முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதல் குடிமகன்கள்



டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டங்கள் நடந்த போது காவல்துறை குடிகாரர்கள் நிம்மதியாய் குடிப்பதற்காய் பாதுகாப்பு கொடுத்ததைப் பார்த்தோம். அதை வெட்கக்கேடு என விமர்சித்தோம். இது போன்ற சந்தர்பங்களில் போலீசாரின் நிலை உண்மையில் ரொம்பவே பரிதாபம்.
என் வீட்டுப் பக்கத்தில் ஒரு டாஸ்மாக் உண்டு. அங்கு வரும் கூட்டத்திற்கு வாகனங்கள் நிறுத்த இடமில்லை. சிலர் சற்று தொலையில் காலி இடங்களில் நிறுத்துவார்கள். பலர் டாஸ்மாக்குக்கு எதிரிலும் பாதி சாலையிலும் ஏதோ அடிப்பம்புக்கு முன் குடங்களை அடுக்கி வைத்தது போல் நிறுத்தி விட்டு போய் விடுவார்கள். அது ஏற்கனவே குறுகலான சாலை. இதனாலே எப்போதும் டாஸ்மாக் பிஸியாக உள்ள மாலை வேளைகளில் போக்குவரத்துக்கு மலச்சிக்கல் வந்து நின்று விடும். இன்று ஒன்பது மணிக்கு நிறைய பேருந்துகள் அவ்வழி போகும் நேரம். எதிரெதிரே வந்த இரு பேருந்துகள் மேலும் நகர முடியாதபடி சாலை வரை பைக்குகள் நின்றிருந்தன. பேருந்து ஓட்டுநர் பைக்கை எடுத்து நீக்கி வைக்குமாறு கத்துகிறார். யாரும் கேட்கவில்லை. அவர் கடுப்பாகி சாலையில் பேருந்தை நிறுத்தி விட்டு இறங்கி சென்று விட்டார். முதலில் எல்லோரும் பைக்குகள் அங்குள்ள ஓட்டலில் சாப்பிடுகிறவர்களுடையது என நினைத்திருந்தார்கள். ஓட்டல்காரர்கள் உண்மையை தெளிவுபடுத்தியதும் ஓட்டுநர் பைக்குகளின் உரிமையாளர்களே வந்து நகர்த்தட்டும், அதுவரை பஸ் நகராது என்று விட்டார். ஒரே களேபரம். கடைசியில் ரொம்ப பிஸியாக பரோட்டா அடித்துக் கொண்டிருந்த மாஸ்டர் கையை கழுவி விட்டு வந்து பைக்குகளை தூக்கி தள்ளி வைத்தார்.

 பேருந்து நகர போக்குவரத்து சீரானது. கொஞ்ச நேரத்தில் ஸ்பீக்கர் கட்டிய ஜீப்பில் இரு போலிசார் ஆடம்பரமாய் மிரட்டியபடி வந்தனர். அவர்கள் ஓட்டலின் காலி முக்காலி ஒன்று வெளியே கிடப்பதை கண்டு “அதை தூக்கி உள்ளே போடுடா” என கத்தினர். அடுத்து பைக்குகளைப் பார்த்தனர். உடனே பைக்குகளை அங்கிருந்து எடுக்காவிட்டால் பறிமுதல் செய்யப்படும் என அறிவித்தனர். யாரும் பொருட்படுத்தவில்லை. அடுத்து ஓட்டல்காரரிடம் பைக்குகளின் உரிமையாளர்களை அழைக்கும்படி கூவினார்கள். அவர்கள் டாஸ்மாக்குக்குள் போய் பார்க்கும் படி கூறினர். டாஸ்மாக் என்று கேட்டதுமே போலிசார் கப்சிப் என்றாகி விட்டனர்.
 அவர்கள் நினைத்தால் டாஸ்மாக்குக்குள் சென்று பைக்கின் உரிமையாளர்களை அழைத்து வந்து நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் டாஸ்மாக்குக்குள் போலிசார் நுழைந்து கைது என செய்தி வந்தால் அடுத்த நிமிடமே அம்மா இரண்டு பேரையும் சஸ்பண்ட் செய்து வீட்டுக்கு அனுப்பி விடுவார். குடிப்பவர்களின் அதிகாரமும் கெத்தும் என்னவென நான் உணர்ந்த தருணம் அது. டாஸ்மாக்குகள் பக்கத்தில் வந்தாலே போலிசார் போயஸ் கார்டனுக்குள் நுழைந்தது போல் நடுங்குகிறார்கள். ஒவ்வொரு டாஸ்மாக்கும் அவர்களுக்கு அம்மாவின் பெயரிலான கோயிலாகவே படுகிறது. குடிகாரர்களைத் தொட்டால் அரசு உதைக்கும். நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்கள் காறித் துப்புவார்கள்.

ஒரு போலீஸ்காரர் ஒரு வீம்புக்காக பைக்குகளின் டயர் காற்றை திறந்து விட முயன்றார். ஆனால் அதையும் அவரால் சரிவர செய்யத் தெரியவில்லை என பொதுமக்கள் சிரித்தனர்.
முன்பெல்லாம் ஒருவர் தன்னை மந்திரியின் மைத்துனன், எம்.எல்.ஏ உறவுக்காரன், வட்டச்செயலாளர் என ஏதாவது ஒரு பெயர் சொல்லி போலிசையும் அரசு எந்திரத்தையும் மிரட்டுவார்கள். இன்று நான் டாஸ்மாக் வாடிக்கையாளன் என்று சொன்னால் போதும் அதற்கு ஒரு தனி மரியாதை வந்துள்ளது. குடிகாரர்களை போலிசார் சல்யூட் அடிக்காத குறை தான். அந்த பெருமை நிச்சயம் அம்மாவுக்கே சேரும். குடிகாரர்கள் இனி இந்த அரசிடம் இருந்து ஓய்வூதியம், பஞ்சப்படி ஆகியன கோரலாம். ஐ.டி கார்ட் கேட்கலாம். தொழிற்சங்கம் அமைக்கலாம். அவர்கள் மீது கை வைத்தால் இந்த அரசு பார்த்துக் கொண்டிருக்காது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.