முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இணையம் இன்று இலக்கியத்தை எப்படி பாதித்துள்ளது


கடந்த சில வருடங்களில் இணையம் தமிழ் உரைநடையை கவனிக்கும்படியாய் மாற்றி உள்ளது. சுஜாதா ஒருமுறை குறிப்பிட்டது போல், தொண்ணூறுகளில் தீவிர உரைநடையாளர்கள் சிடுக்காக நீளமாக எழுதுவதை கௌரவமாக கருதினார்கள். “பொதுவாகவும் தனிப்பட்ட முறையில் நம்பப்படுவது போல் எனக்கு சளி பிடித்துள்ளது என்பதை சொல்லியாக வேண்டும் என்று நினைக்கிறேன்” என்பது போல் எதையும் வளைத்து சுழித்து சொன்னால் மேலானது என்று நினைத்தார்கள். ஒரு புத்தகத்தை சற்று குதர்க்கமாய் பார்க்க முடிந்தால் “கட்டுடைத்ததாய்” கோரினார்கள். இணைய வருகையால் நேரடியாக கிளர்ச்சியாக சுருக்கமாக எழுதும் பாணி பிரபலமாகி உள்ளது. இணைய பாதிப்பை நாம் கடந்த பத்து வருடங்களில் தமிழில் புத்தகப் பதிப்பு அடைந்த அபரித வளர்ச்சி மற்றும் இடைநிலை பத்திரிகைகள் பெற்றுள்ள வெற்றியையும் கணக்கில் கொண்டே புரிய வேண்டும்.
கடந்த பத்தாண்டுகளில் ஜெயமோகன், எஸ்.ரா, சாரு உள்ளிட்ட எழுத்தாளர்கள் புனைகதைக்கு நிகராக பத்திகளும் எழுதினார்கள். வாசகர்களை பெருக்கினார்கள். கவனத்தை தொடர்ந்து தக்க வைத்தார்கள். இது அவர்களின் புத்தக விற்பனையை அதிகப்படுத்தியது. எஸ்.ரா இடைநிலை, ஜனரஞ்சக இதழ்களிலும், சாரு மற்றும் ஜெ.மோ தம் இணையதளங்களிலும்.
சாரு இணைய பத்தி எழுத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். வாசகனுக்கு அணுக்கமாக, தன்னிலையாக, கொஞ்சம் அதிரடியாக, நிறைய சுவாரஸ்யமாக படுக்கையறை ரகசியங்கள், சமையலறை விவகாரங்கள், புலம்பல்கள், புகார்களில் இருந்து துவங்கி லத்தீன் அமர இலக்கியத்தில் சென்று முடிவது சாருவின் பாணி. இன்று ஏராளமான இளம் எழுத்தாளர்கள் இணையத்தில் உருவாகி அங்கிருந்து பத்திரிகைகளுக்கும் வருகிறார்கள். இவர்களிடம் சாருவின் வலுவான பாதிப்பை காண முடிகிறது. “கட்டுடைக்கும்” ஆர்வமின்றி தன்னிலையாக கிளர்ச்சியாக எழுத முயல்கிறார்கள். உடனடியான ஆனால் நிலையற்ற கவனமே நோக்கம்
ஜெ.மோ தன் இணையதளத்தில் வழமையானவற்றை தான் எழுதினாலும் அவரது உரைநடை லகுவாகி நேரடியானதாக மாறி உள்ளது. “உலோகம்” “அனல் காற்று” போன்ற அவரது சமீப நாவல்களும் “சோற்றுக்கடன்” போன்ற சிறுகதைகளும் எளிய லட்சியங்களும் வளவள சித்தரிப்புகளும் மிகையான உணர்ச்சிகளும் கொண்டவை. ஜனரஞ்சக வாசகனை தக்க வைக்கும் பதற்றம் இதற்கு காரணமாக இருக்கலாம்.
கனமான கவித்துவ மொழிக்காக அறியப்பட்ட எஸ்.ரா இன்று எளிமையான சற்று உணர்ச்சிகரமான மொழியையே பயன்படுத்துகிறார். “உபபாண்டவத்தில்” இருந்து “உறுபசியில்” இருந்து “துயிலில்” அவரது மொழி குறிப்பிடும்படியாய் மாறி உள்ளது. உருவக இறுக்கத்தில் இருந்து உலர்வான சொற்களில் இருந்து இன்று அது மாறி இளகிப் போய் உள்ளது. இதற்கு கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்த மேற்சொன்ன மாற்றங்கள் ஒரு காரணம் எனலாம்.
வேறெந்த இந்திய மொழியை விடவும் தமிழில் தான் அதிகபட்சமாக இணையத்தில் இலக்கியம் வாசிக்க கிடைக்கிறது. 10,000 இலக்கிய வாசகர்களில் கணிசமானோர் இணையத்தில் மட்டும் வாசிப்பவர்கள். பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இணையதளம் உள்ளது. பழந்தமிழ் இலக்கியத்தில் இருந்து கடந்த ஐம்பது வருட நவீன இலக்கியம் வரை அநேகமாய் அனைத்து எழுத்தாளர்களின் பல அல்லது ஒரு மாதிரி படைப்பாவது வாசிக்க கிடைக்கிறது. முன்பிருந்த அறியப்படாத எழுத்தாளன் என்ற மர்மவெளி இன்றில்லை. இணையம் நல்கும் சுயபிரசுர வாய்ப்பு எழுத விரும்புபவர்களுக்கு இன்று தரும் சுதந்திரம் அபாரமானது. சுயமேம்பாட்டுக்கும் பரஸ்பர தாக்குதலுக்கு அது மலினப்படுத்தப்பட்டாலும் எதிர்காலம் நம்பிக்கை ஏற்படுத்துவதாகவே உள்ளது.
(2011 டைம்ஸ் தீபாவளி மலரில் வெளியான கட்டுரை)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...