முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அந்தியின் பாடல் - கென்னத் பியரிங்




தூங்கு மக்கேட்
பகலை மடித்து வை. அது ஒரு பளீரென்ற ஸ்கார்ப் அல்லவா.
தூக்கிப் போடு அதை.
உன்னை சீட்டு கோபுரம் போல் தனித்தனியாய் கழற்றி வை.
ஒரு உயர்ந்த கட்டிட்த்தில் சாம்பல் நிற எலி ஆகிட நேரம் வந்து விட்டது.
அங்கே செல். செல் இப்போது.
பெரும் ஆணிகளைப் பார். குழாய்களுக்கு பின்னால் ஓடு.
சுவர்களில் குடுகுடுவென ஓடு.
உன்னை அழைக்கிற அப்பெண்ணிடம் ஊர்ந்து போ, அவள் முலைகள் வெதுவெதுப்பானவை.
ஆனால் இங்கே ஒரு பிரேதம். கொலைகாரன் யார்?
உன் துப்பாக்கியால் அவனைக் கொல். அவனைக் கடந்து ஊர்ந்து அப்பெண்ணிடம் போ.

உறங்கு மக்கேட்.
ஒரு கையை படுக்கையில் பக்கவாட்டில் போடு.
கைக்கடிகாரத்தை முடுக்கு.
நீ ஒரு கனவான் அல்லவா, முக்கியமானவனும் கூட.
கொட்டாவி விடு. போ தூங்கு.


சூரியனை நோக்கி மெல்ல திரும்பும் கண்டம் அமைதியாக உள்ளது.
உன் கடிகார முள் நாளைக் காலைக்காக காத்திருக்கிறது.
மேலும் நீ இன்னும் உயிருடன் இருக்கிறாய்.
உன்னைப் புதைப்பதற்கு இன்னும் ரொம்ப காலம் இருக்கிறது.
எப்போதோ, ஆனால் இப்போது அல்ல.
எப்போதோ நிகழும் தான், எப்போதோ, அது உறுதி.

உன் மூளையை உதிரி உதிரியாய் பிரி,
அதில் பசித்த உன் வாய்களை மூடு,
ரொம்ப நாளாய் உணவு ஊட்டப்பட்டாயிற்று.
இப்போது தூங்கு, நீ ஒரு கனவான் அல்லவா. மக்கேட், உயிருடன், மனசமநிலை இழக்காமல்.
சமூகத்தில் உயர்ந்த இடம் கொண்ட ஒரு கனவான்.
சீமாட்டியைப் பார்த்தால் உன் தொப்பியை சரித்து மரியாதை தெரிவி.
மேயரிடம் பேசு.
நீ மேயரின் நெருங்கிய நண்பன் அல்லவா?
உண்மை. மேயரின் நண்பன்.
ரோமானியாவின் அரசியை சந்தித்தாய் அல்லவா. உண்மை.

சரி நீ தூங்கு.
பழைய சூரியனின் கீழ் உறங்கும் நாயாக இரு.
ஆப்பியன் வேயில், பழைய சூரியனின் கீழ் சோம்பிக் கிடக்கும் பூடில் நாயாக இரு.
புல்வெளியில் படுத்தபடி கடந்து செல்லும் ராணுவ வீர்ர்களை வேடிக்கைப் பார்க்கும் நாயாக இரு.
அழைக்கிற பெண்ணின் பின்னால் ஓடு.
வாள் ஏந்திய காவலரைப் பார்த்தால் ஓடித் தப்பு. அது உன் எலும்புகளை நொறுக்கிடும்.
பெரும் அச்சம் கொள்.
ஐந்தாவது அவென்யுவில் உள்ள நடைபாதையில் பழைய சூரியனுக்கு கீழ்
சுருண்டு சோம்பித் தூங்கு.
தூங்கு மக்கேட்.
கொட்டாவி விடு.
தூங்கு.

கருத்துகள்

Raja M இவ்வாறு கூறியுள்ளார்…
அபிலாஷ், நலந்தானே?

நல்ல கவிஞர்களை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப் படுத்துகிறீர்கள்.

இந்தக் கவிதையின் முதல் இரண்டு வரிகள்:
" ... இரவை மடித்து வை. அது ஒரு பளீரென்ற ஸ்கார்ப் அல்லவா"

என்று மொழி பெயர்த்துள்ளீர்கள். இரவு எப்படி பளீரென்ற ஸ்கார்ஃப் ஆகும்? என நெருடலாகப் பட்டது. இரவை மடித்தபின் வருவது பகலல்லவா? மூலத்தைப் பார்த்ததில்:

Sleep, McKade.
Fold up the day. It was a bright scarf.
Put it away.
Take yourself to pieces like a house of cards.

என்று உள்ளதே?


அன்புடன்,
ராஜா
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
அன்புள்ள ராஜா
பிழையை சுட்டிக் காட்டியதற்கு நன்றி. திருத்தி விட்டேன். கவனப் பிழை.
ஆர்.அபிலாஷ்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...