முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கேப்டன் குழப்பம்?


-    (ஜூன் இறுதி வார கல்கியில் வெளிவந்த கட்டுரை)

இந்திய கிரிக்கெட் வாரியம் குழப்படிகளுக்கு பெயர் போனது. சூதாட்ட ஊழலில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் வீரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்தன. இந்தியாவில் பல வருடங்கள் வழக்கு நடந்து பின் தண்டிக்கப்பட்ட அசருதீன் போன்றவர்கள் குற்றவாளிகள் அல்ல என நீதிமன்ற தீர்ப்பு வந்தது. அதே போல வேறெங்கும் இல்லாத அளவு நம்மூரில் தான் கிரிக்கெட் நிர்வாகிகளே சூதாட்ட குற்றச்சாட்டில் அதிகம் மாட்டுகிறார்கள். அப்படி குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீனிவாசனை கிரிக்கெட் அணியின் தலைவர் தோனியில் ஆரம்பித்து பல வாரிய நிர்வாகிகள் ஆதரிக்க, உச்சநீதிமன்றம் தலையிட்டு அவரை நீக்க வேண்டி வந்தது.

 2015 உலகக்கோப்பைக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது தோனி டெஸ்ட் அணியில் இருந்து தீடீரென ஓய்வுற்று பாதியில் ஆடுவதை நிறுத்தினார். அதற்கு காரணம் அவரது விருப்பத்துக்கு எதிராக பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு பயிற்சியாளர்களை நீக்கி, ரவி சாஸ்திரியை அணி இயக்குநராக வாரியம் நியமித்தது தான். ஒரு பக்கம் தோனியின் காட்பாதரான ஸ்ரீனிவாசன் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியை இழந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் மீதான ஊழல் குற்றச்சாட்டில் தோனியும் லேசாய் சிக்கி இருந்தார். இன்னொரு பக்கம் அணிக்குள் கோலி-சாஸ்திரி அணி வலுவாகிட தோனி திக்குமுக்காடிப் போனார். இந்த கட்டத்தில் தேர்வாளர்கள் தோனியிடம் அவர் உலகக்கோப்பை முடிந்ததும் ஒருநாள் அணியில் இருந்தும் ஓய்வு பெற வேண்டும் என்று தீர்மானமாக கூறியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அம்முடிவை தள்ளிப்போட்டபடியே வருகின்றனர். இந்தியா உலகக்கோப்பையில் சிறப்பாக ஆடி அரையிறுதி வரை வந்து தோற்றது. ஆனால் அதற்கு பின் அடுத்த உலகக்கோப்பை வரை இந்தியாவுக்கு தோனி தலைமை தாங்குவாரா என்பது தெளிவில்லை.
இந்த குழப்பங்கள் காரணமாய் சமீபமாய் நடந்து முடிந்த வங்கதேச ஒருநாள் தொடரை இந்திய அணி கேவலமாய் ஆடி இழந்தது. இதற்கு அணியின் ஒற்றுமையின்மையே காரணம் எனக் கூறப்பட்டது. கோலி ஒரு பக்கம் தோனிக்கு எதிராய் பூடகமான குற்றச்சாட்டுகளை மீடியாவில் வைத்தார். தோனியின் முன்னாள் பயிற்சியாளர் இந்திய அணிக்குள் தோனிக்கு எதிராய் குழு அரசியல் நடக்கிறது என்றார். தோனியும் அணித்தோல்விக்கு பொறுப்பேற்று தான் பதவி விலகத் தயார் என்றார். ஒரு பழைய படத்தில் என்.