முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழில் மெட்டாசினிமா?


”ஜிகிர்தண்டாவை” எல்லாம் மெட்டாசினிமா என்கிறார்கள். ஏதோ மெட்டாசினிமாவை நாம் புதிதாய் கண்டுபிடிக்க வேண்டி இருந்தது போல. பல வருடங்களாய் நம் மசாலா சினிமாவில் மெட்டா சினிமா மிக வலுவாய் இருந்து கொண்டு தான் இருந்தது. மெட்டா சினிமா, பின் நவீனத்துவம் எல்லாம் அறியாமல் இதை மக்கள் ரசித்து கைதட்டிக் கொண்டும் தான் இருந்தார்கள். ஆனால் இந்த உண்மையை நான் சற்று தாமதமாய் ஒரு நண்பருடன் ராயப்பேட்டையில் ஒரு ரோட்டோரக்கடையில் தந்தூரி சிக்கனை எச்சில் வழிய கடித்துக் கொண்டிருந்த போது தான் உணர்ந்தேன்.

 ஒரு நண்பர் டி.வி சீரியல்களில் நடிப்பவர். இன்னொருவர் நாடக இயக்குநர். நான் நடிகரிடம் கமல் பற்றின உங்கள் கருத்து என்ன எனக் கேட்க அது பற்றி ஒரு விவாதம் ஓடிக் கொண்டிருந்தது. அப்போது இயக்குநர் நண்பர் “தசாவதாரம்” பற்றி ஒரு கருத்து சொன்னார். அப்படத்தில் கமல் பத்து வேடங்களில் பத்து பாத்திரங்களாய் வருகிறார். ஆனால் பத்து பாத்திரங்களும் கமலை ஒத்த தோற்றம் கொண்டவர்கள் என கதையில் எந்த குறிப்பும் இல்லை. அதாவது “மைக்கேல் மதன காமராஜன்” போல பத்து பேரும் “இரட்டைப்பிறவிகள்” அல்ல. அதனால் மிச்ச ஒன்பது பாத்திரங்களை கமலே நடித்தாக வேண்டிய அவசியம் இல்லை. கமல் தன்னை சிவாஜியை விட மேல் என நிரூபிப்பதற்காகவே அவ்வாறு நடித்தார் என நண்பர் கூறினார். இது சரியான பார்வை தான் என முதலில் பட்டது. ஆனால் ஒரு சின்ன சிக்கல். அவர் சொல்வது போல, மிச்ச பாத்திரங்களில் வேறு ஆட்கள் நடித்திருந்தால் கதையில் குழப்பம் ஏற்படுவதையும் தவிர்க்க இயலாது.

எப்படி என சொல்கிறேன். சம்மந்தமில்லாத வெவ்வேறு ஆட்கள் விஞ்ஞானி கமலின் வாழ்க்கையில் தலையிட்டு எதேச்சையாய் வைரஸ் மக்களை பாதிக்காமல் காப்பாற்றுவது தானே கதை. ஒன்பது பேரும் விஞ்ஞானிக் கமலுக்கு சம்மந்தமில்லாதவர்கள் என்றால அதில் கதையே இல்லாமல் போய் விடும். அதாவது எனது வாழ்விலும் உங்கள் வாழ்விலும் கூட யாரென்றே தெரியாதவர்களின் கண்ணுக்கு தெரியாத தாக்கங்கள் இருக்கும். ஆனால் அவர்கள் ஏதோ ஒரு வகையில் உணர்வுரீதியாய் என்னோடு சம்மந்தபடாத பட்சத்தில் அதை ஒரு கதையாகவோ அல்லது தர்க்கரீதியிலான அன்றாட நிகழ்ச்சிகளின் தொகுப்பாகவோ கூட என்னால் ஏற்க இயலாது. ஏதோ ஒரு வகையில் என் உணர்வுகள் அதில் சம்மந்தப்பட்டால் ஒழிய அதில் ஒரு சுவாரஸ்யம் இராது. நினைவில் நில்லாது. இதெல்லாம் கதையின் தர்க்கம், அதன் தேவை. ஆனால் இப்படத்தில் எங்கும் மிச்ச ஒன்பது பேரும் கமலை தோற்றத்தில் ஒத்தவர்கள் எனும் நேரடியான குறிப்போ ஒப்பிடலோ வராது. இங்கு தான் இப்படம் மெட்டாசினிமா ஆகிறது.

