முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரோஹித்தின் 264: ஒரு அற்புத சதம்


இலங்கைக்கு எதிரான ரோஹித் ஷர்மாவின் 264 வெடிமருந்து கிடங்கு வெடித்தது போன்ற ஒரு இன்னிங்ஸ். பந்தை இப்படி இவ்வளவு சரளமாக கூர்மையாக சரியான இடங்களில் தொடர்ந்து யாரும் அடித்து பார்த்ததில்லை. அதுவும் அவர் சதம் அடித்த பின்னரும் தொடர்ந்து கவனமாய் ஆனால் மூர்க்கமாய் ஆடியது கவர்ந்தது. 50 ஓவர்கள் நின்றாடுவது சாதாரண விசயம் அல்ல. மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் வலுவாக இருக்க வேண்டும். அதன் பிறகு ரோஹித் களத்தடுப்பு செய்ய வேறு வருகிறார். பாய்ந்து பந்துகளைத் தடுக்கிறார். தன்னை மிக வலுவாக நிரூபித்திருக்கிறார் ரோஹித்.

ஆரம்ப 50 ஓட்டங்களை அவர் எடுத்த விதம் இன்னும் அதிகமாய் கவர்ந்தது. முன்பெல்லாம் அவர் 30 ஓட்டங்கள் எடுத்ததும் தன்னிச்சையாக சிரமமான ஷாட்களை ஆடப் பார்ப்பார். தன் திருப்திக்காக அடிக்க முயன்று வெளியேறுகிறார். இன்று அப்படி அல்ல. அவருக்கு ஒரு தெளிவான திட்டம் இருந்தது. ஒரு நான்கு அடித்து விட்டு அடுத்த பந்தை தடுத்தாடினார். அடுத்ததை ஒற்றை ஓட்டத்திற்கு விரட்டினார். இந்த நிதானத்தை நான் முன்பு ரோஹித்திடம் பார்த்ததில்லை. இது ஒரு ஆக்ரோசமான தன்னெழுச்சியிலான சதம் அல்ல. கங்குலி உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிராகவும், சயித் அன்வர் இந்தியாவுக்கு எதிராகவும் அடித்தார்களே அது போன்ற திட்டமிட்ட புத்திசாலித்தனமான சதம் இது. புல்டோசர் கொண்டு பகுதி பகுதியாக ஒரு கட்டிடத்தை தகர்ப்பது போல் ஒரு எதிரணியை தகர்க்கிற சதம் இது. இதே போன்று அவர் இனி வரும் எல்லா ஆட்டங்களிலும் நான்குகளும் ஆறுகளும் விளாச வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பல்ல. ஆனால் இதே கட்டுப்பாடு மற்றும் திட்டமிடலுடன் அவர் ஆட வேண்டும் என எதிர்பார்க்கிறேன். பார்ப்போம்.
இந்த சதத்திற்கு இன்னொரு முக்கியத்துவம் உண்டு. விராத் கோலி, தவான் போன்றோர் சதம் அடிக்கையில் மைதானத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் இலக்காக்கி அடிப்பார்கள். குறிப்பாக கோலி ஸ்கொயர் கட் ஆடவே மாட்டார். ஆனால் ரோஹித் இன்று அடிக்காத இடமே இல்லை. அவர் களத்தடுப்பாளர்களுக்கு இடையே சரியாக துல்லியமாக தொடர்ந்து அடித்த விதம் மிகவும் கவர்ந்தது. ஒரு கட்டத்தில் அவர் நல்ல பந்துகளைக் கூட எளிதாக நான்குகளுக்கு தொடர்ந்து அடித்துக் கொண்டிருக்க ஆட்டம் ரொம்ப குழந்தைத்தனமாக பட்டது.
இலங்கை பந்து வீச்சாளர்கள் ஒரு தவறு பண்ணினார்கள். ரோஹித் மற்றும் கோலிக்கு குச்சிக்கு வெளியே, அதாவது கற்பனையான ஐந்தாவது குச்சியில் வைடாக வீசினால் பந்தை சரியாக விரட்ட வராது. சமநிலை இழந்து விடுவார்கள். இந்த பலவீனத்தை இலங்கை சரியாக சோதிக்கவில்லை. அவர்கள் இருவருக்கும் பிடித்த மாதிரி நேராக பந்தை வீசினார்கள். அதற்கு இன்னொரு காரணம் அந்த வைடான லைனில் வீசி அவர்களை சோதிக்கும் தன்னம்பிக்கை இலங்கை வீச்சாளர்களுக்கு இன்று இல்லை என்பது.

வாழ்க்கையில் நான் மிக அதிகமாக வெறுத்த மட்டையாளர் ரோஹித் ஷர்மா. ஆனால் நாம் மிக அதிகமாக வெறுக்கிற ஒருவரை உள்ளூர ரொம்ப நேசிக்கிறோம் என இன்று புரிந்து கொண்டேன்.


எப்படியோ விவரிக்கவே முடியாத ஒரு அபார இரட்டை சதத்தை பார்க்க உதவிய இலங்கை வீரர்களுக்கு நன்றி!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...