Skip to main content

அமைதி, பணிவு, அணிக்கலாச்சாரம்: யாருக்கானது உலக்கோப்பை?



2011 கிரிக்கெட் உலக்கோப்பை யாருக்கானது? முன்னாள் வீரர்களும், பிரலங்களும், நிபுணர்களும், மீடியாவும் கூடவே சற்று குழம்பிப் போய் உள்ளார்கள். அனைத்துக் கைகளும் கோப்பையை சுற்றி பற்றி உள்ளன என்பதே அவர்களின் கண்டுபிடிப்பு. குறிப்பாய் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளின் விரல்கள் இறுக்கவே பற்றி உள்ளன. விநோதமாக, வழமையாகவும், ஐரோப்பிய நிபுணர்களும் வர்ணனையாளர்களும் வெள்ளை அணிகளை முன்னிறுத்துகிறார்கள். உதாரணமாக ஸ்டீவ் வாஹ் தென்னாப்பிரிக்கா வெல்லும் என்கிறார். அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவை முன்னிறுத்துகிறார். தென்னாப்பிரிக்க வர்ணனையாளர்களோ இங்கிலாந்து தான் வெல்லும் என்று ஊகிக்கிறார்கள். இந்தியா அனைவர் பட்டியலிலும் விடாப்பிடியாய் உள்ளது. இந்தியாவை ஆதரிக்கும் அளவுக்கு அதை முழுக்க நிராகரிக்கவும் அனைவருக்கும் தயக்கம் உள்ளது. ஜராசந்தனை போல் இந்தியா இரு துண்டுகளாக கிடக்கிறது. திறமையும் அழகும் கொண்ட குலுக்கு நடிகைகளை போல இலங்கையும் பாகிஸ்தானும் யாருடைய வெட்டவெளிச்ச பட்டியலிலும் முன்னணியில் இல்லை.
பொதுவான தெ.ஆ-இங்கிலாந்து ஆருடத்தின் மறைமுகப் பொருள் என்ன? இவ்வருட உலகக் கோப்பை ஒரு நீண்ட கொட்டாவியாக இருக்கும் என்பது. தென்னாப்பிரிக்கா ஆட்டங்கள் ஒரு அரிசி மில்லின் அரவை எந்திரத்தை ஈ மொய்க்க தூசு கிளம்ப கவனிப்பதை போன்றது. தெ.ஆரிக்காவுக்கு அடுத்தபடியான அரவை எந்திரம் இங்கிலாந்து. இவ்விரு அணிகளுக்கும் கொஞ்சமாவது வண்ணமூட்டுவது ஆம்லாவும், கெவின் பீட்டர்சனும் தான். சுவாரஸ்யமாக இருவரும் வேறு நாட்டில் இருந்து வந்தவர்கள். தோல்வியை தவிர்க்க வேண்டும் என்பதே இவ்விரு அணிகளின் லட்சியம். அதனால் ஜெயித்து விட்டாலும் அப்பாடா நல்ல வேளை தோற்கவில்லை என்று பெருமூச்சு விடுவார்கள். இது போன்ற அரவை எந்திரங்களால் ஆக்கிரமிக்கப் படுவது போன்ற ஒரு பெருந்துயரம் உலகக் கோப்பை பார்வையாளனுக்கு வேறொன்று இருக்க போவதில்லை. ஆகையால் கிரிக்கெட்டின் ஆதிதேவதை காப்பாற்றட்டும்!

முறுக்கு போல் நொறுங்குவதற்காகவே ஒவ்வொரு முறையும் ஆடிக் கொண்டிருந்தாலும் ஆஸ்திரேலியாவிடம் இன்னமும் வசீகரம் ஒட்டிக் கொண்டுள்ளது. தரமான, அதிரடி ஆட்டத்தை இன்னமும் அவர்களிடம் இருந்து எதிர்பார்க்கலாம். மத்திய ஓவர்களின் போது மட்டும் ஆஸ்திரேலியா நெடுஞ்சாலையில் வெளிப்பட்ட முயல் போகி ஆகி விடுகிறது. பொந்து தோண்டி தங்களுக்கே குழி பறிக்கிறார்கள். முதல் நான்கு வரிசை ஆட்டக் காரர்கள் நாற்பது ஓவர்கள் வரையில் தங்குவதும், வேக வீச்சாளர்கள் ஒவ்வொரு முறையும் ஆரம்ப விக்கெட்டுகளை தாராளமாய் வீழ்த்த வேண்டும் போன்ற இதற்கான வெளிப்படையான நிவாரண முறைகள் என்பது வரைபடத்துடன் இந்திய மாநகரங்களில் சுற்றுலா பயணிகள் நால்திசையும் பார்த்து திரிவது போல என்பதால் ஆஸி அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டும் என்று ஒரு பார்வையாளன் மீண்டும் பிரார்த்திக்க மட்டுமே முடியும்.