எஸ் கிருஷ்ணனின் வீட்டுக்கு யாரோ ஒரு குழந்தை வந்து அவரை அப்பா என்று அழைக்கும். அவர் குழம்பிக் கொண்டிருக்கையில் நிஜ அப்பா வந்து விடுவார். இருவரையும் மாறி மாறி பார்க்கும் குழந்தை சொல்லும்: “ஹை எனக்கு ரெண்டு அப்பா”. இப்போது இந்திய அணி வீரர்களும் இவ்வாறே தமக்கு யார் தான் தலைவர் எனத் தெரியாமல் குழம்புகிறார்கள். கோலியை ஆதரித்தால் டெஸ்ட் அணியில் இடம்பெறலாம். தோனி இன்னும் ஒன்றோ ரெண்டு வருடங்களோ ஒருநாள் அணியின் தலைவராய் இருப்பார் என்பதால் அவரை ஆதரித்தால் அக்காலம் வரை அணியில் இடம் உறுதி. அதனால் அவர்கள் இருவரையும் ஆதரிக்கிறார்கள். இரு குழுவிலும் இருக்கிறார்கள். ஒரு பேட்டியில் ரஹானே கோலியின் தலைமையை மிகவும் புகழ்ந்து பேசி விட்டு கூடுதலாய் “தோனியும் நல்ல கேப்டன் தான்” என்கிறார். அஷ்வின் ஒரு பேட்டியில் “நான் தோனிக்காக உயிரையும் கொடுப்பேன்” என்று விட்டு, “கோலிக்காகவும் தான் கொடுப்பேன்” என்கிறார். இப்படி இப்போது இந்திய அணி வீரர்களுக்கு ரெண்டு அப்பா.
அடுத்து நடைபெற இருக்கிற ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தின் போது ஒரு புது அணி தோனியின் தலைமையில் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கமான குழப்படிகளின் நீட்சியாக இப்போது ரஹானே தலைவராய் அறிவிக்கப்பட்டிருக்கிறார். ரஹானேவுக்கு ஒருநாள் ஆட்டத்தில் சரியாய் மட்டையாட வருவதில்லை எனக் கூறி தோனி அவரை அணியில் இருந்து சமீபமாய் நீக்கி இருந்தார். அந்த சந்தர்பத்தில் ரஹானே தலைவராக்கப்பட மீடியா தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பட்டேலிடம் தொனி அவரது மட்டையாட்டத்தை பொதுவில் விமர்சித்ததை வைத்து கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளிக்க மறுத்த அவர் ”ரஹானேவுக்கு எங்கள் முழு ஆதரவும் உண்டு” என்று பொதுவாக கூறினார். ஆனால் என்னதான் அவர் இத்தொடரில் சிறப்பாய் ஆடினாலும் ஆறு மாதங்களுக்கு பிறகு நடக்கப்போகும் ஒருநாள் தொடரில் தோனியின் தலைமையிலான இந்திய அணியில் ரஹானே இடம் பெறுவது சிரமம் தான். அணியில் இடம் ஸ்திரமில்லாதவர் எப்படி அணித்தலைவராக உறுதியுடன் செயல்பட முடியும்?
வேறு சில அடிப்படையான கேள்விகளும் எழுகின்றன:
1)   தோனிக்கு அடுத்த ஆறு மாதங்கள் ஓய்வுள்ள சந்தர்பத்தில் அவர் இத்தொடரில் பங்கேற்றிருக்கலாமே. அவர் ஏன் ஆடவில்லை?
2)   தோனியும் கோலியும் ஓய்வு கொள்ளூம் பட்சத்தில் ரோஹித் ஷர்மாவை தலைவர் ஆக்கியிருக்கலாமே? அவர் கோலிக்கு போட்டியாக வந்து விடக்கூடாதே என்கிற பதற்றமா?
3)   ஏன் இந்திய அணிக்கு இன்னும் பயிற்சியாளர் நியமிக்கப்படவில்லை? ரவி சாஸ்திரியை பயிற்சியாளராக்குவதற்கு தோனி எதிர்ப்பு தெரிவிக்கிறாரா?
4)   ஜிம்பாப்வேவுக்கு செல்லும் இந்திய அணியில் அனுபவம் குறைந்த வீரர்கள் அதிகம் என்பதால் ஒரு பயிற்சியாளர் அவசியம் எனும் போது, ஏன் பயிற்சியாளர் இல்லாமல் அணி செல்கிறது?

5)   தேர்வு செய்யப்பட்டுள்ள மாற்று அணியின் சராசரி வயது 30. இவ்வீரர்கள் அடுத்த உலகக்கோப்பையின் போது 34 வயதை எட்டி விடுவார்கள். 35 வயதான ஹர்பஜனும் அணியில் இருக்கிறார். இந்த வயதான விரர்கள் தான் இந்தியாவின் எதிர்காலமா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.