முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சட்டீஷ்வர் புஜாராவும் முயலும்

Image result for alastair cook
கதவை திறக்கலாமா வேண்டாமா?
நடந்து வரும் இங்கிலாந்து-இந்தியா முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியில் இருந்து தப்பிக்க இங்கிலாந்து அணித்தலைவர் கருணை வைத்தால் உண்டு என என் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அலிஸ்டெர் குக்கின் தலைமை அதற்கு செவி சாய்த்துள்ளது. நேற்றும் இன்றும் அவரது தலைமையின் கீழ் இங்கிலாந்து ஒரு தற்காப்பு மனநிலையுடன், வெல்லும் அக்கறையின்றி, ஆக்ரோஷமின்றி ஆடியது. ஒருநாள் நான் என் மனைவியிடம் முயல் கறி வாங்க வா என்றேன். அவள் கடைக்கு சென்று முயலைப் பார்த்தாள். மனம் கருணையில் ததும்பியது. முயலை செல்லப்பிராணியாக வளர்க்க முடிவு செய்து வீட்டுக்கு கொண்டு வந்து விட்டாள். நேற்றைய நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் தலைவர் குக்கின் தலைமை இப்படித் தான் இருந்தது. 

சட்டீஷ்வர் புஜாரா தான் சந்தித்த எல்லா பந்தையும் முன்னங்காலில் ஆடி வந்தார். இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ் சில பவுன்சர்களை வீச பந்து தொடர்ந்து புஜாராவின் தலையில் பட்டது. நல்லவேளை காயமின்றி தப்பித்தார். புஜாராவின் பின்னங்கால் ஸ்டம்புக்கு குறுக்கே செல்ல முன்னங்கால் முழுசாய் முன்னே வந்து பந்தை சந்தித்தது. இதனால் பவுனசர் பந்தை சமாளிக்கும் விதமாய் அவரால் முழுக்க பின்னங்காலுக்கு நகர முடியவில்லை. இது ஒரு சிக்கலான சுய பொறி. இங்கிலாந்து வேகவீச்சாளர்கள் தொடர்ந்து பவுன்சர்கள் வீசி இருந்தால் ஒன்று புஜாரா காயம்பட்டு வெளியேறி இருப்பார் அல்லது அவுட் ஆகி போயிருப்பார். ஆனால் தம் ஆக்ரோஷம் காரணமாய் (பவுன்சர் பட்டு இறந்து போன ஆஸ்திரேலியாவின் ஹியூக்ஸ் போல) புஜாராவுக்கு அசம்பாவிதம் நேரக்கூடாது என்பதிலேயே இங்கிலாந்து அணித்தலைவர் குக் கவனமாய் இருந்தார். அவர் பவுன்சர்களை நிறுத்தினார். புஜாராவை சுலபமாய் சதம் அடிக்க அனுமதித்தார்.
அதே போல நேற்று விஜய் இங்கிலாந்தின் லெக் ஸ்பின்னர் ரஷீதின் கூக்ளியை கணிக்க முடியாமல் திணறினார். வெளியே போகும் பந்தை கூட கூக்ளியாக கருதி கால் பக்கம் ஆடினார். கால் பக்கம் பீல்டர்களை அகற்றி off sideஐ வலுப்படுத்தி இருந்தால் குக் கால் பக்கம் அடிக்க முனைந்து கவர் பகுதிக்கு leading edge கொடுத்து வெளியேறி இருப்பார். ஆனால் ரஷீத் அவ்வப்போது தன் கட்டுப்பாட்டை இழந்து விடுவதால் இந்த வியூகம் வகுக்கவும் குக் தயங்கினார். அவர் மிட் ஆன், லாங் லெக் என கால் பக்கம் பீல்டர்களை நிறுத்தினார். இதனால் ரஷீதால் விஜய் சதம் அடிப்பதை தடுக்க முடியவில்லை.
இன்று, நான்காவது நாள், கோலி ஆட வர வேகவீச்சாளர்கள் வழக்கம் போல் பந்தை வைடாக டிரைவ் செய்யும் நீளத்தில் வீசி கோலியை கவர் டிரைவ் அடிக்க தூண்டினர். அதுவே அவர் பலவீனம். முன்னங்கால் சரியாக நகராததால் அவர் அடிக்கடி ஸ்லிப்பில் எட்ஜ் கொடுத்து வெளியேறுவார். ஆனால் கோலியை இதற்கு முழுக்க தூண்ட off sideஇல் காலி இடங்கள் விட வேண்டும். கவர் டிரைவ் அடித்தால் நான்கு ரன்கள் கிடைக்கும் என சேதியை கோலிக்கு விட வேண்டும். ஆனால் குக்கோ வைடாக பந்தை வீச செய்து off sideஇல் அதிக தடுப்பாளர்களை நிறுத்தி தடுப்பாட்ட களம் அமைத்தார். கிட்டத்தட்ட ஒருநாள் களம் போல் இது இருந்தது. குக் விரும்பியது கோலியை வெளியேற்ற அல்ல கட்டுப்படுத்த. நியுசிலாந்து அணி சமீபத்தில் இந்த வியூகத்தை அழகாக வகுத்து கோலியை டிரைவ் செய்ய வைத்து வெளியேற்றியது. ஆனால் இங்கிலாந்து அணித்தலைவரின் மட்டமான களத்தடுப்பு அமைப்பு காரணமாய் கோலி ஒரு கவர் டிரைவ் கூட ஆடவில்லை. தப்பித்து விட்டார். (ஆனால் கோலி தானாகவே hit wicket மூலம் வெளியேறினது வேறு விசயம்.)

இப்படி இங்கிலாந்தின் மட்டமான தலைமை உபயம் இந்தியா இந்த டெஸ்டில் தப்பிக்க வாய்ப்பு அதிகம். அதையும் மீறி நாம் இன்னும் மட்டமாய் ஆடி தோற்றால் தான் உண்டு. இப்போதைக்கு யார் அதிக மட்டமாய் ஆடுவது என்றுதான் போட்டி!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.