உள்நாட்டு குடுமிப்பிடிகள் மற்றும் அரசியல் மாற்றங்கள் காரணமாக பாகிஸ்தானும், போர் மற்றும் மக்கள் தொகை காரணமாக இலங்கையும் நெருக்கடி அணிகளாக என்றுமே பாதுகாப்பின்மையுடன் பொருதியபடியே இருந்து வந்துள்ளன. ஆனால் இந்த இரு அணிகளும் நெருக்கடிக்கு ஆக்ரோசமான நேர்மறையான எதிர்வினையையே செய்து வந்துள்ளன. அதனாலேயே கிரிக்கெட்டின் மிக வசீகரமான புல்லரிப்பு அணிகளின் முன்வரிசையில் உள்ளன. இரண்டு அணிகளும் ஆசிய சூழலுக்கு தோதான மட்டையாட்டம் மற்றும் பந்து வீச்சை கொண்டுள்ளன. இங்குள்ள சீதோஷ்ண நிலைகுறித்து போதுமான அறிவை கொண்டுள்ளன. இதுவரை உலக கிரிக்கெட் ஆஸ்தான்கள் மற்றும் ஐ.சி.சியால் தொடர்ந்து புறமொதுக்கப்பட்டுள்ள காரணத்தால் இலங்கையும் குண்டு வெடிப்புகளால் கிரிக்கெட் தடை செய்யப்பட்டு மாதத்துக்கொரு அணித்தலைவரை பார்த்து தலை புண்ணாகி நெருக்கடிக்கு உள்ளாகி உள்ள காரணத்தால் பாகிஸ்தானும் தாங்கள் இருக்கும் பிரம்மாண்ட இருளின் பிராந்தியத்தில் இருந்து வெளிவந்து தம்மை நிரூபிக்க இது ஒரு அற்புதமான நாடகீய தருணம் என்பதால் இவர்களின் மறுவரவை பார்வையாளன் ஆர்வமாக எதிர்நோக்கக் கூடும். எந்த ஒரு சிறந்த ஆட்டத்தொடரும் அணிகளின் சற்றும் எதிர்பாராத கீழிருந்து மேலான சாகச பயணங்களை காட்சிப்படுத்த வேண்டும். மேலிருந்து கீழ்நோக்கும் கிரிக்கெட்டின் தேவதையும் கீழிருந்து மேல் நோக்கும் பார்வையாளனும் சமதளங்களை வெறுக்கிறார்கள்.

அடுத்து வாய்ப்பு சதவீதம் என்னவாக உள்ளது?
இந்த உலகக் கோப்பை தொடரின் போது ஆடுதளங்களும் பனிப் பொழிவும் தான் சமாளிக்க முடியாத ஆனால் முடிவுகளை திசை திருப்பும் காரணிகளாக இருக்க போகின்றன. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாட்டு ஆடுதளங்களில் ஆட்டம் சீராகவே 100 ஓவர்களும் இருக்கும். டாஸ் வெல்வதை கடந்து இரு சாராருக்கும் வாய்ப்புகள் சமமாகவே இருக்கும். இதனால் அங்கெல்லாம் ஆட்டம் வெல்ல திறமையும் மனவலிமையும் போதும். ஆனால் இந்தியாவில் நிறைய தந்திரம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஆட்டமுறையை மாற்றிக் கொள்ளும் தகவமைவு திறன் வேண்டும். இங்கு ஆடுதளத்தின் சுபாவத்தை கணிப்பது சிக்கலாகவே இருக்கும். பகலிரவு ஆட்டங்களில் பனி எந்தளவுக்கு பெய்யப் போகிறது என்பது குறித்த நுட்பங்களும் முக்கியம். ஆடுதளம் இரண்டாவது இன்னிங்ஸில் தடாலடியாக மாறலாம். அல்லது தொடர்ந்து தட்டையாகவோ மிக மெதுவாகவா இயங்கலாம். எதற்கும் தயாராக உள்ள ஒரு ரப்பர் மனநிலை கொண்ட அணிகள் தாம் இந்த உலகக் கோப்பை தொடரில் தாக்குபிடிக்க முடியும். விவியன் ரிச்சர்ட்ஸ் மிகச் சிறந்த களத்தடுப்பு அணியே வெல்லும் என்கிறார். இர்பான் பதான் மிகச் சிறந்த பந்து வீச்சு அணியை ஆதரிக்கிறார். அதிகமாக ஓட்டங்களை குவிக்க கூடிய அணிக்கே கோப்பை வாய்ப்பு என்பது ஏறத்தாழ அனைத்து அணித்தலைமைகளின் நம்பிக்கையாக இருக்கிறது.

