முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரு ஐ.பி.எல் அணிகள் மீதான தடையும் அரசியலும்

-    Image result for chennai super kings



ஐ.பி.எல் சூதாட்டம் சம்மந்தமாக விசாரிக்க உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட லோதா கமிஷன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸின் குற்றத்தை உறுதி செய்து இரு அணிகளையும் இரு வருடங்களுக்கு தடை செய்துள்ளது. சூப்பர் கிங்ஸின் உரிமையாளரான ஸ்ரீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸின் உரிமையாளர் ராஜ் குந்தெரா இருவரையும் ஐ.பி.எல்லில் இருந்து நிரந்தரமாய் தடை செய்துள்ளது. இத்தண்டனையை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்று நிறைவேற்றுமா?


ஸ்ரீனிவாசன் அணித்தலைவராய் இருந்த போது இத்தகைய தீர்ப்பு வந்திருந்தால் நிச்சயம் அது குப்பைக்கூடைக்கு சென்றிருக்கும். வாரியம் எதிர்த்து முறையீடு செய்திருக்கும். ஆனால் இப்போது ஸ்ரீனிவாசனின் எதிர்முகாம் வாரியத்தை தலைமை தாங்குவதால் சென்னை அணி முடக்கப்பட வாய்ப்பு அதிகம். ராஜஸ்தான் அணி சென்னையுடன் ஒப்பிடுகையில் எளிய முதலீடு கொண்ட இடைநிலை அணி. அவ்வணிக்கு என்று நிரந்தரமான வீரர்களோ தனி முகமோ இல்லை. எளிதில் அந்த அணியை கலைத்து விட்டு வேறொரு புது அணியை அவ்விடத்தில் உருவாக்க இயலும். ஆனால் சென்னை ஐ.பி.எல்லின் உச்ச நட்சத்திர அணி. இந்தியாவில் மிக அதிகமாய் ரசிகர்கள் கொண்ட அணி. அதனால் சென்னையை கலைப்பது மிக சிக்கலானது. சென்னை இன்றி ஒரு ஐ.பி.எல் நடத்துவது மணப்பெண்ணை முழுக்க அலங்கரித்து தலையை மட்டும் மொட்டையடிப்பது போல் இருக்கும்.
ஒருவேளை சென்னை அணி தடை செய்யப்படுமானால் தோனியின் எதிர்காலம் என்னவாகும்? 34 வயதான அவர் இன்னும் இரண்டோ மூன்றோ வருடங்கள் தொடர்ந்து ஆடலாம். அதனால் இந்த இருவருடத் தடை நிலுவையில் வருமானால் தோனி மற்றொரு ஐ.பி.எல் அணிக்கு செல்வதை விட வேறுவழியில்லை. வயது காரணமாய் தோனியின் ஆட்டத்திறன் மழுங்கி வருகிறது. மட்டையாளராகவோ கீப்பராகவோ மட்டும் அவர் ஒரு அணியில் இடம் பிடிப்பது இனி சற்றே சிரமம். அணித்தலைவராகத் தான் தோனி இனி ஐ.பி.எல் பேரங்களில் விலை பேசப்படுவார். சென்னை இல்லாத இடத்தில் ஒரு புது அணி தோன்றி அதற்கு தோனி தலைவராகக் கூடுமா?
எட்டாண்டுகளுக்கு மேலாக தோனி இந்திய அணியின் தலைவராகவும் இருந்தது, சென்னை அணி உரிமையாளர் ஸ்ரீனிவாசன் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் இருந்தது ஆகிய காரணங்களால் சென்னை அணி அதிகாரங்கள் குவிகிற மையமாக விளங்கியது. இரண்டு அனுகூலங்களை அந்த அணி அனுபவித்தது.
1)   ஐ.பி.எல்லில் வேறு அணிகள் தொடர்ந்து தம் வீரர்களை பேரத்திற்கு உள்ளாக்கி வெளி அணிகளுக்கு விட்டுத்தர நிர்பந்தம் இருந்தது. ஆனால் சென்னை மட்டும் நீண்ட காலம் ஒரே வீரர்களுடன் ஆடியது. சென்னையை விட்டுப் போவதற்கு வீரர்கள் தயங்கி இருக்கலாம். அல்லது தன் அணி வீரர்களை வெளியே விற்பதற்கு ஸ்ரீனிவாசனை கேட்க பிறர் தயங்கியிருக்கலாம்.
2)    தொடர்ந்து சென்னை அணியில் ஆடுவது இந்திய அணித் தேர்வுக்கான ஒத்திகையாக மாறியது. மோஹித் ஷர்மா, கோனி, பாலாஜி ஆகிய பந்துவீச்சாளர்கள் சென்னைக்காய் தோனியின் கீழ் ஆடிய பின்னரே இந்திய அணிக்கு தேர்வாகினர். அஷ்வின், ரெய்னா ஆகியோரும் கூட இவ்வாறு தோனியா கவனிக்கப்பட்ட பின்னரே இந்திய அணியில் இடம்பெற்றனர். பின்னர் தோனி ஜடேஜாவை சென்னைக்கு கொண்டு வந்ததும் பாதி இந்திய அணி சென்னைக்கு ஆடும் நிலை ஏற்பட்டது. இப்படித் தான் சென்னைக்கு இந்திய