மெட்டாபிக்‌ஷன் கதையில் வாசகனை இது நிஜமென மயங்க விடாமல், இது கதை தான் என எழுத்தாளர் உணர்த்தியபடி இருப்பார். மெட்டாசினிமாவிலும் இது சினிமா தான் என உணர்த்திக் கொண்டிருப்பார் இயக்குநர். அப்போதும் நாம் இந்த குறுக்கீட்டையும் ஒரு கதையாக ஏற்று ரசித்துக் கொண்டிருப்போம் என்பது தான் மெட்டா படைப்புகளின் மேஜிக். “தசாவதாரத்தில்” பத்து கமல்களுக்கும் கதையில் எந்த சம்மந்தமும் இல்லாவிட்டாலும், தோற்றத்தில் அவர்கள் ஒத்தவர்கள் என் கதையின் லாஜிக் சொல்லாவிட்டாலும், பார்வையாளர்கள் பத்து பேரையும் கமலின் பத்து வேடங்களாகத் தான் பார்த்தார்கள். கமல் ஜார்ஜ் புஷ் ஆக வரும் போது அதை புஷ்ஷாக பார்க்காமல் “பார் கமல் எப்படி புஷ் போலவே இருக்கிறார்?” என்றார்கள், இதன் உச்சம் கலைஞர் மற்றும் ஜெயா படத்தின் இறுதியில் வருவதும், ”உலக நாயகனே” கமல் துதி பாடலும்.
தன்னுடைய “உத்தம வில்லனில்” கமல் பிரயத்தனப்பட்டு மெட்டாசினிமா பண்ண முயன்றிருப்பார். பதத்வாஜ் ரங்கனும் தன் ஆங்கிலக் கட்டுரையில் அதை மெட்டாசினிமா எனக் காட்ட ரெண்டு கால்களிலே எட்டு எல்லாம் போட முயன்றிருப்பார். ஆனால் அதற்கெல்லாம் அவசியமில்லை. கமல் தனக்கே தெரியாமல் பல படங்களில் மெட்டா அம்சங்களை கொண்டு வந்திருக்கிறார். பாமர மக்களும் ரசித்திருக்கிறார்கள்.

சமீபத்தில் டி.வியில் “காஞ்சனா” ஓடியது. என் மனைவி படம் பற்றி ஒரு சந்தேகம் எழுப்பினாள். “அதெப்படி கோவை சரளா கோவைத் தமிழ் பேசுகிறார். அவர் மகன் ஸ்ரீமன் மதுரைத்தமிழ் பேசுகிறார். ஸ்ரீமனின் மனைவி தேவதர்ஷினி தனியாய் பிராமணத் தமிழ் பேசுகிறார். அவரது தங்கை லஷ்மி ராய் பெசண்ட் நகர் தமிழ் பேசுகிறார். லாரன்ஸ் ஒரு பக்கம் புறநகர் சென்னைத் தமிழ் பேசுகிறார். அதெப்படி ஒரு குடும்பத்துக்குள் இவ்வளவு வட்டார வழக்குகள் சாத்தியம்?”. ஆனால் இதையெல்லாம் யோசிக்காமலா அந்த இயக்குநரும் தயாரிப்பாளரும் படத்தில் இவ்வளவு தமிழ்களை அனுமதித்திருப்பார்கள்? உண்மையில் இதில் எந்த லாஜிக் மீறலும் இல்லை. கதையில் லாஜிக் உதைக்கலாம். ஆனால் திரையரங்கில் ஒரு கதை எதார்த்தமாய் அதன் உள்ளார்ந்த லாஜிக்குடன் புரிந்து கொள்ளப்படுவதில்லை. பார்வையாளர்களின் கணக்கும் வேறு. கோவை சரளா அங்கு லாரன்ஸின் அம்மாவாக அல்ல, கோவை சரளாவாகத் தான் தோன்றுகிறார். அவரை அப்படித் தான் மக்கள் நகைச்சுவை காட்சிகளில் ரசிக்கிறார்கள். அப்போது அது மெட்டாசினிமா ஆகிறது. அடுத்து சீரியஸ் காட்சிகளில் அவர் லாரன்ஸின் அம்மாவாகி விடுவார். அப்போது சாதாரண எதார்த்த சினிமா. இது போல் தான் ஒவ்வொரு பாத்திரமும் அவ்வப்போது நடிகர்களாகவே திரையில் தோன்றுவார்கள். ”ஜிகிர்தண்டாவெல்லாம்” இதன் பக்கத்தில் நிற்க முடியாது.

இப்படி நம் மசாலா சினிமாவில் பல மெட்டாசினிமாக்களை காணலாம். யாராவது தீவிரமாய் ஆராய வேண்டும்.


பி.கு: இதை சீரியசாய் படித்து விட்டு கேள்வி கேட்பவர்களை அந்த கமல் தான் காப்பாற்ற வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...