சவுரவ் கங்குலி, அனில் கும்பிளே உள்ளிட பல முன்னாள் வீரரகளும் இம்முறை உலகக் கோப்பை படையெடுப்பு யாரும் பிரதமராகக் கூடிய ஜனநாயக பாணியில் இருக்கும் என்கிறார்கள். நிபுணர்களின் பொதுவான ஒரு வாயுபிடிப்பு கணிப்பு இதுவாகவே உள்ளது. வானில் கோள்களின் இருப்பு நிலை மூட்டமாகவே உள்ளது. உறுதியாக கணிக்க யாரும் தயாராக இல்லை. இது ஏன்? சமீபமாக ஆசியாவில் முக்கிய அணிகள் மொத்தமாக பங்கேற்ற பெரும் ஆட்டத்தொடர்கள் எவையும் நிகழவில்லை என்பதே முக்கிய காரணம். தனித்தொடர்கள் நடந்தன. ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு வந்து ஒரு ஒருநாள் தொடரை வென்று மற்றொன்றை இழந்தது. இலங்கையும் தென்னாப்பிரிக்காவும், நியூசிலாந்தும், இங்கிலாந்தும் இந்தியாவில் இழக்க மட்டுமே செய்தது. இலங்கையில் மேற்கிந்திய தீவுகள் தொடரை இழந்தது. பாகிஸ்தானில் கிரிக்கெட் சமீபமாக மறக்கப்பட்டு விட்டது. வங்கதேசத்தில் நடந்த பரீட்சார்த்த ஆட்டங்களை யாரும் பொருட்படுத்த தயாராக இல்லை. அடி வாங்கியும் கொஞ்சம் கொடுத்தும் வங்க தேசம் வீங்கிப் போய் மட்டும் உள்ளது. இத்தொடரில் அந்த மனோதிடம் பயன்படும். ஆசிய பிராந்தியத்தில் ஐரோப்பிய அணிகளின் மீள் சறுக்கல்கள் பொதுவான கிரிக்கெட் தர்க்கத்தை குழப்புகிறது. காரணம் அடிவாங்கியவர்கள் பயில்வான்கள்; மிக வலிமையான அணிகள். அவர்கள் இழந்தது தனித்தொடர்கள் என்பதால் ஒரு பொதுத் தொடருக்கு அவ்விளைவுகள் செல்லுபடியாகாது. அடுத்து வெற்றிபெற்ற ஆசிய நாடுகள் முதிர்ச்சி அடையாதவை. கணிப்புகளை எளிதில் ஏமாற்றி விடும் எதிர்பாரா தன்மை கொண்டவை.
தால்ஸ்தாயின் போரும் வாழ்வில்போர் திட்ட விவாதத்தின் போது ரஷ்யாவின் கிழட்டு தலைமை தளபதி ஒருவர் நன்றாக குறட்டை விட்டு தூங்கி விடுவார். அவர் போரை அதன் போக்கில் வளர விட்டு வேடிக்கை பார்ப்பார். பல அணிகள் பங்கேற்கும் நீண்ட தொடர்களில் அணிகள் தங்களுக்கான ஒரு வெற்றிக் கலாச்சாரத்தை மெல்ல மெல்ல உருவாக்கி கொள்கின்றன. பின்னால் எத்தனையோ விளக்கங்கள் உருவாக்கப்பட்டாலும் உண்மையில் இந்த கலாச்சாரம் அணிக்குள் எப்படி ஏற்படுகிறது என்பது அணி வீரர்களுக்கே தெரிவதில்லை. ஒரு பேராற்றல் அவர்களை செலுத்துகிறது அல்லது அவர்கள் அப்பேராற்றலோடு ஒன்று கலக்கிறார்கள். பலமும் பலவீனங்களும், ஆடுதளங்களும், பனிப் பொழிவும், சுண்டி விழும் நாணயத்தின் விதியும் மீடியா விவாதங்களோடு சேர்த்து அமைதியான முதலிரவு அறைக்கு வெளியே இருக்கின்றன.

ஆக கிழட்டு ரஷ்ய படைத்தளபதி புரிந்து கொண்டது போல் விவேகமான பணிவு தான் வெற்றிக்கு பின்னுள்ள ஒரே தந்திரம். அத்தனை இரைச்சல்கள் களேபரங்களுக்கு மத்தியில் யார் அமைதியை உற்றுக் கேட்கிறார்களோ அவர்களுக்கான இக்கோப்பை.

