Skip to main content

கோயில் தங்கத்தை பதுக்குவதன் அரசியல்



ரிஸர்வ் வங்கி நாட்டிலுள்ள கோயில்களின் தங்கத்தின் கணக்கை அறிய முயன்று வருகிறதை ஒட்டி கோயில் தங்கத்தை விற்று பணவீக்கத்தை குறைக்கலாமா என்கிற விவாதம் எழுந்துள்ளது. கோயில் பணம் குறித்த ஒரு தெளிவை எட்டுவதற்கு இச்சந்தர்ப்பம் உதவும்.


கோயில் சொத்து என்பது இந்துக்களின் சொத்து, மக்கள் அளித்த பணம் என்கிற ரீதியில் பா.ஜ.கவின் ராஜா போன்றோர் வாதிட்டு வருகிறார்கள். ஆனால் இது உண்மையா என்றால் அல்ல. கோயிலில் உள்ள தங்கம், குறிப்பாய் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் உள்ள பல ஆயிரம் கிலோ தங்க நகைகள் மற்றும் கட்டிகள், அரசர்களால் அளிக்கப்பட்டது. ஒரு காலத்தில் நாட்டின் பொக்கிஷ சேமிப்பாக கோயில் இருந்த போது அங்கு இந்த பணம் சேர்ந்தது. ஆக, ஒருவிதத்தில் கோயிலில் உள்ளது மக்களின், இந்த தேசத்தின் தங்கம் தான். இந்த மக்கள் என்பவர் இந்து, இஸ்லாமியர் என்ற பாகுபாடின்றி முன்னர் இங்கு உழைத்து நாட்டை வளப்படுத்திய அனைத்து இந்தியர்களின் பணமும் தான்.
கிறித்துவ திருச்சபைகளும், இஸ்லாமிய அறக்கட்டளைகளும் சமீபமாய் தோன்றியவை. அவற்றின் சொத்தை நாம் இந்துக் கோயிலின் பூர்வீக தேச சொத்தோடு ஒப்பிடல் ஆகாது. ஆக, ஏன் இந்துக் கோயிலில் மட்டும் கை வைக்கிறீர் என கேட்பது அபத்தமாகும். மேலும் ரோமில் உள்ள கத்தோலிக்க திருச்சபை அளவுக்கு இந்திய கிறித்துவ திருச்சபைகளில் சொத்து குவிந்திருந்தால் நாம் ஒருவேளை அவர்களை நோக்கியும் இக்கேள்வியை கேட்கலாம். ஆனால் இவ்வேளையில் சிறுபான்மையினரை இந்துக்களோடு ஒப்பிடுவது திசைதிருப்பும் உத்தியாகும்.
கோயிலில் சொத்து சேர்வது என்பது முன்னர் இருந்த நிலவுடைமை சூழலில் ஒரு நியாயம் இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய நவ முதலாளித்துவ சூழலில் பணத்தை எந்த வடிவிலும் முடக்கி வைப்பது நாட்டின் பொருளாதாரத்தை சீரழிப்பதாகும். அது ஸ்விஸ் வங்கியில் கறுப்புப்பணம் வைத்திருப்பதற்கு சமம் ஆகும். கோயிலுக்குள் முடங்கிக் கிடக்கும் ஆயிரமாயிரம் கோடி மதிப்பிலான பணம் இங்கு முதலீடிலும் கட்டமைப்பிலும் செலவிடப்பட்டால் நாட்டிற்கு நிச்சயம் நலம் பயக்கும். இப்பணத்தை யாரிடமோ அள்ளிக் கொடுக்க அல்ல, ஒரு பொது நிதியாக மாற்றி கட்டமைப்பு மற்றும் தொழில் உற்பத்திக்காக செலவழிக்கவே நான் வழிமொழிகிறேன். உதாரணமாய் இப்பணம் கொடுத்து இந்தியா முழுக்க பல பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் கட்டி குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்கலாம். அல்லது பாலங்கள், சாலைகள், தொழிற்சாலைகள் அமைக்க பயன்படலாம். மேலும் பல சேவைகளுக்கும் பயன்படுத்துவதுடன் அரசே சில தொழில் அமைப்புகளை நிறுவி நடத்தவும் முயலலாம். அல்லது கோயில் நிர்வாகங்கள் இப்பணத்தை நேரடியாக தொழிலில் முதலீடு செய்து லாபத்தில் ஐம்பது சதவீதத்தை அரசாங்கத்துக்கும் இன்னும் ஒரு பகுதியை மக்கள் சேவைக்கும் தந்து விட்டு ஒரு பகுதியை பராமரிப்புக்கும் சேமிப்புக்குமாய் வைத்துக் கொள்ளலாம். வெறுமனே சாமி சிலைகளை அலங்கரிப்பதற்காக தங்கத்தை முடக்கி வைத்திருப்பது ஒரு பக்திபூர்வ ரசனை மனதுக்கு சரியாக படலாம்; ஆனால் நடைமுறைவாதிகள் இதை ஒரு குற்றமாகவே பார்ப்பர்.
மேலும், அனைத்து மத கோயில்களையும் நோக்கி ஒரு கேள்வியை எழுப்ப வேண்டி உள்ளது. கோயில் என்பது பக்தி நெறியை வளர்ப்பதற்கானது. பக்தி என்பது பொருள் ஈட்டலுக்கும் லௌகீகத்தும் எதிரானது. மத அறக்கட்டளை ஒன்று தங்கத்தை வைத்திருப்பது என்பது ஒரு முரண்பாடான காரியம். இவ்வளவு பணம் வைத்திருக்க கோயில் என்ன வங்கியா? இன்றைய நவீன சமூகத்தில் கோயிலில் அல்ல பொருளாதாரம் மற்றும் தொழில் சம்மந்தப்பட்ட அமைப்புகளிடம் தான் பணம் இருக்க வேண்டும். பராமரிப்புக்கு போக மீதம் எந்தவொரு பணமோ சொத்தோ ஒரு கோயிலுக்கு இருக்க கூடாது.
இறுதியாக, இவ்வாறு கோயில் சொத்தை வெளியே தரக் கூடாது என எதிர்ப்பவர்களில் கணிசமானோர் பிராமணர் உள்ளிட்ட மேல்சாதியினர் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அவர்கள் தேசத்துக்கான பொது நிதியாக கோயில் சொத்தை மாற்றுவதை எதிர்ப்பதன் காரணம் கோயில் பணம் தம் பணம் என நினைப்பதும், அது கீழ் சாதியினரின் முன்னேற்றத்துக்கு பயன்பட்டு விடக் கூடாது என எண்ணுவதும் தான். காக்கா வடையை பாட்டிக்கும் தராது நரிக்கும் கொடுக்காது. தன்னால் தின்ன முடியாவிட்டால் அது சாக்கடையில் போடுமே ஒழிய இன்னொருவருக்கு தராது. கோயில் சொத்து, தங்கம் விவகாரத்திலும் இது தான் நடக்கிற்து.

