முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கல்தோசைக்காரரும் டாஸ்மாக் எதிர்ப்பாளரும்



நேற்றிரவு ஒரு சின்ன கடையில் கல்தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். கடை முதலாளி தன் மூக்குக் கண்ணாடிக்கு மேலாக பார்க்கும் அந்த பாணி எனக்கு போகன் சங்கரை நினைவூட்டியது. அவர் சும்மா வானத்தை பார்வையிடும் பாணியில் லேசாய் முகவாயை தூக்கி பார்த்து தான் “கல் தோசை ரெண்டா போட்டிருட்டுமா?” என்று கேட்கையில் பல சிறுபத்திரிகை எழுத்தாளர்களை நினைவுபடுத்தினார். அது எப்படியோ போகட்டும். அவருக்கு ஒரு பழக்கம். தெரிந்தவர்கள் யாராவது கடைக்கு வந்தால் வராத ஒருத்தரைப் பற்றிக் கேட்பார். ஒரு பத்து வயது சோனிப் பெண் நைட்டி அணிந்து துள்ளலாய் குதித்தபடி பார்சல் வாங்க வந்தாள். அவளிடம் “ஏன் உன் அக்கா வரல? என திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருந்தார். அவளோ “இது போல நூற்றுக்கணக்காண ஆண்களை பார்த்தாச்சு” என்கிற கணக்கில் ஒரு பாவனை காட்டி விட்டு பழையபடி நின்ற வாக்கி ஆடிக் கொண்டிருந்தாள்.

 அப்போது வாடிய கீரையை போல் ஒரு பெண் வந்தாள். மிகவும் சின்ன வயதில் திருமணம் கொடுத்திருக்க வேண்டும். 24, 25 இருப்பாள். ஆனால் ஒரு யுகம் திருமணம் எனும் செக்கில் ஓடிய அலுப்பும் இளைப்பும் தெரிந்தது. அவளிடமும் நம் சிறுபத்திரிகை தோசை கடைக்காரர் “ஏம்மா ஒரு வாரமா ஆளையே காணலே?” என்றார். அவள் தனக்கு நான்கைந்து நாளாய் ஜுரம் என்றும், இப்போது தான் உடல் தணிந்து வெளியே வந்திருப்பதாயும் சொன்னாள். நம் ஆள் எப்போதும் வராத ஆளைப் பற்றித் தானே பேசுவார். உடனே அவள் கணவனைக் குறிப்பிட்டு சொன்னார். “அவன் நேத்து கூட வந்து பீப் வாங்கிப் போனானே”. அந்த பெண்ணின் முகமே மாறி விட்டது. தன் கணவன் சரியாய் வேலைக்கு போவதில்லை, தினமும் குடித்து குடித்தே பணத்தை அழிக்கிறார், வீட்டையே கவனிப்பதில்லை என ஒரே புலம்பல். கடைக்காரர் புது வாடிக்கையாளர்களைப் பார்க்க நகர்ந்து விட்டார். கேட்க ஆள் இல்லை என்றாலும் அப்பெண் கணவனை இரைந்து திட்டிக் கொண்டிருந்தார். அடுத்து அரசாங்கத்தை விமர்சிக்க தொடங்கினார். பத்தடிக்கு ”நாலு கடையிருந்தா குடிக்காம என்ன பண்ணுவாங்களாம்? குடியால கெட்டுப் போற குடும்பங்களுக்கு இந்த அரசு என்ன நிவாரணம் பண்ணப் போகிறது?” என வரிசை வரிசையாய் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார். அவர் ஒரு கண்காணாத படக்கருவியை நோக்கி கருத்து சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு ஒரு நிமிடம் சன் நியூஸ் விவாத மேடையில் இருக்கிறோமோ எனும் எண்ணம் வந்து விட்டது. அவ்வளவு தெளிவாக சரளமாக தர்க்கரீதியாய் திட்டினார். பொதுவாக யார் வேண்டுமானாலும் யாரையும் காறித் துப்பலாம். ஆனால் அடுக்கடுக்காய் கருத்து சொல்வது ஒரு கலை என இத்தனைக் காலமும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது தவறு. இந்த மீடியா யுகத்தில் இனி நிபுணர்கள் என தனியாக இருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். பொதுமக்கள் எல்லாரும் இனி நிபுணர்களே. மக்கள் இவ்வளவு criticalஆக மாறி வருவது ஒரு நல்ல விசயம்.
அது மட்டுமல்ல டாஸ்மாக் நடத்தி இப்படி பல குடும்பங்களின் வயிற்றில் அடிக்கும் அரசு மீது கணிசமான பெண்களுக்குள் கடும் கோபம் நொதிக்கிறது. அரசும் ஆளுங்கட்சி சாராய ஆலை முதலாளிகளும் சம்பாதிக்கும் கோடிகள் ஒரு கீழ்த்தட்டு குழந்தையின் ஒரு வேளை உணவு, படிக்க வேண்டிய புத்தகம், நிம்மதியான சூழல், கல்விக்கான செலவு என ஒவ்வொன்றையும் பறித்து உருவான பணம். ஒருநாள் இந்த கோபம் கண்ணகியின் ஒற்றை முலையைப் போல் இந்த அரசை எரித்து சாம்பலாக்க போகிறது.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.