இன்று மாலை 6 மணிக்கு டிஸ்கவரி
புக் பேலஸ் அரங்கில் நடக்க இருக்கும் செவ்வி கூட்டத்தில் நான் டி.டி ராமகிருஷ்ணனின்
பிரான்ஸிஸ் இட்டிக்கோரா நாவல் பற்றி பேச இருக்கிறேன். இரண்டு விசயங்களை முன்னிலைப்படுத்த
இருக்கிறேன். ஒன்று சாருவின் தாக்கத்தால் இந்நாவலுக்கு விளைந்த கேடு. இன்னொன்று மெட்டாபிக்ஷன்
படைப்பாய் இந்நாவல் உருவாகி வந்துள்ள விதம். தமிழில் இத்தகு முயற்சிகள் நடந்தனவா என்பது
பற்றியும் பேச விருப்பம். இதே நாவல் பற்றி சந்திராவும், லைம்லைட் நாவல் பற்றி யுவகிருஷ்ணாவும்
பேச இருக்கிறார்கள். நண்பர்கள் அவசியம் கலந்து கொள்ளவும்.
ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன். அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கருத்துகள்