முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுத்தாளனும் பிச்சைக்காரர்களும்



”இந்த புத்தாண்டில் தினத்தில் உன் புத்தகம் வராதா?” என மனைவி சற்று துயரம் தோய்ந்த குரலில் கேட்டாள். நான் வராது என்றதும். “ச்சே ஒவ்வொரு வருடமும் அப்படி கொண்டாட்டமாக ஆரம்பித்து பழகி விட்டது” என்றாள். எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை ரகசியமாய் ஒரு புரளியை கிளப்பி விட்டு அது பெரிய கதையாக ஊரெல்லாம் பரவும் போது ஒரு உள்ளார்ந்த உற்சாகம் தோன்றுமே, புத்தகம் வெளியாகிற நாட்களில் எழுத்தாளனுக்கு அப்படியான பரபரப்பு தான் இருக்கும். தமிழர்கள் எந்த புத்தகத்தினாலும் சலனப்பட மாட்டார்கள் என்றாலும் நமக்கென உள்ள ஒரு சிறு வட்டத்தில் சில அலைகள் கிளம்பும். அதை கவனிக்கவும் பின் தொடரவும் ஆர்வமாக இருக்கும். என்னுடைய இரண்டாவது நாவல் வெளியான போது அதன் முழுமகிழ்ச்சியையும் புத்தகத்தின் பிரதியை ஏந்தியபடி தனியாக வீடு திரும்பும் இரவு வேளையில் தான் உணர்ந்தேன்.

