முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனதுக்குள் கேட்கும் குரல்

Image result for silk smitha

இதைப் படிக்கும் போது உங்களுக்குள் ஒரு குரல் ஒலிக்கிறதே அது யாருடையது? உங்களுடையது தான். ஆனால் நீங்கள் தான் வாயே திறக்கவில்லையே? இது எப்படி நிகழ்கிறது. அறிவியல் ஒரு விளக்கம் கொடுக்கிறது. பேச்சுக்கான சில நரம்பணுக்கள் வாசிக்கும் போதும் செயல்படுகின்றன. அதனால் தான் ”குரல்” கேட்கிறது.

மேற்கத்திய இலக்கிய கோட்பாடுகள் குறித்து ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு அத்தியாயம் அமைப்பியல் பற்றி. அமைப்பியலின் பிதாமகர் சசூர். அவர் ஒரு சொல் எப்படி அர்த்தம் கொள்கிறது என விளக்குகிறார். சில்க் என்றதும் உங்களுக்கு எப்படி அர்த்தமாகும்? சில்க் ஸ்மிதா, பட்டாடை அல்லது பட்டின் மென்மை, ஏன் பட்டுப்புழு கூட மனதில் தோன்றலாம். முதலிடம் எப்படியோ சிலுக்குக்கு தான். சரி எப்படி இந்த அர்த்தப்படுத்தல் நிகழ்கிறது?
ஒரு சொல்லை சசூர் இரண்டு விசயங்களின் இணைப்பினால் உருவாகிற சங்கதி என பார்க்கிறார். அர்த்தப்படுத்தும் சங்கதி, அர்த்தப்படுத்தப்படும் விசயம். சில்க் என்றால் அவரது தோற்றம் அர்த்தப்படுத்தும் சங்கதி (signifier). சில்க் எப்படியானவர் (அதாவது ஒரு நடிகை) என்பது அர்த்தப்படுத்தப்படும் விசயம் (signified).
 இதை ஏன் ரெண்டாக பார்க்க வேண்டும்? ஒருவேளை சில்க் ஸ்மிதா தொடர்ந்து வாழ்ந்திருந்தால், அரசியலில் புகுந்து வென்று, ஒரு கட்சியின் தலைவி ஆகி முதலமைச்சர் ஆகி தனக்கென வேறு ஒரு அடையாளத்தை உருவாக்கி இருந்தால்… ஒரு ஐம்பது வருடங்கள் கழித்து சில்க் என கேட்டதும் உங்களுக்கு “தமிழினத் தலைவி”, “ஏழைகளின் காவலர்” என்பது போல் ஒரு அர்த்தம் கிடைக்கலாம். ஆக அர்த்தம் நிரந்தரம் அல்ல. இதை விளக்க ஒரு சொல்லையும் அர்த்தத்தை ரெண்டாய் பிரித்து பார்க்க வேண்டும் என்றார் சசூர். அதனால் அவர் சொல்லையே ரெண்டாக்கினார். அர்த்தத்தை சுட்டி நிற்கும் பொருள். அது சுட்டும் அர்த்தம்.
இதை விளக்கும் போது சசூர் sound image பற்றி சொல்கிறார். ஒரு சொல் நமக்குள் வேலை செய்ய அதற்கு ஒரு ஒலி பிம்பம் வேண்டும் என்றார். உதாரணமாய் மோடி என்று கேட்டதும், அதாவது படித்தால் கூட, மனதுக்குள் அவரது சித்திரம் எழ வேண்டும். அதற்கு நம் மனம் மோடி எனும் சொல் தனக்குள் ஒலித்து கேட்க வேண்டும் என்றார். அதாவது நீங்கள் சாலையில் ஒரு அழகான பெண்ணை பார்த்ததும் அவளைக் குறித்து யோசிக்கிறீர்கள். அந்த எண்ணங்களை, உங்கள் குரல் பின்னணியில் டப்பிங் செய்ய, மனதுக்குள் நீங்கள் அவளை பார்க்கும் அதே சமயம் கேட்கிறீர்கள் தானே? அப்படி கேட்காமல் அவளைக் குறித்து நீங்கள் யோசிக்கவே முடியாது.
எனக்கு இந்த இடம் வந்ததும் ஒரு சந்தேகம் எழுந்தது. பிறவியிலே செவிடான ஒருவருக்கு எந்த சொல்லுக்கும் ஒலி வடிவம் தெரியாது. அவர் வாசிக்கும் போது, யோசிக்கும் போது சொற்கள் அவருக்குள் ஒலிக்குமா? அவருக்குள் sound image இருக்காது தானே? அப்படி என்றால் சசூர் சொல்வது அவர் விசயத்தில் பொருந்தாது.
அது மட்டுமல்ல திடீரென ஒருவர் கத்தியை எடுத்து நம் கழுத்தில் வைத்தால் அந்த நொடி உங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என துல்லியமாய் புரிந்து விடும். ஆனால் யோசிக்கவே மாட்டீர்கள். எண்ணமே எழாமல் புரிந்து கொள்வீர்கள். அப்போது கத்தி எனும் பிம்பத்தை அதன் ஒலி வடிவின்றி அறிந்து கொள்கிறோமே. இது எப்படி நிகழ்கிறது?

அதே போல வேகமாய் வாசிக்கையிலும் நம் மனம் சொற்களை உச்சரிப்பதில்லை. சசூரின் கோட்பாடே பிரக்ஞைபூர்வமான மனநிலையில் ஏற்படுத்தும் அர்த்தப்படுத்தல் பற்றியது என நினைக்கிறேன். பிரக்ஞை அற்ற நிலையில் நாம் புரிந்து கொள்ளும் போது சசூரின் ஒலி பிம்பம் செயல்படுவதில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...