Comments

Vetri said…
Antha arasargal andapothu ingu irunthavargal ellam Hindhukkale
Unknown said…
1.If there is no Scam then no need of questioning the amount of Gold/Money in Hindu Temple.
2. What surety is there that this Scam politicians will use this Gold for Good Purpose??? without doing Scam in this again????
3.Now days by saying Minority religion they get huge amount/offer of benefits from Govt & foreign countries to Help Minority but in practical they using for Illegal activities only..for eye sake they help to very very little peoples...
4.I am surprise to listen that you saying Minority religions will not have money like Hindu Temple...Getting funded from foreign countries like anything & they have looted more from us & Hindu temple which History says that with lot of proofs..
5.I agree we can use the Non usage Golds/Money from temple for Country Welfare if there is No scam Politicians but afraid we can point honesty politician if there he cant do anything...where our politician sold our Hindu temple Precious statue itself to other country..
6.I have noticed many of them says that only in Hindus the low caste peoples are rudely handled pls in other minority religion they are killing the low caste peoples....

//What surety is there that this Scam politicians will use this Gold for Good Purpose??? without doing Scam in this again??// கிரிதரன் மக்களாட்சியில் நீங்கள் வேறு எப்படி இயங்க முடியும்? யாரை நம்பி உங்கள் வரியை செலுத்துகிறீர்கள்? கோயில் தங்க பயன்பாட்டில் கண்காணிப்பு அமைப்புகளும் நீதித்துறையும் மீடியாவும் முக்கிய பங்கை ஆற்ற முடியும்
//.Now days by saying Minority religion they get huge amount/offer of benefits from Govt & foreign countries to Help Minority but in practical they using for Illegal activities only.// இது தவறான கருத்து.கண்டிக்கிறேன்

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...