முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போகன் சங்கர்


கடந்த ஐந்து வருடங்களில் கவனம் பெற்ற எழுத்தாளர்களில் போகன் சங்கர் ஒரு நட்சத்திரம். பொதுவாக, குழந்தைக்கு சோறூட்டும் அம்மாக்களை போன்றவர்கள் கவிஞர்கள். அப்படியான ஒரு அம்மா என்னிடம் சமீபத்தில் சொன்னார், குழந்தை பெற்ற பெண்கள் குழந்தைக்கு ஊட்டி மீதமாகிற உணவை சாப்பிட்டே குண்டாகி விடுகிறார்கள் என்று. பெரும்பாலான நம் கவிஞர்கள் தம் கவிதைகளையும் சுற்றி உள்ளோர் கவிதைகளையும் படித்து படித்தே மூச்சுத்திணறி விடுகிறார்கள். அவர்கள் நாவல், கட்டுரை, தத்துவம், அரசியல், சமூகவியல், வரலாறு என நகர மாட்டார்கள் (விதிவிலக்குகள் உண்டு). போகன் அப்படி அல்ல. அவரது பரவலான தீவிரமான வாசிப்பு வியப்பூட்டுவது. மன அழுத்தம் பற்றின Noonday Demon எனும் தடிமனான நூலை வாசிக்க தொடங்கினேன். எதேச்சையாய் ஒரு நூலகத்தில் கண்டெடுத்த நூல் அது. மிக முக்கியமான அடர்த்தியான பதிவு. தன்வரலாறும் உளவியலும் கோட்பாடுகளுமாய் மன அழுத்தத்தை ஆராயும் ஒரு சாதனை நூல். ஒரு நாள் எதேச்சையாய் போகன் அந்நூலைப் பற்றி முகநூலில் போகிற போக்கில் குறிப்பிட்ட போது ஆச்சரியமானேன். ஆனால் வாசிப்பதை அப்படி முழுங்கி எழுத்தில் மேற்கோள்களாய் துப்ப மாட்டார். சுருக்கி தன் கட்டுரையாக எழுத மாட்டார். அதை ஜீரணித்து தன் கருத்தாக்கி புது பார்வையில் அளிப்பார். போகனின் கவிதைகளில் காணும் ஆழ அகலத்துக்கு இந்த வாசிப்பும் தீராத் தேடலும் ஒரு காரணம்.
முகநூலில் ஒரு விளையாட்டுத்தனமான முகமூடி அணிந்து பகடி பண்ணித் திரிவார். முகநூலில் பல நல்ல கவிதைகளையும், பல அரைகுறை கவிதைகளையும் சமமாக எழுதியிருக்கிறார். எழுதுகிற அனைத்தையும் பிரசுரித்து விடுவார். அவரது கவிதை மனம் அடையும் ஏற்ற இறக்கங்களை முகநூலில் அவரை தொடர்ந்தாலே பட்டவர்த்தமாகி விடும். எந்த மறைவுகளும் அற்ற இன்றைய காலத்துக்கான டிப்பிக்கல் கவிஞர்.
போகனின் மொழியின் அழகு யார் கண்ணிலும் படாத அவரது அற்புதமான உவமைகள். ஒரு கதையில் குழந்தையின் உதட்டைப் பற்றி சொல்லும் போது குளிர்ந்த ஆரஞ்சு சுளை போல என்பார். இப்படி பல எதிர்பாராமல் முதுகைத் தொட்டழைக்கும் உவமைகள் அவரிடம் உண்டு. அவரது impressionable ஆன மனம் எலிகளை பிடிப்பதற்கான பசை அட்டை போல என நினைக்கிறேன். அதில் கோடிக்கணக்கான காட்சிகள் ஒட்டிக் கிடந்து கைகால்களை போட்டடிக்கின்றன. அவை அவர் மொழி வழி இறங்கி வெளியே ஓடுகின்றன. நான் அடிக்கடி படித்து பொறாமைப்படுகிற மொழி போகனுடையது. அந்த மொழி, நாம் நம் அன்றாட வாழ்வில் அனுபவிக்கும் பலவித நெருக்கடிகளின் உளவியல், அறம் போன்ற அவரது தீவிரமான பேசுபொருட்கள், பகடி ஆகியவை தான் இத்தனை பேரை அவரது எழுத்து நோக்கி கடந்த சில வருடங்களில் இழுத்து வந்துள்ளது.
போகனை ஒருமுறை சென்னையில் இரு கூட்டங்களில் சந்தித்திருக்கிறேன். காப்காவின் விசாரணை நாவலில் வரும் நாயகன் போலவே நடந்து கொள்வார். ரொம்ப சிரித்து பேசினால் கைது பண்ணி விடுவார்களோ எனும் பாவனை. கசப்பான ஒரு நகைச்சுவை பேச்சில் தொனிக்கும். முகத்தை இறுக்கமாய் வைத்துக் கொண்டு சுண்டு விரலால் கண்ணாடியை அடிக்கடி மூக்கின் மேல் அட்ஜஸ்ட் செய்யும் மேனரிசம். குறிப்பாக மனதிற்குள் எதையோ நோண்டியெடுத்து வெளியே சொல்லும் போது அப்படி செய்வாராக இருக்கலாம். பார்த்தவுடன் ஒட்டிக் கொள்கிற மனிதராக தெரியவில்லை. ஒரு சின்ன நுண்ணோக்கியுடன் தனக்குள் ஓடும் கடிகாரத்தை ஆய்வு செய்து நகர்கிற அகவயமான மனிதர்.
ஆனால் அவருக்குத் தான் எத்தனை எத்தனை ரசிகைகள். இரண்டாம் முறையாக அவரை உயிர்மை கூட்டத்தில் சந்தித்த போது “உங்களுக்கு எப்படி இவ்வளவு பெண் விசிறிகள் அமைகிறார்கள்?” என்றேன். “எனக்கே தெரியலீங்க” என்றார். அவரது உணர்ச்சி கொப்புளிக்கும் மொழி, அதன் எளிமை, நாடகீயம், மென்மை, தொட்டாற் சிணுங்கும் குழந்தை போன்ற தொனி ஆகியவை காரணமாய் இருக்கலாம் என என் மூளை சொன்னது. அதே மேடையில் இருந்த மனுஷ்யபுத்திரனிடம் முன்பு பலமுறை இக்கேள்வியை கேட்டிருக்கிறேன். “அதுக்கு நீங்க கவிதை எழுதணுங்க” என்பார். கவிஞர்கள் பேரழகர்களாக இருக்க வேண்டியதில்லை. கவிமொழியில் ஒரு மேஜிக் இருந்தால் போதும்!


இந்த பீடிகை எல்லாம் இன்று பிறந்த நாள் காணும் போகன் சங்கருக்கு வாழ்த்து சொல்லத் தான். தமிழ்க் கவிதையில் ஒரு அற்புத நிகழ்வு நீங்கள் நண்பா! தொடர்ந்து பயணியுங்கள்.

கருத்துகள்

Kumky இவ்வாறு கூறியுள்ளார்…
எல்லா பக்கங்களையும் தொட்டு போகனை முப்பரிமானகோணங்களில் காண்பித்திருக்கிறீர்கள் அபிலாஷ். வெகு நுட்பமான அவரின் நகைச்சுவையுணர்வினையும் பதிவில் சுட்டியிருக்கலாம்..
rajasundararajan இவ்வாறு கூறியுள்ளார்…
போகன் பல்லாண்டு வாழ வாழ்த்துகள்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.