அணியின் நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. தோனி முக்கிய பங்குதாரராக உள்ள ரிட்ஸ் எனும் வீரர்களின் விளம்பர வாய்ப்புகளை நிர்வகிக்கும் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக ஜடேஜா, ரெய்னா ஆகியோர் இருப்பதும் தோனி தன் சொந்த நிறுவனத்துக்காக சில குறிப்பிட்ட வீரர்களை இந்திய மற்றும் சென்னை அணிகளில் ஆட வைக்கிறார் எனும் சந்தேகத்தை வலுவாக்கியது. ஏனென்றால் எவ்வளவு மோசமாய் ஆடினாலும் ஜடேஜா இந்திய அணியில் இருந்து நீக்கப்படவில்லை. ரெய்னா தகுதிக்கும் மீறி அடிக்கடி இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்று வந்தார்.
ஆக இந்த தடை நடைமுறைப்படுத்தப்பட்டால் ஸ்ரீனிவாசன், தோனி மற்றும் சென்னை அணி வீரர்கள் இணைந்து கட்டின அதிகார சீட்டுக்கட்டு கோபுரம் முற்றிலுமாய் சரியக் கூடும்.
குருநாத் மெய்யப்பனின் தவறுக்காய் மொத்த அணியையும் தடை செய்வது நியாயமா?
மெய்யப்பன் மட்டுமல்ல வேறு சில வீரர்களும் சூதாட்டத்தில் சம்மந்தப்பட்டிருப்பதாய் ஐயங்கள் உள்ளன. உதாரணமாய் முன்னாள் ஐ.பி.எல் தலைவர் லலித் மோடி சமீபமாய் சென்னை அணியின் ரெய்னா, பிராவோ மற்றும் ஜடேஜா ஒரு சூதாட்டக்காரருடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், அவர் அவர்களுக்கு மும்பையில் பலகோடி மதிப்பிலான வீடு மற்றும் பரிசுகள் அளித்ததாய் ட்வீட் செய்தார். இப்புகாரை விசாரிக்கும்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்திய வாரியத்திடம் கேட்க வாரியமோ அதை குப்பைக்கூடைக்கு அனுப்பியது. ஆனால் ராஜஸ்தான் அணியின் சவான், சந்திலா, ஸ்ரீசாந்த் ஆகியோர் பற்றி புகார் எழுந்த போது உடனடியாய் விசாரிக்கப்பட்டு விசாரணை முடியுமுன்னரே மூவரும் தடை செய்யப்பட்டனர். கைதும் ஆயினர். ஆனால் சென்னை அணிக்கு எதிராய் அதாரங்களை திரட்டின ஒரு காவல்துறை ஆய்வாளர் பின்னர் சூதாட்டத்தை விசாரித்து வந்து மும்பை காவல்துறையினரிடம் அவற்றை அளிக்காமல் மறைத்தார். ஆக சென்னை அணி வீரர்கள் அனைவரும் தூய ஆவிகள் அல்ல. நீதிமன்றம் சரியான ஆதாரமில்லாமல் வீரர்கள் பெயர்களை வெளியிடக் கூடாதென்பதில் கவனம் காட்டுவதால் பொதுவாய் சென்னை அணியை மட்டுமே தடை செய்துள்ளதாய் புரிந்து கொள்ளலாம்.
முதன்முதலில் மெய்யப்பனுக்கு எதிராய் குற்றச்சாட்டு கிளம்பிய போது ஸ்ரீனிவாசன் உடனடியாய் தவறை ஒத்துக் கொண்டு தன் மருமகனை வெளிப்படையாய் குற்றம்சாட்டி விலக்கி வைத்திருக்க வேண்டும். அவருக்கு எதிராய் நேர்மையான விசாரணை நடக்கவும் வழிவகை செய்திருக்க வேண்டும். ஆனால் நேர்மாறாக நடந்தது. அவர் தன் அணியையும் மருமகனையும் காப்பாற்ற இறுதி வரை பிரயத்தனித்தார். விளைவாக அணியையும் இழந்து மருமகனும் ஆயுட்காலமும் தடைசெய்யப்பட்டு இப்போது பெரும் இழப்பு அவருகே! உப்பு தின்றால் வேறு வழி?
ராஜஸ்தான் அணி குறைந்த முதலீட்டில் உருவானது. அதிலிருந்து பெரும் லாபமும் உரிமையாளருக்கு கிடையாது. ஆனால் தொடர்ந்து இந்த அணியை குந்தரே நடத்திக் கொண்டு போனது சூதாட்டம் மூலம் சம்பாதிக்கத் தானோ எனும் ஐயம் எழுகிறது.
இதோடு முடிந்து விடவில்லை. பங்களுர் போன்ற பிற அணிகள், கிரிக்கெட் வாரியத்தின் சில நிர்வாகிகள் ஆகியோர் மீதும் சந்தேகத்தின் நிழல் விழுகிறது. பெரும்புள்ளிகள் சம்மந்தப்பட்டிருப்பதால் கிரிக்கெட் வாரியம் கராறான நடவடிக்கை எடுக்காமம் சதா பூசி மெழுகி வந்தது. இப்போது உச்சநீதிமன்றமே தலையிட்டு தடை செய்துள்ளது வாரியத்தின் முகத்தில் பூசப்பட்டு கரியும் தான்.

(ஜூலை மாத கல்கியில் வெளியான கட்டுரை)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...