முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரெய்னா, ஜடேஜா மற்றும் பிராவோ மீதான குற்றச்சாட்டு


அண்மையில் லலித் மோடி மீதான சர்ச்சை தீய்ந்த எண்ணெய் சட்டி போல் புகைந்து கொண்டிருந்த போது அவர் பிறர் மீது ஒவ்வொரு பிடி மண்ணாய் தூவும் விதம் சில ஆவணங்களை, புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். அதில் ஒன்று மூன்று சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் – ரெய்னா, ஜடேஜா மற்றும் பிராவோ – ஒரு சூதாட்டம் நடத்துபவரோடு நட்பு கொண்டிருந்ததாகவும், அவர் இவர்களுக்கு பல கோடி பணம் மற்றும் மும்பை, தில்லியின் பிரதான பகுதிகளில் வீடு வாங்கித் தந்திருப்பதாகவும் லலித் மோடி ஐ.சி.சியின் சூதாட்ட விசாரணைப் பிரிவுக்கு எழுதிய மின்னஞ்சலின் பிரதி. இதை அவர் முதலில் எழுதியது 2013இல். அப்போது ஐ.சி.சி இந்த மின்னஞ்சலை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அனுப்பியது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும் சென்னை சூப்பர் கிங்ஸின் முதலாளியுமான ஸ்ரீனிவாசன் இம்மின்னஞ்சலை குப்பைக்கூடைக்கு அனுப்பி இருக்கக் கூடும். ஏனென்றால் இது பற்றி இரு தரப்புமே விசாரணை பண்ணவோ தகவலை வெளியே விடவோ இல்லை.

 தற்போது இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராய் உள்ள தாகுர் ஸ்ரீனிவாசனின் எதிர்தரப்பு. அவர் சென்னை அணி வீரர்களை பாதுகாக்க அவசியம் இல்லை. அதனால் அவர் நியாயமான நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அவர் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு விசாரணைக்குழு அமைத்து காவல்துறை உதவியுடன் விசாரிப்பது தான். உண்மை வெளிப்பட்டால் அது வாரியம், ரசிகர்கள் அல்லது வீரர்கள் என ஏதோ ஒரு தரப்புக்கு ஆசுவாசம் ஆகுமே!
ஆனால் இப்போதைய வாரியத்தின் தலைவரும் இக்குற்றச்சாட்டை சோற்றுக்குள் மூடி மறைக்கவே எத்தனிக்கிறார். இது குறித்து எந்த விசாரணையும் தேவையில்லை என்றவர் அதற்கு சொல்லியுள்ள காரணம் விநோதமானது. “இவர்கள் மூவரும் சர்வதேச வீரர்கள். அதனால் இவர்களை விசாரிக்க வேண்டியது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பணி. இந்திய கிரிக்கெட் வாரியம் ஒன்றும் செய்வதற்கில்லை.” சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களாக இருக்கும் போது மூவரும் செய்ததாய் சொல்லப்படும் குற்றத்திற்கு எப்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரணை செய்ய முடியும்? ஐ.பி.எல் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆட்டத்தொடர் அல்லவா? என்ன ஒரு அபத்தமான விளக்கம்!


தாகுரின் நிலைப்பாட்டை இப்படி புரிந்து கொள்கிறேன். இம்மூன்று வீரர்களுக்கும் எதிராய் விசாரணை செய்வது மீடியாவில் பரபரப்பை உருவாக்கும். ஒருவிதத்தில் குற்றத்தின் தீவிரத்தை வாரியம் ஏற்பதாய் ஆகி விடும். இந்திய அணிக்கும் ஒருவித ஸ்திரமற்ற உணர்வு வரும். இந்திய அணி மற்றும் ஐ.பி.எல்லின் பிம்பம் அடிபடும். இதைத் தவிர்க்க சிறந்த வழி இதை காணாதது போல் விட்டு விடுவது என்பது தாகுரின் முடிவு. ஆனால் சட்டையில் கறை படிந்தால் அதை மறைப்பது அல்ல கழுவி சுத்தம் செய்வது தான் சிறந்த தீர்வு. ஏற்கனவே மக்களுக்கு ஐ.பி.எல் மீதுள்ள நம்பிக்கை புரையோடி விட்டது. போன ஐ.பி.எல்லின் ஒவ்வொரு ஆட்டமும் பிக்ஸ் செய்யப்பட்டது என என்னிடமே நிறைய பேர் கூறினார்கள். ஆனாலும் மக்கள் ஐ.பி.எல் பார்க்கிறார்கள். அவநம்பிக்கையை தாண்டியும் ஐ.பி.எல் ரசிக்கப்படும் எனும் அற்ப நம்பிக்கையை கொண்டு தான் தாகுர் போன்றவர்கள் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கிறார்கள். மேலும் இந்த ஊழலில் ஐ.பி.எல் அணி அதிபர்கள், வாரிய உறுப்பினர்கள் என பலரும் சம்மந்தப்பட்டிருப்பதால் ஒருவரது முகமூடியை கிழித்தால் பலரும் கதறியடித்து வெளியே வரக் கூடும். முழுநிர்வாணமான ஒருவர் உடம்பில் உள்ள ஒரே கோவணத்தை உருவி முகத்தை மறைப்பது போன்ற செயல் இது. இந்திய கிரிக்கெட் வாரியம் தற்சமயம் தன் முகத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் தான். அதற்காக?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...