முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அட்டைப்பட சர்ச்சை


அட்டைப்படம் ஒரு புத்தகத்தின் தரத்தை மேம்படுத்தும் வாசகனின் கற்பனையை சிறகடிக்க வைக்கும் என்பதாக தமிழில் ஒரு கற்பிதம் உள்ளது. உண்மையில் ஒரு நூலின் பிரதிக்கும் அதன் வடிவமைப்பு, அட்டைப்படம் ஆகியவற்றுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. வெண்முரசு நாவல் வரிசைக்கு சண்முகவேல் அற்புதமான ஓவியங்களை நல்கியிருக்கிறார். அதனால் அந்நாவல்களின் ஆழம் அதிகமாகும் என்றோ வாசகர்கள் அப்படங்களை கொண்டு நாவலை கற்பனை செய்வார்கள் என்றோ நான் நம்பவில்லை. முழுக்க ஜெயமோகனின் எழுத்து வழியாகத் தான் வாசகன் தன் கற்பனை உலகை விரித்துக் கொள்ள முடியும். ஒரு படைப்பு மொழிக்குள் ஆரம்பித்து மொழிக்குள்ளே முடிகிறது. அட்டைப்பட ஓவியம் ஒரு தனி படைப்பு.

 இதுவே என் பார்வை. எனக்கும் பிற எழுத்தாளர்களைப் போல் என் நூல் மிக நளினமாய் கண்கவர் வடிவத்தில் வெளிவர வேண்டும் என தீராத ஆசை உண்டு. ஆனால் அது வெறும் கிளுகிளுப்பு தான் என எனக்குத் தெரியும். ஒரு அடர் இருட்டான அறைக்குள் வந்த பின் எப்படி பேரழி கூட வெறும் உடல் தானோ அது போல் பிரசுரமான பின் ஒரு புத்தகம் வெறும் எழுத்துக்குவியல் மட்டுமே. அதன் உயிர் முழுக்க சொற்களில் இருக்கிறது.
நான் ஒவ்வொரு முறையும் என் நூலை முதல் முறை பார்க்கும் போது அழகாய் ஆடை அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட ஒரு குழந்தையை போலத் தான் கையில் வாங்கிக் கொள்கிறேன். ஆனாலும் எதார்த்தம் எனக்குத் தெரியும். உயிர்மையில் வெளிவந்த என் நூல்களில் “இன்றிரவு நிலவின் கீழ்”, “கிரிக்கெட்டின் மாறும் நிறங்கள்”, “கால்கள்” ஆகியவற்றின் அட்டைப்படங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. பொதுவாக நூல்களின் அட்டை அமைப்பில் மனுஷ்யபுத்திரன் தனி அக்கறை கொள்வார். ஒரு புத்தகத்தின் ஆதாரமான தொனி பிம்பத்தில் வந்து விட வேண்டும் என நினைப்பார். அதே போல் தொலைவில் இருந்து பார்க்க கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்றும். பெரும்பாலான உயிர்மை அட்டைகள் இவ்விசயத்தில் சிறப்பானவை. எனது “கால்கள்” நாவலின் அட்டையில் நோய்மையின் நிறத்தை, ஒரு கனவில் மங்கலாய் தெரியும் ஒற்றைக்காலின் பிம்பத்தை, அவர் வரவழைத்திருப்பார். ”கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்” நாவலுக்கு ராஜேஷ் குமார் த்ரில்லர் பாக்கெட் நாவல்களின் தொனியை கொணர்ந்து ஒரு ரெட்ரோ வடிவத்தில் அட்டையை அமைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். மனுஷ்யபுத்திரனிடம் விவாதித்து ராஜேஷ்குமாரின் சில சாம்பிள் அட்டைப்படங்களையும் அனுப்பினேன். ஆனால் அதற்கு மேல் அவ்விசயத்தில் பங்காற்ற என்னால் இயலவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் எனக்கே அது அபத்தமான ஐடியா எனப் பட அதை மேலும் வலியுறுத்தவில்லை. ஆனாலும் இறுதியில் உயிர்மை வடிவமைத்த அட்டை எனக்கு பிடித்திருந்தது. அது வழக்கமான அட்டை அல்ல. பார்க்கவும் தனித்து தெரிந்தது. மேலும் உயிர்மையில் அட்டைகள் தயாராகும் அவசர கதி எனக்கு தெரியும். குறைவான பணியாளர்களுடன், குறைந்த பட்ச இட வசதியுடன் எப்போதும் நேர நெருக்கடிகளுடன் அங்கு பணிகள் நடக்கும். அந்த சூழலில் இவ்வளவு தரமாய் புத்தகங்களை அவர்கள் கொண்டு வருவதே ஒரு சாதனை என தோன்றும். ஆக, அட்டைப்படம் மறைமுகமாய், கலை நுணுக்கத்துடன் இல்லை எனும் வாதங்கள் நடைமுறை நிலவரத்தை கணக்கில் கொள்ளாதவை. கடந்த முப்பது வருடங்களில் நம் அட்டைப்படங்கள் பயணித்துள்ள விதத்தை கவனித்தாலே உயிர்மை, காலச்சுவடு ஆகியவற்றின் பணி எவ்வளவு சிறப்பானது என புரியும். உயிர்மை அட்டைப்படங்களில் எப்போதும் என் நினைவில் நிற்பது எஸ்,ராவின் “நெடுங்குருதி”யின் அட்டைப்படம். மிக கவித்துவமான தூண்டுதல் அளிக்கும் படம் அது.
