முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனிமையின் மாதம்



உயிர்மை எனக்கு சொந்த வீடு போல. உயிர்மையில் எழுதின கட்டுரைகள் வழியாக அதன் பல முகங்களில் ஒன்றாகவே நான் அறியப்பட்டு வருகிறேன். கடந்த ஐந்து வருடங்களாக ஒரு மாதம் கூட தவறாமல் உயிர்மையில் எழுதி வந்திருக்கிறேன். இம்மாதம் முதன்முறையாய் இடநெருக்கடி காரணமாய் என் கட்டுரை இடம்பெறவில்லை. இனியும் தொடர்ந்து எழுதத் தான் போகிறேன் என்றாலும் ஒரு பெரிய உறவு முடிந்து போகிற கலக்கமும் பதற்றமும் என்னை சட்டென தாக்கின. நீண்ட நேரமாய் இதழை கையில் வைத்து பார்த்தபடியே இருந்தேன்.


முதன்முறையாய் என் கட்டுரை கவர் ஸ்டோரியாய் இடம் பெற்ற போது அத்தகவலை மனுஷ்யபுத்திரன் எனக்கு போனில் அழைத்து தெரிவித்தார். அப்போது நான் கொடைக்கானலில் ஒரு காட்டேஜில் இருந்தேன். மலைச்சரிவின் பக்கச்சுவர் ஒன்றை பிடித்து நின்றபடி அவரிடம் மனக்கிளர்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்த காட்சி எனக்கு மீண்டும் மீண்டும் நினைவு வந்தது. உயிரோசையில் நான் எழுத ஆரம்பித்த காலத்தில் அவர் என்னிடம் வாராவாரம் போனில் பேசுவார். என்ன கட்டுரை எழுத உத்தேசிக்கிறேன் என விசாரிப்பார். கட்டுரை படித்த பின் விரிவாக அக்கறையுடன் நிறைய பேசுவார். எந்த எடிட்டரும் இது போல் ஒரு இளைய எழுத்தாளனிடம் அக்கறை காட்டியிருக்க மாட்டார்கள். உயிர்மையில் தொடர்ந்து எழுதிய வருடங்களிலும் மாதாமாதம் அவர் நான் எழுதப் போகிற கட்டுரை பற்றி கேட்காமல் இருந்ததில்லை. இம்மாதம் மட்டும் நேரமின்மை காரணமாய் அவருக்கு பேச இயலாமல் போயிற்று. இது ஒரு சின்ன விசயம் தான். ஆனால் எழுத்தாளனுக்கு இந்த விசாரிப்பும் அக்கறையும் ஒரு முக்கியமான அரவணைப்பு. அது இல்லாமல் போவது, ஒரே ஒரு தடவை என்றாலும், அவன் தவித்துப் போகிறான். படைப்பு பிரசுரமாவதை விட அவர் கேட்பதும், அவருக்காய் நான் அதை எழுதுவதும் எனக்கு அளித்துள்ள உவகையும் திருப்தியும் வர்ணிக்க இயலாத ஒன்று. ஐந்து வருடங்களில் முதன்முறையாய் இன்று நான் மிகவும் தனிமையாய் உணர்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...