முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெற்றிடத்தை நிரப்பும் தமிழ் எழுத்தாளன்

ஏன் தமிழ் பத்திரிகைகளில் சிறுகதைகள் பிரசுரிக்க இவ்வளவு அலுத்துக் கொள்கிறார்கள் என பிர்தவுஸ் ராஜகுமாரன் ஒரு முகநூல் உரையாடலில் கேட்டிருந்தார். உண்மைதான். கடந்த பத்தாண்டுகளில் இங்கு சிறுகதைகள் குறைவாகவே எழுதப்படுகின்றன. பத்திரிகைகள் அதிகமும் கட்டுரைகளை பிரசுரிக்கவே விரும்புகின்றன. இதனாலேயே சிறுகதையாளர்கள் நாவலுக்கும், கவிஞர்கள் கட்டுரைக்கும் இடம் பெயர்ந்து விட்டார்கள். நம் வரலாற்றிலேயே மிக அதிகமாய் கட்டுரைகள் இப்போது தான் பிரசுரமாகின்றன. இது கட்டுரைகளின் வசந்த காலம்.

 இதை நாம் பத்தொன்பதாம் நூற்றாண்டு, இருபதாம் நூற்றாண்டின் துவக்க கட்டங்களில் இங்கு அச்சாக்கம் அறிமுகமான பெரிய எழுத்து பத்திரிகைகளின் உற்சாகமான பருவத்தோடு ஒப்பிட முடியும். அன்று புதிதாய் எழுதப் படிக்க தெரிந்த ஒரு மக்கள் திரள் உருவானது. அவர்களுக்காக உடனடியாய் தமிழ் பத்திரிகைகள், நாட்டுப்புற பாடல்கள், வம்பு இலக்கியம், பரபரப்பு செய்திகள் தாங்கிய பாடல்கள் சிறு நூல்களாய் வெளியாகி பரவலாய் விற்றன. பின்னர் இந்த பிரசுரங்கள் நிலைப்பெற்று பெருவணிக நிறுவனங்களாகின. இன்று அந்த இடத்தை டி.வி, இணையம், சமூக வலைதளங்கள் எடுத்திருக்கின்றன.
 எப்போதெல்லாம் ஒரு சமூக தேவை உருவாகிறதோ அப்போது அந்த இடத்தை நிரப்ப ஒரு தரப்பினர் தற்காலிகமாய் தோன்றுவார்கள். தமிழில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அமெச்சூர் பெரிய எழுத்து பத்திரிகை பிரசுரகர்த்தாக்களுக்கு ஏற்பட்ட சமூக தேவை போன்ற ஒன்று ரெண்டாயிரத்துக்கு பிறகு இலக்கிய எழுத்தாளனுக்கு ஏற்பட்டது. இணையம் மூலம் தகவல்கள் வந்து கொட்ட துவங்கின. மீடிய பலமடங்கு வளர்ந்து விரிவானது. ஆங்கிலத்தில் பரவலாய் கிடைக்கும் தகவல்களை தொகுத்து செய்திக் கட்டுரைகளாய் எழுத இங்கு ஆட்களின் பற்றாக்குறை ஏற்பட்டது. தமிழில் பத்திரிகையாளர்கள் / ரிப்போர்ட்டர்கள் போதுமான அளவு தகவல் கட்டுரைகள் எழுதுவதில்லை. ஆக, அரசியல், சமூகம், சினிமா, கலை, விளையாட்டு என தகவல் கட்டுரைகள் எழுதும் பணியை இலக்கிய எழுத்தாளர்கள் எடுத்துக் கொண்டார்கள். ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் உலக சினிமா பற்றி ஏகப்பட்ட கட்டுரைகளை நம் எழுத்தாளர்கள் வெளியிட்டார்கள். ஏனென்றால் மக்களுக்கு அன்று உலக சினிமா பற்றி அறியும் ஆர்வம் இருந்தது. பின்னர் மீடியா, சி.டி, கணினி மூலம் உலக சினிமா பரவலாகிய பின் அத்தகைய அறிமுக எழுத்துக்கு தேவையில்லாமல் ஆக, எழுத்தாளர்களும் உலக சினிமா அறிமுகங்களை வெகுவாக குறைத்து விட்டார்கள்.
ஆங்கில மீடியாவில் இத்தகைய கட்டுரைகளை எழுத inhouse எழுத்தாளர்கள் உண்டு. நியு யார்க் டைம்ஸ் பத்திரிகையை உதாரணம் சொல்லலாம். பத்திரிகையாள எழுத்தாளர்கள் அங்கு தனி பிரிவு. அவர்கள் ஆளுக்கு ஐந்து நூல்களாவது பிரசுரித்து இருப்பார்கள். ஆங்கில ஹிந்துவின் பரத்வாஜ் ரங்கனை அந்த வகையில் சேர்க்கலாம்.. ஆனால் தமிழில் அப்படி இல்லை. இங்கு இலக்கிய எழுத்தாளன் அந்த பணியை எடுத்துக் கொள்கிறான்.
ஆனால் இந்த நிலை நீண்ட காலம் தொடராது. எதிர்காலத்தில் தகவல்களை தொகுத்து கட்டுரைகளாக்கும் ரோபோட்டுகள் வந்து விடும். இப்போதே artificial intelligence மூலம் ஆங்கிலத்தில் கட்டுரைகள் உற்பத்தி ஆவதாய் சொல்கிறார்கள். தமிழிலும் எதிர்காலத்தில் தகவல் கட்டுரைகள் மலிவாகும். மேலும் மக்களுக்கு விரைவில் கட்டுரைகள் அலுத்து விடும். அப்போது கதைகளுக்கான தேவை ஏற்படும். கதைகள் அதிகளவில் பிரசுரமாகும். அப்போது எழுத்தாளன் படைப்பூக்கமுள்ள எழுத்துக்கு மீள்வான்.

தமிழில் வெகுஜன பரப்பில் எப்போதும் ஒரு வெற்றிடம் இருக்கிறது. அதை பத்திரிகையாளர்கள் நிரப்புவதில்லை. எழுத்தாளன் லுங்கியை மடித்துக் கட்டி அப்பணியில் இறங்கி விடுகிறான். வெற்றிடம் முழுக்க நிரம்பியதும் அவன் தன் சாய்வுநாற்காலிக்கு திரும்புகிறான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...