 ஆனால் இவ்வருடம் தனிப்பட்ட முறையில் எனக்கு கொஞ்சம் வேற மாதிரி. கடந்த சில மாதங்களில் கடுமையான பொருளாதார சிரமங்களை அனுபவித்து மனம் மரத்துப் போய் விட்டது. ஓட்டை விழுந்த ஒரே சட்டையை போட்டுக் கொண்டு அலைந்தேன். அம்மா உணவகத்தில் ஐந்து ரூபாய்க்கு இரவுணவை முடித்துக் கொள்ள பழகினேன். பணம் இல்லையென்பது ஒரு நடைமுறை பிரச்சனை மட்டும் அல்ல. அது நம் ஈகோவை கடுமையாய் தளர்த்துகிறது. பண பயம் போதை வஸ்துவை போல் மனதை விசித்திரமாய் யோசிக்க வைக்கிறது. ”வானம்” படத்தில் சிம்பு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும் ஆளின் கையில் இருக்கும் கத்தை கத்தையான பணத்தையே தன்னை அறியாமல் பார்த்துக் கொண்டிருப்பார். என் மனம் இப்படித் தான் இயங்கிக் கொண்டிருந்தது. ஒருநாள் எனக்கு ஒரு விசித்திரமான கற்பனை வந்தது. வேலை கிடைக்காவிட்டால் முச்சந்தியில் நின்று பிச்சை எடுக்க வேண்டும் என நினைத்தேன். குறிப்பாக சிக்னல் உள்ள நெருக்கடியான சாலை ஒன்றில். அது எந்த இடமாக இருக்கும் என்று கூட என் மனதில் தோன்றி விட்டது. அப்போது என்ன உடை அணிய வேண்டும், எந்த பாத்திரத்தில் பிச்சை எடுக்க வேண்டுமெல்லாம் கூட யோசித்தேன். (எழுத்தாளனாக இருப்பதன் சிக்கல் இது – மனம் படுவேகமாய் வேலை செய்யும்). கொஞ்ச நேரத்தில் என்ன அபத்தம் இது என என்னை பார்த்து நானே சிரித்துக் கொண்டேன். அதன் பிறகு பொருளாதார கவலைகள் ஓரளவு அகன்று விட்டன.
 போன வாரம் அடையாறில் இருந்து ராஜ்பவன் போகிற வழியில் உள்ள ஒரு சந்தில் இரவு பதினொரு மணிக்கு ஒரு சின்ன ஓட்டலில் தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். பக்கத்தில் ஒரு காயிலாங்கடை. பிளாஸ்டிக் கேன்களும் பாட்டில்களும் தொங்க விட்டிருந்தார்கள். அதை வாங்குவதற்காய் அழுக்கான தார்பாய்ச்சிய வெள்ளை வேட்டியும், குர்தாவும், முண்டாசும் அணிந்த ஒல்லியான கறுப்பான மனிதர்கள் வந்தார்கள். கையில் ஒரு கழி வைத்திருந்தார்கள். ஏதோ ஒரு விசித்திரமான மொழியில் கடைக்காரனுடன் பேரம் பேசினார்கள். பிறகு சில பழைய கேன்களை வாங்கிக் கொண்டு போனார்கள். நான் எதற்கு என கடைக்காரனிடம் விசாரித்தேன். தண்ணீர் பிடிப்பதற்காக வாங்கிக் கொண்டு போகிறார்கள் என்றார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒருவர் கேனுடன் திரும்ப வந்தார். இன்னொரு கேனைக் காட்டி அது வேண்டும் என்றார். கடைக்காரரும் கொடுத்தார். கொடுக்கும் போது சொன்னார் “நல்லா கழுவிட்டு தண்ணி பிடி”. அந்த கேன்களில் எண்ணெயோ மண்ணெண்ணெயோ பெட்ரோலோ கூட பிடிக்க பயன்படுத்தி இருக்கலாம். அதில் அப்படி ஒரு மோசமான நாற்றம் அடிக்கும் என எனக்குத் தோன்றியது. அதில் தண்ணீர் குடித்தால் நிச்சயம் வீச்சமடிக்கும். ஆனால் அப்படி ஒரு கேனுக்காய் சண்டை போட்டு வாங்கிப் போகும் ஆட்கள் இந்த ஊரில் இருக்கிறார்களா? தண்ணீர் பிடிக்க ஒரு காலி புட்டி கூட இல்லாதவர்கள் இருக்கிறார்களா? யார் இவர்கள்? என்றெல்லாம் யோசித்தேன்.
அடுத்த நாள் வீடு திரும்பும் போது நான் கற்பனையில் கண்ட அதே சிக்னலில் வண்டியில் நின்று கொண்டிருந்தேன். அன்று கேன் வாங்க வந்தவர்கள் சாரி சாரியாய் பிச்சை கேட்டு வந்து கொண்டிருந்தார்கள். ஒருவர் என் கண்களை நோக்கி எதையோ முணுமுணுத்தபடி கைகளை நீட்டி ஏந்தி நின்றார். அவர் கண்களில் நான் என்னையே பார்த்தேன். அவருக்கு பிச்சை அளிப்பது எனக்கே பிச்சை அளிப்பது போல் இருக்கும் எனத் தோன்றியது. பார்வையால் மறுப்பு தெரிவித்தேன். அவர் உடனே அகன்று விட்டார். நமக்கு ஒரு சிறு எல்லைக்கோடு உள்ளது. ஒரு அடி எடுத்து வைத்தால் அதை தாண்டி விடலாம். காலம் இன்னும் கொஞ்சம் கழுத்தை நெரித்தால் யார் வேண்டுமானாலும் கோட்டின் அந்த பக்கம் போய் விடுவோம்.
வாழ்க்கை இப்படி இருக்கையில் புத்தகம், வாசகர்கள், விவாதம் எல்லாவற்றின் மீதும் கடும் அலுப்பு வந்து விட்டது. மரணம் நிகழ்ந்த வீட்டில் உடனடியாய் திருமணம் போன்ற வைபவங்கள் நடத்தக் கூடாது என்பார்கள். என் மனதுக்குள் ஒரு மரணம் நிகழ்ந்து விட்டது. வாழ்க்கையின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது ஒரு பிரச்சனையே அல்ல என நினைத்திருந்தேன். அந்த நம்பிக்கை செத்து விட்டது. எவ்வளவு தான் வேலை செய்தாலும் உணவுக்காக இருட்டில் எலியை போல் ஒருநாள் ஓட நேரிடலாம் என பயம் வந்து விட்டது.
இலக்கியம், கலை, பிரசுரம் பற்றின என் லட்சியங்கள் தற்காலிக கோமாவுக்குள் சென்று விட்டன. எந்த இலக்கிய ஏமாற்றமும் குதூகலமும் இனி என் மனதை தீண்டாது. அது மரத்துப் போய் விட்டது.
மீண்டும் முன்பு போல் மகிழ்ச்சியில் திளைக்க எனக்கு இன்னும் சற்று கால அவகாசம் தேவை. ஏப்ரல், மே காலத்தில் புத்தக கண்காட்சி என்றால் நான் இன்னும் கொஞ்சம் இயல்பு நிலைக்கு திரும்பி இருப்பேன். பழையபடி இலக்கியம் பற்றின வெற்று கற்பனைகளிலும் கனவுகளிலும் மிதக்க தொடங்கி இருப்பேன். வரட்டும்!

கருத்துகள்

Count your blessings இவ்வாறு கூறியுள்ளார்…
this is not writer's block.... For there is a flow of words... U ld ve ended up as a mediocre writer without these experiences...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.