முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீயெல்லாம் ஒரு தாயா?

Image result for writer cartoon
பிளாகில் மட்டும் எழுதினால் பிளாகர், பேஸ்புக்கில் எழுதினால் பேஸ்புக் பதிவர், இதையே பத்திரிகையில் எழுதினால் ”எழுத்தாளர்”. எப்படி இந்த பட்டங்களை தீர்மானிக்கிறார்கள் என எனக்கு இன்று வரை புரியவில்லை.
 இப்படி எழுத்துக்களுக்கு தனி குணம், வகைமை உண்டென்றும் எனக்கு தோன்றவில்லை. சாரு எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளின் துவக்கத்திலும் எழுதிய பத்திரிகை கட்டுரைகளை படியுங்கள். அவற்றில் இன்றுள்ள இணைய எழுத்தின் எள்ளலும் சரளமும் மிளிரும் ஸ்டைல் அப்போதே இருக்கும். நீளமாய் சீரியஸாய் பேஸ்புக், பிளாகில் எழுதுபவர்களும் இருக்கிறார்கள். பத்திரிகையில் அரட்டை மொழி பயன்படுத்துகிறவர்களும் உண்டு. எப்படி இவர்களை வகை பிரிக்கிறார்கள்?

முன்பு இலக்கிய பத்திரிகைகளில் நீளமாய் கடிதம் எழுதி பிரசுரிப்பவர்கள் இருந்தனர். இக்கடிதங்கள் சிலநேரம் மிகத்தரமாய் இருக்கும் என சாரு ஒருமுறை என்னிடம் குறிப்பிட்டார். குறிப்பாய் காலச்சுவடு இக்கடிதங்கள் மூலம் ஒரு தனி இயக்கமே நடத்தியது. இவர்கள் எழுத்தாளர்கள் இல்லையா? இன்று பேஸ்புக் பதிவுகளுக்கு நீளமான முக்கியமான அல்லது சர்ச்சையை தூண்டும் பின்னூட்டம் எழுதுகிறவர்கள் தனியே இருக்கிறார்கள். பத்து வரி பதிவு எழுதுபவர் பதிவர் எழுத்தாளர் என்றால் இருபது வரிக்கு பின்னூட்டம் இடுபவர் யார்? நோட்டு புத்தகத்தில் நிறைய எழுதி எதையுமே பிரசுரிக்காதவர்கள் எழுத்தாளர்களா இல்லையா?
எது இந்த எழுத்தாள அடையாளத்தை கொடுக்கிறது? தொடர்ந்து எழுதுவதா? அப்படி என்றால் வருடத்திற்கு ஒரு கதை எழுதுபவர் அல்லது பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு தொகுப்பு பிரசுரித்து விட்டு காணாமல் போனவர் எழுத்தாளர் இல்லையா?

சினிமாவில் இந்த சிக்கல் இல்லை. இயக்குநர் ராமை அவர் படம் எடுக்கும் முன்பே எனக்குத் தெரியும். அவர் தன்னை அப்போதே இயக்குநர் எனத் தான் அறிமுகப்படுத்திக் கொள்வார். ஒருவர் படம் எடுக்க நினைத்தாலே அவர் இயக்குநர் தான் என கூறுவார் அவர். ஆனால் எழுத்தில் இப்படி சுலபத்தில் கோர முடிவதில்லை. இசை, ஓவியம் போன்ற கலைகளுக்கும் இது பொருந்தும்.

ஒருவேளை இது வணிகமயமாகாத கலைகளில் சிக்கலாக இருக்கலாம். ஏனென்றால் பரவலான விற்பனைக்குரிய எந்த பண்டத்தை உற்பத்தி பண்ணக் கூடியவருக்கும் உடனடியாய் ஒரு அடையாளம் கிடைத்து விடுகிறது. இல்லாத போது அடையாளம் முழுக்க பார்வை சார்ந்ததாகிறது.

ஒரு பெண் எப்போது தாயாகிறாள்? கருத்தரித்த பின்னரா அல்லது முன்னரேவா? எந்த குழந்தையையும் அள்ளி கையிலெடுத்து நேசிக்கும் ஒருவள் தாயின் அந்தஸ்தை பெறுகிறாளா? பெற்ற பிள்ளையை வெறுக்கும் தாய் ஒருத்தி தாயா இல்லையா? நீயெல்லாம் ஒரு தாயா?, தகப்பனா? நீயெல்லாம் ஒரு நண்பனா? என்பதான கேள்விகளை நீங்கள் “நீயெல்லாம் இரு இயக்குநரா?” “நீயெல்லாம் ஒரு விற்பனை பிரதிநிதியா?” “நீயெல்லாம் ஒரு முதலாளியா?” என மாற்றி கேட்க முடியாது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.