முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜார்ஜ் சிர்டெஷ் கவிதைகள்: 2



அப்பா என்னை ஒரு வயலுக்கு குறுக்காக ஏந்திச் செல்கிறார்

அப்பா என்னை ஒரு வயலுக்கு குறுக்காய் ஏந்திச் செல்கிறார்.
அது இரவு, மேலும் அங்கு பனி நிறைந்த பதுங்கு குழிகள் உள்ளன.
கெட்டியான சேறு. இதுவரை என்னவென எனக்குத் தெரியாத ஒன்றிலிருந்து
மறைந்து இருப்பதில் நாங்கள் கவனமாக உள்ளோம்.
பிறகு நான் நடக்கிறேன்; நம் நால்வரிடையே
இடைவெளி உள்ளது. போக வேண்டிய இடத்துக்கு போகிறோம்.
நான் கனவில் இதையெல்லாம் கண்டேனா, இந்த பேய்க் காட்சியை,
ஆந்தை சிமிட்டிய, கழுதை பேசிய
நூறு ஏக்கர் காட்டை? படுக்கையில் நான் வசதியாக சுத்தமாக
கிடக்க, கைகள் கோர்த்து நாம் நிலப்பரப்பின் மீதாக மிதக்கிறோமா? எனக்கு முன்னதாக அப்பா நகர்கிறார், ஒரு அந்நிய ஏறத்தாழ அருகின இனத்தைப் போன்று; பேரச்சத்தில் வயலுக்கு குறுக்காக
எனதான முழுஅழிவை நோக்கி அவரைத் தொடர்கிறேன்.
வெடித்த நிலப்பகுதி மேலாக மிதக்கின்றன எங்கும்
ஆவிகள். மழைப்பருவ குளிர்மை எங்களையும்
அவற்றையும் வேறுபடுத்தவில்லை. அப்பா சுற்றிலும் நோக்குகிறார்;
புன்னகைக்கிறார் பிறகு திரும்புகிறார். இந்த இடத்தில்
எங்களுக்கு எந்த வேலையும் இல்லை, ஓசையின்றி, தொடர்ந்து நகர்வதன்றி.
வெற்றுப் பக்கம் ஒன்றை தமக்குப் பின் விட்டுப் போகும்
தொலைந்த உருவங்கள் மற்றும் கறுத்து உறைந்த நிலம்.
அவை குறுக்கே கடக்கின்றன ஒரு மேடையை கடப்பது போல்.

கண்ணாடி
(அ)



நாம் தொடர்ந்து மறையும் கண்ணாடி. அந்த கண்கள்
நமதல்ல, எப்போதும் அப்படி இருந்ததில்லை, அந்த தொலைந்து போன ஒன்றை
அவை தேடத் தேட. அவள் ஒப்பனை செய்து கொண்டிருந்தாள்.
நான் அவள் பின்னால் இருந்தேன்; சுவர் மேல் சூரியன் பேசத் துடித்தது.
ஆனால் அதனால் சொல்ல முடிந்தது எல்லாம் போய் வருகிறேன்; மீண்டும் போய் வருகிறேன்.
அதுவே சிறந்ததாக இருந்தது; தொண்டையில் இடறலின் ஆனந்தம்.

(ஆ)

உன்னை பின்னால் பார்த்தேன்; நீ கவனிப்பது தெரிந்தது. நாம் காற்றில்
தொங்கினோம் உடலுடன் நிழல்கள்; காலம் கிளம்பி நின்றது,
கதவு வழி, அங்கிகள் தொங்கும் இருண்ட ஹாலின் ஊடே சென்றவாறு இருந்தது.
என் அங்கியை அணிந்து விட்டு, வெளியே சென்றேன்; ஷாப்பிங் செய்ய வேண்டி இருந்தது. சாலை
ஒரு மைய பரப்புத் தோற்றமாக தன்னை விரித்துக் கொண்டது.
வாழ்வு ஒரு வடிவியல், ஒரு கட்டிடக் கலைஞனின் பென்சில் கொண்டு கோடுகள் வரைதல்.

