முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பர்தாவும் பெண்ணுரிமையும்

பர்தா அணிந்த ஒரு பெண்ணை பார்க்கையில் சிலநேரம் சமூக கோபம் சிலருக்கு வரலாம். எப்படி இந்த காலத்துக்கு பெண்களே ஆணாதிக்கவாத சிந்தனைக்கு அடிபணிந்து தம்மை வெறும் உடலாக பாவிக்கலாம் எனத் தோன்றலாம். ஆனால் இது மேம்போக்கான பார்வை. சுதந்திரமோ தனிமனித உரிமையோ பெண்ணுரிமையோ உண்மையில் ஆடையில் இல்லை. பாப்கட் வைத்து சட்டை பேண்ட் அணிந்த பெண்கள் எல்லாம் முழு சுதந்திரமானவர்களா? அவசியமில்லை. அப்பெண் தனிப்பட்ட முறையில் பல்வேறு சமரசங்களை ஆண் சமூகத்திடம் செய்து தன் ஆடை சுதந்திரத்தை மட்டும் தக்க வைத்திருக்கலாம். ஒருவேளை சேலை அணிந்த ஒரு பெண்ணை போல சில விசயங்களில் துணிச்சலாய் ஆண்களை எதிர்க்க அப்பெண்ணால் முடியாமல் போகலாம்.


 பெண் சுதந்திரத்தை அளவிடவே முடியாது. வாழ்க்கை மிக மிக சிக்கலானது. பல வித சமாளிப்புகளை கடந்து தான் பெரிய பெண்ணுரிமை போராளிகளும் கையளவு சுதந்திரத்துடன் வாழ முடியும். ஒவ்வொருவரும் தமக்கான அளவில் சுதந்திரத்துடன் மகிழ்ச்சியாக உள்ளார்கள் என்பது தான் உண்மை.
பொதுவாக தனிமனித சுதந்திரத்தை கூடத் தான் அளவிட முடியாது. கேரளாவில் பரவலாக முத்தப்போராட்டம் நடத்தினார்கள். அதற்கு எதிர்ப்பு எழுந்தது. ஒருவேளை சமூகம் அதை ஏற்றுக் கொண்டு விட்டால் அடுத்தது என்ன? சுதந்திரத்துக்கு முடிவே இல்லை. பொதுவெளியில் முத்தமிட முடியாதவர்கள் எல்லாம் மூச்சு முட்டி புழுங்குகிறார்களா? இல்லை.
முழு சுதந்திரம் தான் மகிழ்ச்சி என்றில்லை.

பர்தா அணிந்த பெண்ணுக்கு திரும்பவும் வருவோம். பர்தா சரியா தவறா என்பதற்கு நான் செல்லவில்லை. நான் நேற்று அலுவலக மின் தூக்கியில் செல்லும் போது பர்தா அணிந்த ஒரு பெண்ணும் ஏறிக் கொண்டார். நான் 10 வருடங்களாக பல்வேறு இடங்களில் வேலை பார்த்திருக்கிறேன். முதன்முறையாக ஒரு பர்தா அணிந்த இஸ்லாமிய பெண்ணை அலுவலகத்தில் பார்க்கிறேன். ஆரம்பத்தில் கொஞ்சம் ஜெர்க்காக இருந்தது. பிறகு எனக்கு இஸ்லாமிய பெண்கள் வேலைக்கு வருவதே முற்போக்கான மாற்றம் எனப் பட்டது. முன்பை விட அச்சமூகத்தில் பெண்கள் அதிகமாய் கல்லூரியில் படிக்கிறார்கள். இப்போது மெல்ல மெல்ல வேலைக்கு வரத் தொடங்குகிறார்கள். இன்னும் 40 வருடங்களில் பொது சமூக நீரோட்டத்துடன் அவர்கள் கலக்கப் போகிறார்கள் என்பதற்கு இது ஒரு அறிகுறி. அந்த பெண்ணின் வாழ்க்கை எல்லைக்குள் அவளுக்கான கட்டுப்பாடுகளும் சுதந்திரங்களும் மகிழ்ச்சியும் இருக்கும். அதை மதிப்பிட நாம் யார்? அவள் தன் ஸ்மார்ட்போனில் பேஸ்புக் பார்த்தபடியே வந்தாள். அந்த பரந்த வெளியில் அவள் சுதந்திரத்தை யார் தடுக்க முடியும்? சல்மாவின் மூன்றாம் ஜாமங்களின் கதையில் வரும் வீட்டின் சிறு எல்லைக்குள் மாட்டித் தவிக்கும் பெண்களில் இருந்து இவளைப் போன்ற பெண்கள் எவ்வளவு தூரம் வந்து விட்டார்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...