முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெறுமை என்றால் என்ன?


வெறுமைக்கு நிறைய விளக்கங்கள் உள்ளன. அதாவது ஆன்மீக ரீதியாய், தத்துவார்த்தமாய், உளவியல் ரீதியாய். ஆனால் நான் கேட்பது அன்றாட வாழ்க்கையில் நாம் உணரும் வெறுமை. அதாவது “இன்று ஒன்றுமே நினைத்துப் பார்க்கும்படியாய் இல்லை, நான் இன்று ஒன்றுமே உருப்படியாய் செய்யவில்லை, இன்றைய நான் ஒன்றுமில்லாமல் முடிந்து போனதே” எனும் உணர்வு.

இந்த உணர்வு முரணானது. ஏனென்றால் நாம் நாள் முழுக்க எதையோ செய்தபடி தான் இருக்கிறோம். அன்றாட கடமைகள், வேலைக்கு பயணிப்பது, வேலையை செய்வது, வெளியிடத்தில் வெளிநபர்கள், கூட பணி செய்பவர்கள், நண்பர்களுடன் பழகுவது, அவர்களை கையாள்வது என ஒரு நிமிடம் கூட அசராமல் பரபரப்பாய் தான் இருக்கிறோம். ஆனால் ஒரு வேலை நாள் முடிந்து வீடு திரும்பும் போது மேற்சொன்ன உணர்வுகள் வருகின்றன. நினைத்துப் பார்க்கும்படியாய் இன்று ஒன்றுமே இல்லையே என நினைக்கிறோம்.
வேலைக்கு போகாமல் வீட்டில் ஓய்வாய் இருப்பவர்களுக்கும் இதே வெறுமை தோன்றுகிறது. ஒன்று, நேரம் நகராது. எதையாவது உருட்டி புரட்டி நேரத்தை கடத்தியபடி இன்று ஏன் இப்படி வீணாய் கழிந்தது எனத் தோன்றும். அல்லது, நாம் உண்மையில் என்னதான் இந்த வாழ்க்கையில் பண்ணுகிறோம் என கேள்வி எழும்.
இந்த வெறுமை தான் டி.வி, சினிமா, குடி, சூது போன்ற பொழுதுபோக்குகளை நோக்கி, போலி சாமியார்கள், மிதமிஞ்சிய காமத்தை நோக்கி, குற்றங்களை நோக்கி நம்மை செலுத்துகிறது. இன்றைய நாளை நினைத்துப் பார்க்கும்படியாய் செய்ய அரைமணி நேரம் அமைந்தால் போதும் என நினைக்கிறோம். ஆனால் எல்லாம் முடிந்த பின் நாம் இன்னும் அதிக வெறுமையாய் தான் உணர்கிறோம்.
உண்மையில் பிரச்சனை என்ன? நம் வாழ்க்கையில் ஆழமான திருப்தி இல்லை. சரி ஆழமான திருப்தி என்றால் என்ன?
நான் அதை இப்படி வகுத்துக் கொள்கிறேன்.
ஆழமான திருப்தி = ஆழமான நினைவுகள்.
வெறுமை என்பது நினைவுகள் இல்லாத நிலை. அதாவது உறுதியாய் நாம் பற்றிக் கொள்ளும்படியான நினைவுகள் இல்லாத நிலை. ஒரு ஆழமான உக்கிரமான மகிழ்ச்சியான அனுபவம் (படைப்பூக்கமான செயல்கள், தியானம், மனம் திளைக்கும் அன்பான தருணங்கள், ஒரு பிரம்மாண்டமான செயலில் பங்குபெறும் உணர்வு, ஒரு சின்ன வேலையை சரியாய் விருப்பம் போல செய்து முடிக்கும் நிறைவான நிமிடம்) நேரும் போது காலம் அப்படியே உறைந்து நிற்கும். ஆனால் கனமற்ற அனுபவங்கள் (யாருக்காகவோ அர்த்தமின்றி காத்திருப்பது, திறமைக்கு தொடர்பற்ற வேலையை செய்வது, பிடிக்காத உரையாடலில் பங்கு கொள்வது…) நேரும் போது காலம் விரைந்து கொண்டிருப்பதை மனம் உணர்ந்தபடியே இருக்கும். காலத்தை தடுத்து நிறுத்த ஏங்குவோம். ஆனால் முடியாது. இப்படித் தான் ஒருநாள் வீணாய் போனதாய் உணர்வு ஏற்படுகிறது.
ஆக ஆழமான திருப்தி காலத்துடன் சம்மந்தப்பட்டது. காலம் என்பது நினைவுகளை தீர்மானிக்கிறது. காலம் நம் கட்டுப்பாட்டில் இன்றி விரையும் போது வெறுமையான நினைவுகளே எஞ்சுகின்றன. வெறுமையான நினைவுகள் பலூனுக்குள் காற்று போல. நாம் ஒருநாள் முடியும் போது அனுபவிக்கும் வெறுமை நினைவுகள் இல்லாத ஒரு வறுமை தான்.
வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது நல்ல நினைவுகளை சம்பாதிப்பது மட்டும் தான். இந்த நினைவுகள் தாம் நம்முடைய சுயத்தை மாட்டி தொங்க விடுவதற்கான ஆணி. நம் மனதின் அடித்தளம் இது.
ஆக இறுதியில் இப்படி சுருக்கமாய் வகுத்துக் கொள்கிறேன்:
மகிழ்ச்சி = கட்டுப்பாட்டில் உள்ள காலம் = நினைவுகள்

வெறுமை = கட்டுப்பாட்டில் இல்லாத காலம் = நினைவின்மை 

கருத்துகள்

veera இவ்வாறு கூறியுள்ளார்…
வெறுமைக்கு அருமையான விளக்கம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.