(அ)

எத்தனையோ மறைந்து விட்ட கண்ணாடி கடை ஜன்னல்கள்
போக்குவரத்தை திருப்பி முறைக்கின்றன, இழந்த பொருட்களின்
புகைப்படங்கள் உள்ள ஆல்பம், ஏறத்தாழ நடைபாதைக்குக் கீழ் புதைக்கப்பட்ட எலும்புகளின் எக்ஸ்.ரே படம்.
அவள் செல்வதை பார்த்துக் கொண்டிருந்தேன். அது பனிமூட்டமாக இருந்தது, என் கண்ணாடிகளில் மூடுபனி படிந்திருந்தது.
அவள் அடுத்த மூலையில் திரும்பின போது என் லென்ஸ் முழுக்க எண்ணெய்க் கறைகள்.
சூரியனை எதிர்நோக்கி தற்போது நேராக அவள் சாம்பலாக எரிகிறாள்.

(ஆ)

நீ எப்போதும் எனக்கு பின்னுள்ளாய். நான் கழுவுத்தட்டில் கையலம்புகிறேன்.
நான் நின்று, நீ சவரம் செய்வதை கற்பனை செய்கிறேன். கண்ணாடியை தொட்டே விடுவது போல்
உன் முகம் முன்தள்ளப்பட்டுள்ளது. சவர-எந்திரத்தின் ஒலியைக் கேட்கிறேன்.
உச்சி மேகத்துக்கு மேல் தூரமாய் ஒரு விமானம் அடைகாக்கிறது. நீ
ஐ லவ் யூ சொல்லக் கேட்கிறேன்; கண்ணாடியின் சட்டகத்தில் இருந்து காலியாய், எரியும்
அறையின் வெளிக்குள் நான் நகர்வதை பார்க்கிறேன்.

பனிச்சறுக்கு பயணம்



உங்களுக்கு அந்த உணர்வு தெரியும் ஆனால் அதற்கு ஒரு பெயரிட முடியாது.
எல்லா ஆரம்பங்களும் ஒன்றுதாம். அனைத்தும் மறக்கப்படுகின்றன.
நீங்கள் செய்துள்ளது மறத்தல். அதை மீட்க முடியாது.
இப்போது அல்லது எப்போதுமாய். உள்ளுக்குள் நீங்கள்
போட்டுள்ள வார்ப்பு அது. வாழ்வெல்லாம் அவள் உடலைச் சுற்றி
அலைந்துள்ளீர்கள். நீங்கள் தொடரும் ஒரு மறைவான உருவப்படிவம் போல் அதை அறிந்து கொண்டுள்ளீர்கள்.
உங்கள் வாழ்வே அவள் கூறிய
ஏதோ ஒன்றின் பகடியாக இருப்பது போல் உள்ளது. காலையில் முதல் விசயமாக
அவள் தோலை ருசிக்கிறீர்கள். அது நீங்கள் மறக்க
ஆரம்பித்ததன் தொடக்கத்தில் இருந்து
சுவாசித்த போதையான சன்னமான குழந்தை வாசம்.
அவள் கைகள். பறந்து வட்டமிடும் பறவை. பிறகு ஒரு மெல்லிய
சுருக்கம் கொண்ட தோல் தடிப்பு அஸ்தமன சூரியனை
உள்ளே கொண்டு. அப்பா உங்களை
வைத்து இழுத்துப் போன பனிச்சறுக்கு வண்டி போல காலம் நழுவிப் போகிறது. நீங்கள் உங்கள்
சகோதரருடன் அமர்ந்து இருக்கிறீர்கள், அவளை இறுகப் பற்றி, அவன் கையுடன்
தொங்கியபடி, உங்களை சுற்றி அனைத்தும் வெள்ளையாக
மங்கலாக, ஆகாயமும், மரங்களும், அனைத்தும் இல்லாமலாக
அல்லது சென்று கொண்டிருக்க, வழுக்கலான வாழ்வைக் கொண்ட
இரவை நோக்கி அபாயகரமாக வழுவியபடி;
நீங்கள் நிலவையோ, அல்லது எதாவது திடமானதையோ கெட்டியாக பற்றிக் கொள்ள வேண்டும். இதை நீங்கள்
மறப்பது, சுத்தமாக எதையுமே நினைவிற் கொண்டிராதது, சரிதான்.

abilashchandran70@gmail.com

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...