முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜெயலலிதாவின் உடல்நிலை


ஜெயலலிதாவுக்கு கல்லீரல் கோளாறு, சிகிச்சைக்காய் வெளிநாடு செல்கிறார் என படித்தேன். கடுமையான முட்டி வலி ஏற்படுகிறது என போட்டிருந்தார்கள். சற்று மோசமான நிலையில் தான் அத்தகைய அறிகுறி தோன்றும் என நினைக்கிறேன். ஆனால் இதனால் உடனடி அரசியல் மாற்றங்கள் வரும் என நான் நினைக்கவில்லை. இப்போது மருத்துவம் வெகுவாக முன்னேறி விட்டது. மோசமான உடல் நிலை என்றாலும் கூட செலவு செய்து மீண்டு வந்து விடுவார்கள். 2006இல் நான் மாலைமலரில் வேலை செய்த போது ஒரு மூத்த சப் எடிட்டர் கடுமையான திமுக எதிர்ப்பாளர். அப்போது கலைஞரின் உடல் நிலை மோசமாய் இருந்தது. தேர்தல் நெருங்கி வந்தது. அதற்கு முன்பா பின்பா கலைஞர் காலமெய்துவார் என தினமும் அலுவலகத்தில் விவாதம் நடக்கும். திமுக ஆட்சியில் அப்படி நடந்தால் தடபுடலாய் அவருக்கு கடற்கரையில் சிலையெல்லாம் வைப்பார்கள் என்பதால் அதற்கு முன்னரே சம்பவம் நடக்க வேண்டும் என அவர் ஆவெசமாய் சொல்லுவார். ஒன்பது வருடங்கள் கடந்து விட்டன. அதிகாரபூர்வமாய் தாத்தாவாகி விட்ட தன் மகனையே கண்ணில் விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார் கலைஞர். மேடையில் நா குழறினாலும் நக்கலும் கூர்மையும் போகவில்லை. இன்னும் நான்கு வருடங்கள் எப்படியாவது ஆட்சி செய்து விடுவார் என நினைக்கிறேன். நம் உடம்புக்குள் ஒரு கடிகாரம் ஓடுகிறது. அதை யாராலும் பார்க்க முடியாது. அதனால் ஒருவரது ஆயுள் பற்றி ஊகிப்பது பல சமயம் நம்மையே முட்டாளாக்கக் கூடியது.



இந்த ஆட்சியில் ஜெயலலிதா பெரும்பாலும் ஆட்சி செய்யவில்லை. ஓய்வு, சிகிச்சை, வழக்கு, சிறை என பரபரப்பாய் இருந்தார். ஆனாலும் தமிழகம் ஆட்டொமெட்டிக் எந்திரம் போல் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. முக்கியமான திட்டங்கள் பற்றின முடிவுகள் தள்ளிப் போடப்படுகின்றன; நிர்வாகம் ஸ்தம்பித்து விட்டது என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால் அன்றாட வாழ்வில் எந்த சலனமும் இல்லை. முன்பு எம்.ஜி.ஆர் இரண்டு வருடங்கள் நோய் முற்றி செயலற்று இருந்த நிலையிலும் முதலமைச்சராய் இருந்தார் எனப் படித்தேன். இதையெல்லாம் நாம் தான் அனுமதிக்கிறோம். இந்திய வாக்காளர்கள் செண்டிமெண்ட் பார்க்கிறவர்கள். முதுமையை மதிக்கிறவர்கள். அவர்களுக்கு ஆரோக்கியமான துடிப்பான நிர்வாகியை விட முதிர்ச்சியான நிதானமான ஆட்சியாளர் வேண்டும். அதனால் முழுமையாக குணமடையாத நிலையிலும் மீண்டும் அடுத்த தேர்தலில் ஜெயலலிதாவே தேர்ந்தெடுக்கப்படலாம். அதற்கு அடுத்தாற் போல் கலைஞர் சக்கர நாற்காலியில் இருந்தபடியே ஆட்சி செய்யலாம். இதெல்லாம் நம்மூருக்கு சகஜம் தான்ஜெயலலிதா தன் உடல்நிலையை ரகசியமாய் வைத்திருப்பது நாட்டுக்கு நல்லதல்ல, அவர் ஓய்வெடுத்துக் கொள்ளட்டும் என கலைஞர் சமீபமாய் மேடையில் பேசினது கூட வெறும் நக்கல் தான், வம்புக்கு இழுக்கும் அவரது விளையாட்டு தான். உடல்நிலைக்கும் தமிழக முதலமைச்சராய் இருப்பதற்கும் பெரிய சம்மந்தம் இல்லை என அவர் நன்றாய் அறிவார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...