடைந்த தந்தை சிலநாட்களில் உயிரிழந்தார். கிரிக்கெட்டில் முன்னேறுவது சித்துவுக்கு தந்தைக்கு ஆற்றும் கடனாக மாறியது. இந்த குறிப்பிட்ட விமர்சனப் பத்தியை அறைச் சுவரில் ஒட்டி வைத்து, நாள் தோறும் பார்த்து உசுப்பேற்றிக் கொள்வார். கடுமையாய் உழைத்து சித்து தேசிய அணியில் நுழைந்தார். எதிர்பாராதபோதெல்லாம் சுழல்பந்தாளர்களை தூக்கி அடித்து "சிக்சர் சித்து" என பிரபலமடைந்தார். ஆனாலும் அணியில் நிரந்தரமடைய முடியவில்லை. பாதுகாப்பின்மை சித்துவை கடுமையாய் பாதித்தது. அசர் தலைமயிலான இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் சித்துவோடு சில இளைய வீரர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இவர்கள் தன் இடத்தை பறிக்க வருகிறார்கள் என்ற பதற்றத்தில் சித்து அணி மேலாண்மையோடு தகராறு செய்தார். அடுத்த விமானம் பிடித்து இந்தியாவுக்குத் திரும்பினார். பெற்றோர் ஆசிரியர்களின் நெருக்கடி தாளாமல் ஊரை விட்டு ஓடும் ஒரு பள்ளி மாணவனுடையதை ஒத்திருந்தது இவர் செய்கை. 1999இல் பாகிஸ்தானுடனான போட்டிகளில் கழற்றி விட்டதை சர்தாரால் தாங்க முடியவில்லை. ஓய்வு பெற்றார். அதுவொரு திருப்பு முனை; பட்டுப்புழு பட்டாம்பூச்சி ஆனது. பேச்சாளனாக, மீடியா விதூசகனாக, அரசியல்வாதியாக .

யுவ்ராஜ் சிங் இளமையில் ஜிம்னாஸ்டிக் சாம்பியன். இந்தத் துறையில் சாதிக்க வேண்டுமென்பதே பள்ளிப் பருவ கனவு. ஆனால் ஒரு சர்வதேச போட்டியில் மட்டுமே ஆட முடிந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அப்பா யோக்ராஜுக்கு பையன் மூலமாய் தன் நிறைவேறாத கிரிக்கெட் கனவை அடையும் அராஜக ஆசை இருந்தது. மகனை கட்டாயப்படுத்தி கிரிக்கெட்டுக்குத் திருப்பினார். மொட்டைமாடியில் ஆடுகளம் அமைத்து, ஈரப்பந்துகள் வீசி தானே நேரடியாய் பையனுக்கு பயிற்சி அளித்தார். விருப்பமற்ற கிரிக்கெட் ஆட்டத்தில் யுவ்ராஜுக்கு ஒரு கட்டத்தில் பிடிப்பு வந்தது. ஆனால் அர்ப்பணிப்புணர்வும், தீவிர ஈடுபாடும் வரவில்லை. பதினேழு வயதில் தேசிய அணியில் நுழைந்து நட்சத்திரமான யுவ்ராஜ் தவற விட்ட வாய்ப்புகள் தான் ஏராளம். 8 வருடங்களுக்குப் பின்னும் டெஸ்ட் அணியில் நிரந்தர இடத்துக்கு போராட வேண்டியுள்ளது. ஏகத்துக்கு திறமை இருந்தும், அதை ஒரே திசையில் செலுத்தும் மனப்பக்குவம் அற்றவர்.ஒரு சிறந்த சுழல்பந்து வீச்சாளரால் இவரை மூன்றே பந்துகளில் வீழ்த்த முடியும். ஆஃப் ஸ்டம்பில் இடுப்புயர வேகப்பந்துக்கு இவரது பின்கால் ஆடுமுறை படுமட்டம். தாக்குதல் ஆட்டத்துக்கு மட்டுமே ஏற்ற ஒரு முரட்டு பஞ்சாபியாகவே இன்றளவும் இருக்கிறார் இவர். 20-20 உலகக் கோப்பையின் போது யுவ்ராஜ் பெரிதும் எதிர்பார்த்த அணித்தலைமை தோனிக்கு வழங்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் இருந்து அப்பாவிடம் குறும்பேசியில் பொறுமி அழுதார். பிறகு இவர் அன்றைய இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் ஆறு ஆறுகள் விளாசி உலக சாதனை செய்ய, யோக்ராஜ் டி.வி நிருபர்களை அழைத்து மகன் அழுத சேதியையும், அவனது வீறுகொண்ட எழுச்சியையும் பற்றி பீற்றிக் கொண்டார். இந்திய பெற்றோர்களின் விகார முகம் அன்று ஒளிபரப்பானது.

யுவ்ராஜின் அம்மா இவர் குழந்தையாய் இருக்கும்போதே குடும்பத்திலிருந்து வெளியேறி விட்டார். ஒரு நொறுங்கின குடும்பத்தின் வலி தொலைக்காட்சி பேட்டிகளின் போது இவரது பால்யம் மாறாத முகத்தில் படர்கிறது. அப்பாவைப் பற்றின எதிர்மறை நினைவுகள் தான் உடனடி நினைவுக்கு வருகின்றன. ஒருமுறை வீட்டுக்கு நவ்ஜோத் சித்து வந்திருந்தாராம். யுவிக்கு அப்போது 13 வயதிருக்கும். அப்போது பள்ளி ஜிம்னாஸ்டிக் போட்டி ஒன்றில் தான் முதலிடம் வென்ற கோப்பையை அப்பாவிடம் காட்ட ஓடி வந்தார். யோக்ராஜ் அதை ஆத்திரத்தில் பிடுங்கி வீசினார். சித்துவிடம் பையனின் தவறான ஈடுபாடு பற்றி புகார் செய்தார். சிக்சர் சித்து யுவ்ராஜை அறிவுறித்தினார்: " தம்பி, ஜிம்னாஸ்டிக் பொம்பளைங்க விளையாட்டு. கிரிக்கெட்டுக்கு வா. அதான் வீரமான ஆட்டம்! "

யுவ்ராஜ் அப்பாவிடம் அழுததில் தவறில்லை. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...