Comments

Jayadev Das said…
ஆஸ்திரேலியாக் காரன் தான் கப்பை அடிப்பான்.
Veliyoorkaran said…
What a review man..?

One of the best articles I ever read about cricket..!

Keep Rocking Abilash..! :)
இந்த உலகக் கோப்பை தொடரின் போது ஆடுதளங்களும் பனிப் பொழிவும் தான் சமாளிக்க முடியாத ஆனால் முடிவுகளை திசை திருப்பும் காரணிகளாக இருக்க போகின்றன.
*********************************
மார்ச் ஏப்ரல் மாதங்களில் அப்படி என்ன பனிப்பொழிவு இந்தியாவில் இருந்து விடப் போகிறது? அப்படியே பனிப்பொழிவு அதிகமாக இருந்தாலும் ஸ்பின்னர்கள் நினைத்தபடி பந்தை சுழற்ற முடியாது என்பது தான் உங்கள் வாதமா? ஸ்பின்னர்கள் பந்தை டர்ன் செய்வதைவிட எவ்வளவு அதிகம் தங்கள் மூளையை செலவழித்து வீசுகிறார்கள் என்பதே முக்கியம்.

மேலும் எவ்வளவு தான் சுழற்றினாலும் எல்லைக் கோட்டுக்கு 100 மீட்டர்கள் தாண்டி சிக்ஸருக்கு அனுப்பும் பேட்ஸ்மேன்கள் எல்லா அணியிலும் இருக்கிறார்கள். நமக்கு யூசுஃப் பதான் என்றால் எதிர்த் திசையில் பொல்லார்டும் மிஸ்பா உல் ஹஃகும் பாண்டிங்கும் கிரேமி ஸ்மித்தும் உள்ளார்கள்.

பவுலர்கள் இந்தத் தொடரில் என்னதான் முயன்றாலும் ரன்களை வாரி வழங்குவார்கள் என்பதே உண்மை. பார்ட்னர்ஷிப்பை உடைக்கும் மிதவேகப் பந்து வீச்சாளர்களிடம் உள்ளது , வெற்றியின் ரகசியம். குறிப்பாக பவர் பிளேயின் போது யார் புத்திசாலித்தனமாக செயல்படுகிறார்களோ அவர்களே வெல்வதற்கு அதிகம் வாய்ப்புள்ளது.

நெருக்கடியை சமாளிக்கும் அணியை விட நெருக்கடியை முதலில் உருவாக்கும் அணிக்கே கோப்பை கைகூடும் எனத் தெரிகிறது. நெருக்கடியை உருவாக்குவதற்கு ஆல்ரவுண்டர்கள் தேவை. இது வரை நடந்த எல்லா ஒரு நாள் உலகத் தொடர்களிலும் ஆல்ரவுண்டர்களே முக்கியப் பங்காற்றியிருக்கிறார்கள்.

ஏன் எந்த விமர்சகருமே அதைப் பற்றி எழுத மாட்டேன் என்கிறீர்கள்?

மேலும் ஆடுகளங்கள் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் என்கிறீர்கள். சென்னைக்கும் பெங்களூருக்கும் மொகாலிக்கும் மும்பைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? எல்லாமே தட்டையான மிகவும் ஸ்லோவாக எழும்பும் பிட்சுகள். மேலும் எல்லா மைதானங்களும் அளவில் சிறியவை. அவுட் ஃபீல்ட் வேகமாக இருக்கும்.இரவு பேட்டிங் ஆடுவது மட்டுமே பிரஷராக இருக்குமே தவிர ஸ்பின்னோ ஆடுகளமோ ஒன்றும் செய்யப் போவதில்லை.

என்ன சொல்கிறீர்கள்?

நன்றி

ரெட்டைவால்'ஸ்
நன்றி வெளியூர்க்காரன்
ரெட்டைவால்
பனிப்பொழிவை பயந்து தான் நேற்றைய ஆட்டத்தில் தோனி இரண்டாவது மட்டையாட்டம் எடுத்தார். மெத்தன ஆடுதளத்தை இரவில் அது சிலவேளை சற்று துரிதப்படுத்தி விடுகிறது. ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த அது நேற்று அது நடக்கவில்லை. இது தான் நான் சொல்ல வருவது. ஆடுதள கணிப்புகள் இம்முறை அணிகளை தலைசுற்ற வைக்கும். ஆட்டத்தின் பாதியில் தான் இதை புரிந்து மாற்றி கொள்ள வேண்டும். அடுத்து ஆல்ரவுண்டர்களே கிட்டத்தட்ட இல்லை என்ற நிலை இருப்பதால் தான் யாரும் அதை குறிப்பிட இல்லை என்று நினைக்கிறேன். காலிஸ் இப்போது பந்து வீசுவது இல்லையே!

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...