நாம் அட்டைப்படங்களை இவ்வளவு சிலாகிக்கும் போதும், விமர்சிக்கும் போதும், அவை முழுக்க வேறொரு பிரதி என மறக்க கூடாது. ஒரு புத்தகம் குறித்த ஒரு அவதானிப்பு என ஒரு அட்டைப்படத்தை பார்த்தாலும் கூட அதை புத்தகத்தின் முன்னுரையுடன் மட்டுமே சேர்க்க இயலும். ஒரு சிறப்பான ஆழமான முன்னுரை ஒரு நாவலுக்கோ கவிதைத்தொகுப்புக்கோ என்னவிதமான ஆழத்தை நல்க முடியும்? நூலை வாசிக்க துவங்கியதும் அவன் முன்னுரையை மறந்து விடுவான். ஒரு புத்தகத்துக்கு வெறும் வெள்ளையாய் ஒரு அட்டை வடிவமைத்தாலே போதும் என்பது என் தரப்பு. அப்படி என்றால் அட்டைப்படங்கள் தேவையில்லையா?
நான் இது குறித்து முன்பே ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்: க்ரியா ராமகிருஷ்ணன் முதல் ஸ்டீவ் ஜாப்ஸ் வரை: அழகியலும்வர்க்கமும்
என் வாதம் இது. கலாபூர்வமான அட்டைப்படம், வடிவமைப்பு எல்லாமே புத்தகத்தை விற்பனைப் பண்டமாக்குவதற்கான ஒரு தந்திரம் மட்டுமே. ஒரு சேலை வாங்கினால் கூடுதலாய் பிளவுஸ் துணி அளிப்பது போல ஒரு நாவலுடன் ஒரு நுட்பமான அழகான அட்டைப்படம் கிடைக்கிறது. அதை ஒரு ஓவியத்துடன் ஒப்பிடலாம். ஒரு புத்தகத்துடன் ஒரு நவீன ஓவியத்தை இணைப்பாக தருகிறார்கள். ஏன்? அதன் விலையை நியாயப்படுத்த! அந்த விலை எழுதப்பட்ட பிரதிக்கானது அல்ல. வடிவமைப்பின் நளினம், கலாச்சார மதிப்பு, அழகு ஆகிய நுகர்வு பொருட்களுக்கானது. ஒரு புத்தகத்தை தன் அலமாரியில் வைக்கையில் அது அழகான அலங்கார பொருள் போல இருக்க வேண்டும் என, அதை கையில் தூக்கி செல்கையில் கௌரவமாய், கலாபூர்வமாய், தன் நுண்ணுணர்வை, பண்பாட்டு உணர்வை காட்டும்படியாய் இருக்க வேண்டும் என அவன் கோருகிறான். அதற்காகத் தான் அவன் ஒரு புத்தகத்துக்கு 350-500 ரூ தர தயாராகிறான். வெறும் சாணித்தாளில் அச்சிட்டு வெள்ளை அட்டையுடன் கொடுத்தால் அவன் வாங்க மாட்டான். வாசித்து ரசிக்க அதுவே போதும் என்றாலும் கூட.
ஒரு படைப்பை பண்டமாக்குவதற்கான ஒரு உபகரணம் மட்டுமே அட்டைப்படம். அட்டைப்படத்துக்காக ஒரு படைப்பை வாசகர்கள் கொண்டாடிய வரலாறு இல்லை. அட்டைப்படத்துக்காக படைப்பை நிராகரித்த வரலாறும் இல்லை. தன் பண்டத்தின் தோற்றம் குறித்து மிதமிஞ்சிய அக்கறை காட்டியவர் ஸ்டீவ் ஜாப்ஸ். பாதி கடித்த ஆப்பிள் லோகோவுக்காக அவர் அல்லோலப்பட்டிருக்கிறார். கணினியின் உள்ளே இருக்கும் போர்டு கூட அழகான நளினமான இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஏனென்றால் ஒரு பண்டம் பயன்பாடு மிக்கதாய் மட்டுமல்ல பார்க்கவும் அழகாய், ஒரு கலாச்சார குறியீடாய் இருக்க வேண்டும் என ஜோப்ஸ் நன்கு அறிந்திருந்தார். ஆனால் ஒரு புத்தகம் என்பது ஐபோன் இல்லை என நாம் உணர வேண்டும்.

அட்டைப்படம் என்பது வியாபாரி கவலைப்பட வேண்டிய விசயம், எழுத்தாளன் அல்ல. போயும் போயும் ஒரு பண்டமாக்கல் உபகரணத்துக்காகவா உறவை முறிப்பீர்கள் போகன்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.